சனி, 29 மே, 2021

இந்திய அரசியலமைப்பு சாசனத்திலேயே கட்டுப்பாடான உரிமைகள் இருக்கிறபோது, சமூக வலைதளங்கள் மட்டும் எப்படி கட்டுப்பாடற்று செயல்பட முடியும்? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

இந்திய அரசியலமைப்பு சாசனத்திலேயே கட்டுப்பாடான உரிமைகள் இருக்கிறபோது, சமூக வலைதளங்கள் மட்டும் எப்படி கட்டுப்பாடற்று செயல்பட முடியும்?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கும் எழுதிய கடிதத்தின்  சுறுக்கம்.   

சுதந்திர இந்தியாவில் இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, ஆயுதமின்றி போராடும் உரிமை, மற்றும் கருத்துகளை பத்திரிக்கை வடிவில் மக்களிடத்தில் எடுத்துச் செல்லக் கூடிய உரிமை போன்றவை இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் ஊர்ஜிதம் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளாகும். ஆனால் அனைத்து விதமான உரிமைகளுக்கும் கட்டுப்பாடுகளுடனான சுதந்திரம் என்பதே எதார்த்தமாகும்.

எந்தவொரு தனி நபரின் புகழைக் கெடுக்கும் வகையில் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, பிரச்சாரம் செய்வதற்கோ; இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிராகச் செயல்படுவதற்கோ; தேசத்தின் நேச நாடுகளுடனான நட்புகளை கெடுக்கும் செயல்களுக்கோ சுதந்திரமும் இல்லை, அனுமதியும் இல்லை. எனவே, இந்த கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்கவே அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் முறையாகப் பதிவு பெற்றுச் செயல்படுகின்றன. கையெழுத்துப் பிரதிகளைத் தவிர மத்திய, மாநில அரசுகளிடம் முறையாகப் பதிவு செய்யாமல் எவ்வித ஊடகமும் செயல்பட முடியாது.

ஆனால் அண்மைக்காலமாகத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு, இணையதளங்கள், முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் வெகுவாக உலகெங்கும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. ஆனால் இவைகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு இருக்கின்றனவா? என்றால், இல்லை. பெரும்பாலும் இவைகள் போலி முகவரிகளிலேயே இயங்குகின்றன. அண்மை காலமாக சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான பல கருத்துக்கள் மின்னல் வேகத்தில் பரப்பப்படுகின்றன. இந்த மோசமான செயலுக்கு ”வைரல்” என்று நாகரீகமாகப் பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் சாதாரணமாக ஒரு எளிய மனிதனின் சொந்த கருத்தை வெளிப்படுத்துவதற்கு உண்டான ஆயுதமாக இவை தெரியலாம். ஆனால் எதார்த்தத்தில் மேற்குறிப்பிட்ட சமூக வலைதளங்கள் பணபலம், அதிகார பலம் கொண்ட ஆதிக்க சக்திகளிடமும், சில விஷக்கிருமிகளிடமும், தீய எண்ணம் கொண்டோரிடமும், சமூக விரோத கும்பல்களிடமும் சிக்கி  அவதூறுகளை மின்னல் வேகத்தில் பரப்புவதற்கு மட்டுமே அதிகமாகப் பயன்பட்டு வருகின்றன. அதில் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிய எவ்வித வழிமுறைகளும் இல்லை.ஒரு தவறான செய்தி எங்கிருந்து ஆரம்பம் ஆயிற்று என்பதைக் கண்டறிவதற்கு முன்னரே அது லட்சக் கணக்காணோரின் பார்வைக்குச் சென்று விடுகிறது.

ஒரு தனி நபரைப் பற்றியோ, ஒரு குழுவைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ, ஒரு கட்சிகளைப் பற்றியோ, ஒரு தேசத்தைப் பற்றியோ எங்கிருந்தோ தன்னுடைய முகங்களை மறைத்துக் கொண்டு எந்தவிதமான உண்மையற்ற அவதூறு செய்திகளையும் பரப்ப முடிகிறது. இதை வளர்ந்து வரும் நாகரீகமான நாட்டில் எப்படி அனுமதிக்க முடியும்? பள்ளிகளில், கல்லூரிகளில், பணி செய்யும் இடங்களில் குழந்தைகள் மற்றும் மகளிருக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த சமூக வலைதளங்கள் மூலமாகத் தான் அதிகமாக அரங்கேறி வருகின்றன. எவரோ ஒருவரின் பெயரில் சமுக வலைதள கணக்குகளைத் துவக்கி யாரோ பயன்படுத்துகிறார்கள். அதன் உண்மையான முகவரியையோ அல்லது மறைந்திருக்கக் கூடிய நபர்கள் யார் என்பதையோ கூட கண்டுபிடிக்க முடிவதில்லை. அச்செய்திகளின் துவக்கத்தையும் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இந்த சமூக வலைதள தவறான செய்திகளால் பாதிக்கப்படக்கூடிய ஒருவர் நீதியைப் பெறுவது எப்படி? யாரிடத்தில் புகார் கொடுப்பது? என்பது கூடத் தெரிவதில்லை. பெரும்பாலும் சமூக வலைதள செய்திகள் ஒருவழி தடமாகவே இருக்கின்றன. மின்னல் வேகத்தில் பரப்பப்படும் செய்திகளுக்கு எதிராக அதே வேகத்தில் மறுப்பு கொடுக்க முடிவதில்லை, இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தியே இன, மத வெறிகள் எளிதாக தூண்டப்படுகின்றன. அது போன்ற செய்திகள் வருகின்ற போது பாதிக்கப்படக் கூடிய ஒருவர் நிவாரணம் பெறக்கூடிய வழிமுறைகளையும், விதிமுறைகளையும் சமூக வலைதள நிறுவனங்கள் ஏற்படுத்தி வைக்கவில்லை.

இந்த சமுக வலைதள நிறுவனங்களுக்கு எவ்விதமான பெரிய சமூக கண்ணோட்டமும் இல்லை. இந்த நாட்டில் யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? தங்களது சமூக வலைதளங்களை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள், அதன் மூலம் தங்களுக்கு எவ்வளவு லாபம் வருகிறது என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள். ஏறக்குறைய 20 ஆண்டு காலமாக இந்தியாவில் இவர்களைப் போன்று பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இலட்சம் கோடிகளில் லாபம் ஈட்டும் இந்நிறுவனங்கள் அவைகள் செயல்படும் நாட்டில் ஒரு குறைதீர்க்கும் அல்லது தொடர்பு அலுவலர்களை கூட நியமிக்கவில்லை.  இந்த சமூக வலைதளங்களால் பாதிப்புக்கு ஆளாவோர் 15,000 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள சிலிக்கன்வேலி அதிகாரிக்கு இ-மெயிலை அனுப்பிவிட்டு பதிலுக்காக வருடக் கணக்கில் காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. இவர்களுடைய எல்லா செயல்பாடுகளும் நேர்மை என்று சொல்ல முடியாது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் தகவல்களையும் துல்லியமாகக் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்கள். தேர்தல் நேரங்களில் அத்தகவல்களை மிகப்பெரிய விலைகளுக்கு விற்று விடுகிறார்கள் அல்லது இந்த அரிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தனித்தோ அல்லது பகாசுர கம்பெனிகளுடன் கூட்டுச்சேர்த்தோ புதிய தொழில்களை ஆரம்பித்து விடுகிறார்கள். மொத்தத்தில் இவர்கள் உருவாக்கித் தரக்கூடிய பிளாட்பாரங்கள் கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்கு சமமானதே.!

அண்டை நாடான சீனா, வட கொரியா மற்றும் பெரும்பாலான அரேபிய நாடுகளில் சமூக வலைதள குப்பைகளை அனுமதிப்பதே இல்லை. இந்தியாவில் இத்தனை ஆண்டுகள் ஏன் அனுமதித்தார்கள்; கட்டுப்பாடில்லாமல் எப்படி  விட்டு வைத்தார்கள் என்பது தெரியவில்லை.

ஒரு வங்கியில் கணக்கு துவங்கக் கூட ஒருவருடைய இருப்பிட சான்றிதழ் தேவைப்படுகிறது. தன்னுடைய சொந்த ஊர் அல்லது மாவட்டத்தை விட்டு வெளியே சென்றால் கூட அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆனால் மின்னல் வேகத்தில் தவறான செய்திகளைப் பரப்பக் கூடிய சமூக வலைதளங்கள் மட்டும் எவ்வித ஆதாரமும் இல்லாமலும், அவர்களுடைய முகவரிகளைப் பெறாமலும்  சரிபார்க்காமல் கணக்குகளைத் துவங்க அனுமதி அளித்தது ஏன்?

ஒரு நாட்டின் எல்லைக்குள் அந்நாட்டின் அனுமதி பெறாமல் வேறு எந்த நாட்டிற்கும் தனி நபரோ? அல்லது வாகனமோ செல்ல முடியாத நிலை இருக்கின்ற போது, இந்த சமூக வலைதளங்கள் மட்டும் இந்தியாவின் எல்லைக்குள் கட்டுப்பாடில்லாமல் நுழைந்தது எப்படி? இது இணையதளங்கள், முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் எதுவாயினும் இனி அவர்கள் இந்திய அரசின் முழு அனுமதியைப் பெற்றே தீர வேண்டும். சமூக வலைதளங்கள் கட்டுப்படுத்தப்படாத பல நாடுகளில் கிளர்ச்சிகள் வாயிலாக ஓரிரு வாரங்களில் ஆட்சி-அதிகாரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் சமூக வலைதளங்கள் மூலம் தான் ஆட்சி-அதிகாரத்திற்கு எதிராக மக்கள் கிளப்பிவிடப்பட்டார்கள். சில நாட்களில் ஆட்சிகளும் தூக்கி எறியப்பட்டு உள்ளன.

சமூக வலைத்தளங்களில் உள்ள ஆபத்தே குறைந்த சொற்களில், நிறைந்த பொய்களை, விரைந்து அனுப்பக் கூடியது தான். தமிழகத்தில் சமூக பரப்புரைகளை நம்பி மட்டுமே சில சம்பவத்திற்கு மக்கள் பெரும்பான்மையாக திரட்டப்பட்டு இருக்கிறார்கள். அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் கூட சமூக வலைதள பொய்யுரைகளால் கட்டியமைக்கப்பட்டதே ஆகும். சமூக வலைத்தளங்களைச் சுதந்திரமான பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை என்ற கோணத்தில் மட்டுமே அணுகக் கூடாது. மாறாக நம்முடைய காலத்தையும், நேரத்தையும் குறைக்கும் அதிநவீன தொழிற்நுட்பம் என்ற கண்ணோட்டத்தில்தான் அணுகவேண்டும்.

ஒரு காலத்தில் ஒரு இடத்தைக் கடக்க நடந்து சென்றோம்; கட்டை வண்டியில் சென்றோம்; ஆறு,ஏரி, கடல்களைக் கடக்கப் படகு, பாய்மரக் கப்பல்களைப் பயன்படுத்தினோம். ஆனால், இப்போது அதி நவீன விமானங்களைப் பயன்படுத்துகிறோம். அதுபோலத் தான் மனிதர்களுடனான தொடர்புகளுக்குக் கடிதங்களை வைத்திருந்தோம்.  தற்போது அதன் உயர்ந்த தொழிற்நுட்பங்கள் தான் சமூக வலைதளங்களாக பரிணமித்துள்ளன.

சமூக வலைதளங்கள் அனைத்தையும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டிய காலம் வந்து விட்டது. ஏனெனில் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரப்பப்படுகிறது போது, அதை முதலில் பரப்பியவர்கள் யார்? என்பதைக் கூட கண்டுபிடிக்க முடிவதில்லை. எனவே, இப்போது மத்திய அரசு விதித்திருக்கக்கூடிய  சமூக வலைதள ஒழுங்கு விதி முறைகள் மிகமிக அவசியமானவை; காலத்திற்கு ஏற்றவை; கண்டிப்பாக நிறைவேற்ற பட வேண்டியவை.

சமூக வலைதள நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கிய  திருத்த விதிமுறைகளை இந்தியத் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒரு செய்தியைப் பரப்பப் படுகின்ற போது அதை முதலில் பரப்பியவர் யார் என்பதைக் கண்டு கொள்வதற்காக வாய்ப்பு;   இந்தியா முழுமைக்கும் இந்த சமூக வலைதளங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை கையாளுவதற்கு ஒரு தலைமை அலுவலர்; ஒரு இணைப்பு அலுவலர்; மாநில, மாவட்ட அளவில் கள உறுப்பினர்களை நியமிக்கப்பட வேண்டும்  ஆகிய விதிமுறைகள் அனைத்தும் மிக மிக அவசியமானவைகளாகும்.

மேலும் வரக்கூடிய காலகட்டங்களில் அனைத்து சமூக வலைதளங்கள் முறையாக ஆதார் எண்ணுடனும், இருப்பிடச் சான்றிதழுடனும் இணைக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்துருவும் வழிகாட்டுதல் முறைகளில் சேர்க்கப்பட வேண்டும். அதேபோல இந்தியாவில் பல ஆண்டுகளாகப் பல லட்சம் கோடிகளில் லாபம் ஈட்டக்கூடிய சமூக வலைதள நிறுவனங்கள் ஜிஎஸ்டி உட்பட வருமான வரியும் செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில், இந்திய அரசியலமைப்பு சாசனத்திலேயே கட்டுப்பாடான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் இருக்கிறபோது, சமூக வலைதளங்கள் மட்டும் எப்படி கட்டுப்பாடற்று செயல்பட முடியும்? எனவே சமூக வலைதள செயல்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும், அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக