வியாழன், 27 மே, 2021

தமிழகத்தில் தினமும் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற உயிர்களைப் பறி கொடுப்பது என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

 வைரஸ் ஒன்று, சிகிச்சை இரண்டு, மூன்றா?

கரோனா இறப்பு விகிதங்களைத் தடுக்க முறையான சிகிச்சை வழிகாட்டுதல்  வேண்டும்!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரையிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை தினமும் 36,000 என்றிருந்தது; உயிரிழப்புகள் 500-ஐ தொட்டிருந்தது. ஆனால், இந்த வாரத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்தும், கோவை உள்ளிட்ட பல புறநகர்களிலும், கிராமங்களிலும் அதிகரித்து வருகிறது. தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மிக மிகக் கவலை அளிக்கிறது.  அதுவும் பன்னெடுங்காலமாக வலுவான மருத்துவ கட்டமைப்பு கொண்ட தமிழகத்தில் தினமும் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற உயிர்களைப் பறி கொடுப்பது என்பதை  எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

கரோனாவைக் கட்டுப்படுத்த விஞ்ஞான ரீதியாக Tracking, Tracing, Testing மற்றும் Treating என்ற வழிமுறைகளைத் துவக்கக் காலத்திலேயே முறையாகக் கடைப்பிடிக்கத் தவறியதால், இப்போது அது சமூக தொற்று அளவிற்குப் பரிணமித்துள்ளது. படுக்கை வசதிகளும், ஆக்ஸிஜன், உயிர்காப்பு மருந்துகளும் இல்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் திணறுகின்றன. கரோனாவை கட்டுப்படுத்துவதற்குக் கையாள வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் முறையாக அமலாக்காமல், ஊரடங்கு என்ற ஒரே ஒரு ஆயுதத்தை மட்டுமே அரசு பயன்படுத்துகிறது. கடந்த காலத்தில் உலகத்தை ஆட்டி படைத்த பல பெருந்தொற்று நோய்கள் எப்படி உருவாகியது? எப்படிப் பரவியது என்று கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே குறிப்பிட்ட அளவிற்குப் பேரழிவை உண்டாக்கி விட்டுத் தானாகவே குறைந்து போய் இருக்கின்றன. அதற்கு இந்தியாவில் தோன்றிய கரோனா முதல் அலை கூட உதாரணம் தான். 2020-ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மெல்ல மெல்லத் தொடங்கி ஜூன், ஜூலை மாதங்களில் உச்சத்தைத் தொட்டு, 2021-ஜனவரியில் தானாகக் குறையத் தொடங்கியது. இப்பொழுது உருவாகியுள்ள இரண்டாவது அலைக்கும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனில், ஒரு பேரழிவை உண்டாக்கி விட்டு தனாகக் கூட குறைந்து போகலாம்.

எனவே, இரண்டாவது அலையையோ, மூன்றாவது அலையையோ, நான்காவது அலையையோ முழுமையாகத் தடுக்கக்கூடிய தடுப்பூசி போன்ற ஆயுதம் வேறு ஏதும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராத நிலையில் பெருந்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் விலைமதிப்பற்ற உயிரிழப்புகளை நிச்சயம் தடுத்திட முடியும். ஒரு காலத்தில் பெரும் தொற்றுகளின் தோற்றுவாய் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தமையால் அவை மர்மக் காய்ச்சல், மர்ம வியாதி என்ற அளவில் மட்டுமே பார்க்கப்பட்டது. இப்போது அப்படி அல்ல, விஞ்ஞானத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக அவை வைரஸா? பூஞ்சையா? பாக்டீரியாவா? என உடனடியாக கண்டறிய முடிகிறது. அதுவும் கடந்த ஒன்றரை வருடத்தில் அந்த நோயின் பெரும்பாலான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இந்த பெரும் தொற்றின் அறிகுறி என்ன? என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடிகின்ற போது, அந்த தொற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்தால் 99.7 சதவீதம் பேரைக் காப்பாற்ற முடியுமென இருக்கின்றபோது இந்த கரோனா பெருந்தொற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் கடந்த ஒன்றரை வருடத்தில் போதிய அனுபவமும், நிபுணத்துவமும் பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய பொது மருத்துவர் மற்றும் நுரையீரல், இதயம், சிறுநீரக நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவின்  ஆலோசனையின் படி ஒரு சிகிச்சை வழிகாட்டுதல் முறைகளை உருவாக்கப்படாததே பெரும் உயிரிழப்புகளுக்குக் காரணம் எனத் தெரிகிறது.

         தினமும் நோயாளிகளை எதிர்கொள்ளாத மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் குழுக்களின் ஆலோசனைகளை வைத்து கொடிய  கரோனா உயிரிழப்புகளை எப்படித் தடுக்க முடியும்? ஒன்றரை வருடத்திற்கு முன்பு, கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் ஒரு சில தனியார்  மருத்துவனைகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு இருந்த கரோனாவின் தாக்கம் என்பது வேறு, இந்த ஆண்டு  உள்ள கரோனாவின் தாக்கம் என்பது வேறு. கடந்த முறை கரோனா தலைப்பாகையை மட்டுமே குறிவைத்தது. இந்த ஆண்டு தலையைக் குறிவைக்கிறது. அதாவது கடந்த முறை வெளிப்படையாகத் தும்மல், இருமல், காய்ச்சல், மூச்சு விடத் திணறல் என்றிருந்த அறிகுறிகள் இப்போது அதிகம் தென்படுவதில்லை. இரண்டாவது அலையில் நுரையீரலே நேரடியான தாக்குதலுக்கு  ஆளாகிறது. RTPcr சோதனையில் நெகட்டிவாக இருந்தாலும் கூட, CT scan இல் 20-30 சதவிகித பாதிப்பைக் காட்டுகிறது. பல பேர் மருத்துவமனைக்கு வருகின்ற போது 50% நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் மூச்சுத் திணறலுடன் வருகிறார்கள். நோய் முற்றிய நிலையில் வரக்கூடிய பலர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைகளில் உயிரிழக்கிறார்கள். எனவே, இப்போது கரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள் மிக அதிக அளவில் உயிரிழப்பதைத் தடுப்பது எப்படி என்று ஆராய்வதுதான் அரசின் இன்றைய மிக மிக முக்கிய கவனமாக இருக்க வேண்டும்.  அதை அரசு கவனிக்கத் தவறி விட்டதாகவே கருதுகிறேன். கரோனா குறித்து அதிகாரிகள் தரும் புள்ளி விவரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு அரசு திருப்தி அடைந்துவிடக்கூடாது. ஏனெனில் பெரும்பாலும் கரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் எளிதாக மறைக்கவும், மறக்கவும் படுகின்றன.

”நியூயார்க் டைம்ஸ்” என்ற ஆங்கிலப் பத்திரிக்கை இந்தியாவில் கரோனாவால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து ஒரு புள்ளி விபரத்தை கொடுத்திருக்கிறது. மே மாதம் 24 ஆம் தேதி வரையிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் 26.9 மில்லியன் என்றும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,07,231 என்றும் பதிவிடப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டோர் 404.2 மில்லியன் என்றும்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தைத் தாண்டியிருக்கும் என்றும்; இது இரண்டாவது அலையின் முடிவிலோ அல்லது நான்காவது அலையின் தொடக்கத்திலோ பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  539 மில்லியனாக இருக்கும் என்றும்,  இன்னும் கூட மோசமான நிலைக்குச் சென்றால் 42 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலைக்குக் கூட செல்லும் எனவும் சுட்டிக்காட்டுகிறது. இதுவரை கரோனாவால் 0.15 என்றிருந்த இறப்பு விகிதம் 0.6 சதவிகிதமாக நான்கு மடங்கு உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே ஒரு பக்கம் முக கவசம், தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும், இன்னொரு பக்கம் நோய் வாய்ப்பட்டோருக்கு முறையான சிகிச்சை முறைகளும் மிக மிக முக்கியமானதாகும்.

“A Stich in Time, Saves-Nine” என்பதற்கிணங்க உரிய காலத்தில் முறையான பரிசோதனைகளும், நோய்வாய்ப்பட்ட 8 நாட்களுக்குள்ளான முறையான சிகிச்சைகளும் எண்ணற்றோரின் உயிரைப் பாதுகாக்கும்.  இப்போது இந்த நோய் கிராம அளவிலும் பரவி விட்ட நிலையில், சில அறிகுறிகள் தென்பட்டால் கூட அதை உதாசீனப்படுத்துவது; சுயமாகவே சிகிச்சை அளிக்க முயற்சி செய்வது; பரிசோதனைக்குச் சென்ற பிறகு, 3-4 நாட்கள் கழித்து முடிவுகள் கிடைப்பது; இதையும் தாண்டி ஆரம்பக் கட்ட மருத்துவமனைகளுக்குச் செல்கின்றபோது முறையான சிகிச்சை வழிகாட்டுதல் இல்லாதது போன்ற காரணங்களாலும், Remdesivir, Ivermectin, Steroids மற்றும்  இரத்த உறைவை தடுக்கும் மருந்துகள் (caprine)  எப்போது கொடுக்க வேண்டும் என்ற தெளிவு இல்லாமையாலும்; குணப்படுத்தக்கூடிய பலர் கூட குணப்படுத்த முடியாத முற்றிய நிலையில் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

அவர்களின் நோய் தொற்றிய நாளை கணக்கிட்டால் 10 தினங்களுக்கு மேல் ஆகி விடுகிறது. அப்போது பாதிக்கப்பட்டோர் உடம்பில் வைரஸ் இருக்காது. உடலின் செல்களில் ஊடுருவிய வைரஸ்களால் (cytocine storm) உண்டான பாதிப்புகள் தான் மிக அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் ஆண்டி வைரல் மருந்துகள் வேலை செய்யாத நிலை ஏற்படும். எனவே, பாதிக்கப்பட்டோர் அபாயகரமான கட்டத்தை அடைந்து விடுகிறார்கள். அதற்குக் காரணம் ”Co Morbidity” என்றழைக்கப்படும் இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, சிறுநீரக பாதிப்பு என எளிதாகச் சொல்லி தப்பித்து விடுகிறோம். ஆனால் ”Co Morbidity”  கரோனா உயிரிழப்புக்களின் காரணங்களில் ஓரிரு சதவிகிதம் தான். மிகவும் முக்கியமான காரணம் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததே. கரோனா சிகிச்சை அளிப்பதில் முதல் 1-5 நாட்களுக்கு எவ்விதமான சிகிச்சை? 5-8 நாட்களுக்கு எவ்விதமான சிகிச்சை? 8-14 நாட்களுக்கு எவ்விதமான சிகிச்சை? என்பது இதுவரையிலும் முறையாக வரையறுக்கப்படவில்லை. நடைமுறையில் பலவிதமான புற்று நோய்களுக்கு வரையறுக்கப்பட்ட சிகிச்சை முறைகள் உண்டு. அதேபால காரோனா தொற்றின் பாதிப்புகள் எந்தெந்த காலகட்டத்தில் எவ்வாறு உள்ளது என்பது கண்டறியப்பட்டு விட்டன. எனவே, சிகிச்சை முறைகளை வரையறை செய்வது ஒன்றும் கடினமானது அல்ல. கரோனா வைரஸ் நோய் ஒன்றாகவும், அதற்குச் சிகிச்சை முறைகள் பலவாகவும் இருக்க முடியாது.

கிராமத்தில் ஒரு விதமாகவும், சிறு நகரங்களில் இன்னொரு விதமாகவும், பெரு நகரங்களில் வேறு விதமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ஒரு விதமாகவும் இடத்து இடம் மாறுபட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்று வரையிலும்  RTPcr சோதனைகள் முடிவுகள் அறிவிப்பதில் கூட நாட்கள் வரையறை செய்யப்படுவதில்லை. அதிலும் தேவையற்ற கால தாமதம்; CT scan மற்றும் இரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பல பரிசோதனைகள் குறித்து தேவையற்ற சந்தேகங்களும் கிளப்பப்பட்டிருக்கிறது.

எனவே, இதுபோன்று பல்வேறு காரணங்களால் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா உயிரிழப்புகளைத் தடுத்திட தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனுபவமிக்க பொது மருத்துவர்கள்; இதய, சிறுநீரக, நுரையீரல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறை பேராசிரியர்கள்  அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றை உடனடியாக உருவாக்கி, அந்த குழுவின் மூலம் கரோனா சிகிச்சை முறைகள் (Corona Treatment Protocol) மற்றும் செய்யப்பட வேண்டிய பரிசோதனை முறைகளை வரையறை செய்திடவும், அந்த வழிமுறைகளை (Guidance) அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் கையாண்டு கரோனா உயிரிழப்புகளைத் தடுத்திட வேண்டுமெனவும்; அதேபோல சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி சிகிச்சை முறைகளில் பலன் இருக்கும் பட்சத்தில், அவற்றை அலோபதி சிகிச்சையுடன் ஒருங்கிணைப்பது குறித்து முறையான வழிகாட்டுதலையும் வரையறை  செய்ய வேண்டுமென  கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக