வியாழன், 27 மே, 2021

"கடந்த 2014,2016, மற்றும் 2021 தேர்தலில் உங்களுடைய வாக்குகள் எங்களுக்கு விழவில்லை" என்றதோடு நீங்கள் எங்களுக்கு அளித்த வாக்குகள் 50, பாஜகவுக்கு 300 என்றெல்லாம் பேசியிருப்பது அப்பட்டமான மிரட்டல். - நாராயணன் திருப்பதி


 ஹிந்து அறநிலைய துறை  அமைச்சர்  சேகர் பாபு அவர்கள் துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில், வட இந்தியர்கள் அதிகமுள்ள அந்த பகுதியில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக வளர்ந்ததற்கு காரணம் பாஜக அல்ல, திராவிட கட்சிகள் தான்  என்றும், பாஜக விற்கு தான் அவர்கள் வாக்களிக்கிறார்கள் என்றும், "கடந்த 2014,2016, மற்றும் 2021 தேர்தலில் உங்களுடைய வாக்குகள் எங்களுக்கு விழவில்லை" என்றதோடு நீங்கள் எங்களுக்கு அளித்த வாக்குகள் 50, பாஜகவுக்கு 300 என்றெல்லாம்  பேசியிருப்பது அப்பட்டமான மிரட்டல். 

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் "அவர்கள் நமக்கு வாக்களிப்பதில்லை, அவர்களுக்கு ஏன் விழுந்து விழுந்து பாடுபடுகிறீர்கள்?"என்று கேட்டார் என்று குறிப்பிட்டு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது அராஜகத்தின் உச்சக்கட்டம், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரிவினை மனப்பான்மையோடு பேசியதாக ஒரு அமைச்சர் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படி தான் பேசியது உண்மையா என்பதை திரு.தயாநிதி மாறன் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர், மாநிலத்தின் அமைச்சர், தான் அனைவருக்கும் பொதுவானவர் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி பொறுப்பேற்று கொண்டிருப்பவர், ஒரு பொது விழாவில், அந்த தொகுதி மக்களை வட இந்தியர்கள் என்று பிரித்து பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், அவர்கள் தி மு க விற்கு வாக்களிக்காததை சுட்டி காட்டி, 

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" 

என்ற குறளை மேற்கோள் காட்டி பேசியிருப்பது வாக்களித்தவர்களின் ஜனநாயக உரிமையை கேள்விக்குறியாக்கும் செயல். இந்த பேச்சு,  தாங்கள் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற வெளிப்படையான மிரட்டலே. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அமைச்சர் எடுத்துக்கொண்ட பதவி பிராமணத்திற்கு எதிரான செயலே இது. சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் காழ்புணர்ச்சியின் வெளிப்பட்டால், துறைமுகம் தொகுதி மக்கள் இனி அச்சத்தோடு தான் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

அறநிலைய துறை அமைச்சரின் அறமற்ற இந்த செயலை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டிக்கவேண்டும். அறநிலைய துறை அமைச்சர் திரு.சேகர் பாபு மன்னிப்பு கேட்க வேண்டும். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக