திங்கள், 24 மே, 2021

முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் அன்று (23-5-2021) வரை மொத்தமாக 181 கோடி ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது.



பதவியேற்ற முதல் நாள் முதல், போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்புப் பணிகளை முடுக்கிவிட்டு, மக்களின் உயிர்களைக் காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று ( 11-5-2021 ) அன்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

அவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.

இன்று (23-5-2021) வரை மொத்தமாக 181 கோடி ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளையேற்று, கொரோனா மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மனமுவந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள தொகையிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்கள்.

இதனையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 இலட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, இந்த ஒரு வார காலத்தில் நன்கொடையாளர்கள் அனைவரும் நேரில் வந்து தன்னிடம் நன்கொடை அளிப்பதை தவிர்க்குமாறும், மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண (https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html) நிதிக்கு இந்த இணைய வழியில் நன்கொடைகளை தொடர்ந்து அளிக்குமாறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக