ஞாயிறு, 30 மே, 2021

இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மக்களுக்கும் கொவிட் தடுப்பு மருந்து கிடைப்பதற்காக, கொவின் தளத்தை மத்திய அரசு உருவாக்கியது.


இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மக்களுக்கும் கொவிட் தடுப்பு மருந்து கிடைப்பதற்காக, கொவின் தளத்தை மத்திய அரசு உருவாக்கியது.

கொவின் தளம் டிஜிட்டல் பிரிவினையை உருவாக்குவதாகவும், சில பிரிவு மக்களுக்கு மட்டுமே பயன்படுவதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகள் தவறானவை மற்றும் உண்மையை முழுவதுமாக வெளிப்படுத்தாதவை ஆகும்.

இது குறித்து சரியான தகவல்களை தெரிவித்துள்ள கொவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் தரவு மேலாண்மைக்கான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் ஆர் எஸ் ஷர்மா, தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் தொழில்நுட்ப முதுகெலும்பாக கொவின் செயல்படுவதாக கூறியுள்ளார்.

அங்கீகாரம் அளிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் விநியோகம், தடுப்பு மருந்து வழங்கும் மையங்களின் மேலாண்மை, தடுப்பூசிக்கான பதிவு, சான்றிதழ் உள்ளிட்ட ஒட்டுமொத்த மதிப்பு சங்கிலியும் கொவின் தளத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

கொவின் தளத்தை குறை கூறுபவர்களில் சிலர், நாட்டின் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் அளவு மற்றும் அதிலுள்ள சவால்கள் குறித்து முழுவதும் அறிந்திருக்கவில்லை.

1.37 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நாட்டில், 167 மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது எட்டில் ஒரு இந்தியருக்கு (12.21%) தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இத்தனை தகவல்களும் உடனுக்குடன், மாவட்ட வாரியாக கொவின் தளத்தில் பதிவேற்றப்பட்டு அனைவரின் பார்வைக்கும் கிடைக்கிறது.

எதிர்காலத்தையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு கொவின் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலுவான பாதுகாப்பு பரிசோதனைகளை கொவின் தளம் கடந்து வந்துள்ளது. இது வரை அதன் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை.

நமது முயற்சிகளை பார்த்து, அதிக மக்கள் தொகை கொண்ட ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா போன்றவை, அவர்களது தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக நமது ஆதரவை கோரியுள்ளன.

கொவின் தளத்தை குறைகூறுவோர் அதற்கு மாற்றாக எந்த தீர்வையும் முன்மொழியவில்லை. இவ்வாறான விமர்சனம் முயற்சிகளை சிறுமைப்படுத்துவதோடு, முன்னேற்றத்திற்கும் வழிவகுக்காது. அனைவருக்கும் தடுப்பு மருந்து சென்றடைவதற்கான தொழில்நுட்ப முதுகெலும்பாக கொவின் தளம் விளங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக