புதன், 26 மே, 2021

முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.- V. செந்தில்பாலாஜி

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்   அவர்கள் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது!

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு.

சேலம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுப் பரவலை குறைக்கவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய தரமான சிகிச்சையளிக்கவும், தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது ஆகிய மூன்று நிலைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

இந்தப் பணிகளை மேலும் விரைவுபடுத்திடும் வகையில், 20 ஊராட்சி ஒன்றியங்கள், நான்கு நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டலங்கள் என மேலும் கூடுதலாக 32 கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா தொற்றுப் பரவலை பூஜ்ஜியமாக கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1045 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன. இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு அதற்கான அடிப்படை பரிசோதனைகள் நடந்து முடிந்துள்ளன. இந்த சிகிச்சை மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதே வளாகத்தில் மேலும் 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியதாக அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த மையம் மூலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு உயரிய தரமான சிகிச்சை அளிப்பது உறுதியளிக்கப்படும். அரசு சார்ந்த ஆக்சிஜன் படுக்கை வசதி அதிகரிக்கப்பட்டு வருவதால், தனியார் மருத்துவமனைகளில் இடநெருக்கடி குறைந்து அவர்களுக்கான ஆக்சிஜன் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.
 
தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களுக்கான கட்டணத்தை பயன்பாட்டிற்கு மட்டும் கட்டினால் போதுமானது. கூடுதலாக மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தங்களுடைய மின்சார ரீடிங் அளவீடு எவ்வளவு என்பதை அவர்கள் புகைப்படம் எடுத்து வைத்து கொள்ளலாம். இதில் எந்தக் குழப்பமும் இல்லை.
 
முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண விவரங்களை, அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தங்களுடைய மருத்துவமனைகளின் முன்பு தெளிவாக குறிப்பிட்டு விளம்பர பலகை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரிரு நாட்களில் இந்த விளம்பர பலகை அமைக்கப்பட்டு விடும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி வசூலிப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக