திங்கள், 24 மே, 2021

கொரோனா கொள்ளை நோய் தொற்றிலிருந்து தமிழகத்தை காத்திட காலதாமதமின்றி 10 கோடி தடுப்பூசிகளை அளித்திடுக. மத்திய அமைச்சருக்கு டி. ஆர். பாலு வேண்டுகோள்.


தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான திரு. டி. ஆர். பாலு 
அவர்கள், அன்று (23/05/2021) மாலை மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழகத்திற்கு, மாதத்திற்கு 2.5 கோடி தடுப்பூசிகளை தரவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

திரு. டி. ஆர். பாலு அவர்கள் எழுதிய கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் இக்கட்டான நேரத்தில், மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் அளவை உடனடியாக அதிகரிக்க வேண்டுமென தங்களை கடந்த 20/05/2021 அன்று நேரில் சந்தித்து, தமிழக முதல்வர் சார்பில் கேட்டிருந்தேன்.

மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 91.34 இலட்சம் தடுப்பூசிகளில், 72.12 இலட்சம் தடுப்பூசி மருந்துகள் ஏற்கனவே தமிழக மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதிற்கும் மேற்பட்ட 3.65 கோடி தமிழக மக்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டாக வேண்டும். ஒரு நாளைக்கு 1.50 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும், ஐந்து கோடி தமிழக மக்களுக்காவது செலுத்த, பல மாதங்களாகும் நிலையில், மீளாத மனித வள இழப்பிற்கு, தமிழகம் உள்ளாக நேரிடும்.

தமிழகத்தில் ஏற்கனவே 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 35,000க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில், 24 மணி நேரமும், தமிழக முதல்வரின் மேற்பார்வையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் உபகரணங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, தேவையான முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது . இந்த நிலையில் தடுப்பூசி மருந்துகளுக்கான பற்றாக்குறை மட்டும்,மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது.
கேரளாவிற்கு 88.69 இலட்சம் தடுப்பூசிகளும், மத்திய பிரதேசத்திற்கு 1.01 கோடிகள் தடுப்பூசிகளும், ராஜஸ்தானிற்கு 1.61 கோடிகள் தடுப்பூசிகளும், குஜராத்திற்கு 1.62 கோடிகள் தடுப்பூசிகளும், வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மிகப் பெருமளவில் கொள்ளை நோய் தொற்று நிவாரணத்தில், மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் நோய்த் தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில், இப்போதாவது, தமிழகத்திற்கான தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து வழங்க, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள, மிக மிக கவலைக்கிடமான நிலையில், நோய்த் தொற்றின் தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த, 18 வயதிற்கும் மேற்பட்ட தமிழக மக்களுக்கு, ஒரு மாதத்திற்கு 2.5 கோடி தடுப்பூசி மருந்துகள் வீதம், அடுத்த நான்கு மாதங்களுக்கு, 10 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்க, மத்திய அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டுமென்று அவரது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழகத்தினால் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளுக்கு, மத்திய அரசு, 100 சதவீத நிதி உதவியை அளித்து, தமிழக அரசின் தடுப்பூசி இலக்கை எட்ட, மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, தமிழக முதல்வர் திரு. மு. ஸ்டாலின் அவர்களின் க அறிவுறுத்தலின்படி, திரு. டி. ஆர். பாலு, தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக