சனி, 29 மே, 2021

தமிழ்நாட்டிற்கும் - ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அரும்பணியாற்றிய திரு. காளியண்ணக் கவுண்டர் அவர்களின் மறைவு தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பேரிழப்பு.- மு.க.ஸ்டாலின்



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின்
இரங்கல் செய்தி

இளம் வயதில் இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்தவரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் பழம்பெரும் தலைவருமான திருச்செங்கோடு திரு. டி.எம். காளியண்ண கவுண்டர் அவர்கள் தனது 101-ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தியறிந்து ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை லயோலா கல்லூரி வாழ்க்கையின் போதே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவர் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களுடன் வார்தா ஆசிரமத்திற்குச் சென்று 12 நாட்கள் தங்கியிருந்தவர். மகாத்மா காந்தி அவர்களின் கொள்கைகளால் கவரப்பட்டு அவரது அறிவுரையின் பேரில் பச்சையப்பன் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த அவர், தன்னை ஒரு காந்தியவாதியாக மாற்றிக் கொண்டு எளிமையின் இலக்கணமாக இறுதிவரை வாழ்ந்தவர். மக்களாட்சி மாண்புகளின் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்த அவர் கஸ்தூரிப்பட்டி ஜமீன்தாராக அழைக்கப்பட்ட போதும் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்திற்கு சட்டமன்றத்தில் ஆதரவளித்து வாக்களித்து, ஜமீன் முறை ஒழிப்பிற்குத் தனது முழு ஒத்துழைப்பை அளித்த மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட அவர் தமிழக மேலவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் இருந்து மக்களுக்குச் சேவை புரிந்தவர். 

மக்களாட்சித் தத்துவத்தின் மீது மாறாப் பற்றும் - பாசமும் வைத்திருந்த, தனது நூற்றாண்டு வாழ்வில் மக்கள் தொண்டே என் பணி என்று ஒன்றுபட்ட சென்னை மாகாணத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் - ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அரும்பணியாற்றிய திரு. காளியண்ணக் கவுண்டர் அவர்களின் மறைவு தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் இயக்கத் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக