வியாழன், 27 மே, 2021

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் திரு. ககன்தீப் சிங் பேடியிடம் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வழங்கினார்


பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் மற்றும் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு ஆகியோர் தலைமையில் 24.5.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளடங்கிய 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 22 சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வீதம் மொத்தம் 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

அந்த ஆலோசனையின்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அன்று (26.5.2021) தலைமைச் செயலகத்தில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில் பாலாஜி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக