திங்கள், 31 மே, 2021

இளைஞர்கள் தான் இந்தியாவின் சொத்துகள் ஆவார்கள். ஆனால், புகைப்பழக்கத்தால் அவர்களை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம். - DR. அன்புமணி ராமதாஸ்

 புகைப்பழக்கத்திலிருந்து மீளத் துடிக்கும்

மக்களுக்கு அரசுகள் உதவ வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அளவிட முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில்  சில நன்மைகளையும் விதைத்திருக்கிறது. புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களில் 60 விழுக்காட்டினர் அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கொரோனா காலத்தில் முடிவெடுத்திருப்பதாக ஆய்வுகளில்  தெரியவந்துள்ளது. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற உதவ வேண்டியது அரசுகளின் கடமையாகும்.

புகைப்பழக்கத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் நாள் உலக புகையிலை ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ஏதேனும் ஒரு முழக்கத்தை முன்வைத்து, அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது உலக சுகாதார நிறுவனத்தின் வழக்கமாகும். இந்த ஆண்டு  உலக புகையிலை ஒழிப்பு நாளில், புகையிலைப் பொருட்கள் மற்றும் புகைபிடித்தல் பழக்கத்தை ‘‘கைவிட உறுதியெடுங்கள் (Commit  to Quit)’’ என்ற முழக்கத்தை உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ளது. இது சரியான நேரத்தில் முன்வைக்கப்படும் மிகச்சரியான கொள்கை முழக்கம் ஆகும்.

புகையிலை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 80 லட்சம் பேரும், இந்தியாவில் 12 லட்சம் பேரும் கொல்லப்படுகின்றனர். உலகமெங்கும் 130 கோடிபேர் புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் 10 கோடி பேரையாவது புகையிலைப் பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான இலக்காக உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருக்கிறது. இன்றைய சூழலில் இந்த இலக்கை எட்டுவது மிகவும் எளிதானதும், மிகவும் முக்கியமானதும் ஆகும்.

புகையிலை ஒழிப்பு ஏன் மிகவும் முக்கியமென்றால், புகை பிடிப்பவர்களைத் தான் கொரோனா வைரஸ் மிகவும் அதிகமாக தாக்குகிறது என்பது தான். கொரோனா வைரஸ் நுரையீரலை அதிகம் தாக்குகிறது. அதே நுரையீரல் தான் புகைபிடிக்கும் பழக்கத்தாலும் பாதிக்கப்படுகிறது. புகைபிடிக்காதவர்களை விட, புகை பிடிப்போர் கடுமையாக பாதிக்கப்படவும், உயிரிழக்கவும் 50% கூடுதலாக வாய்ப்பு உண்டு என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடத்திய உலகளாவிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

புகையிலை ஒழிப்பு எந்த வகையில் மிகவும் எளிதானது என்றால், புகை மற்றும் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர்  அப்பழக்கத்திலிருந்து வெளியேறிவிட  வேண்டும் என்ற முடிவுக்கு கொரோனா காலத்தில் வந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருப்பது தான். ஆனால், புகைப்பழக்கம் என்பது போதை என்பதால் அதற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தாலும் கூட, அவர்களால் தானாக மீண்டு வர முடியாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. இத்தகைய சூழலில் புகைப்பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்று நினைப்போருக்கு அதற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டியது தான் மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியவை புகையிலைப் பொருட்களை திணிக்கும் மறைமுக விளம்பரங்களை ஒழித்தல், பொது இடங்களில் புகை பிடிப்பதை முழுவதுமாக தடுத்து நிறுத்துதல், அனைத்து புகையிலைப் பொருட்கள் மீதான வரியை தொடர்ந்து அதிகரித்தல், புகையிலைப் பொருட்கள், சிகரெட் ஆகியவற்றின் விற்பனையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை ஆகும். இவற்றில் புகையிலைப் பொருட்கள் தொடர்பான மறைமுக விளம்பரங்களை தடை செய்வது தான் மிக முக்கியப் பணியாகும்.

இந்தியாவில் புகை பிடிப்பவர்களில் 12 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு மாற்றாக 12 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க வேண்டும்.  அதற்காகத் தான் சிறுவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து மறைமுக விளம்பரங்களை புகையிலை நிறுவனங்கள் செய்கின்றன.புகையிலைப் பொருட்களை விற்கும் கடைகள் மூலமும், கிரிக்கெட் போட்டிகள் வழியாகவும் புகையிலை திணிப்பு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.  திரைப்படங்களிலும் புகையிலை விளம்பரங்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

இளைஞர்கள் தான் இந்தியாவின் சொத்துகள் ஆவார்கள். ஆனால், புகைப்பழக்கத்தால் அவர்களை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம். அதைத் தடுக்கும் நோக்கத்துடன் புகையிலைக்கும், புகைப்பழக்கத்திற்கும் அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கான ஒருங்கிணைந்த சேவையை  (Comprehensive Cessation Service) தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அதன்மூலம்  உலக சுகாதார நிறுவனத்தின் ‘‘கைவிட உறுதியெடுங்கள்’’ முழக்கத்தை நிறைவேற்ற உதவ வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக