ஞாயிறு, 23 மே, 2021

இலவச ‘‘மின்னணு-நீதிமன்றங்கள் சேவை கைபேசி செயலி’’-க்கான கையேட்டை தமிழ் உட்பட 14 மொழிகளில் வெளியிட்டுள்ளது உச்சநீதிமன்றத்தின் மின்னணு-குழு

 மக்கள் மைய சேவைக்கு, இலவச ‘‘மின்னணு-நீதிமன்றங்கள் சேவை கைபேசி செயலி’’-க்கான கையேட்டை தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், காசி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய 14 மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் மின்னணுக் குழு வெளியிட்டுள்ளது.

வழக்குதொடுப்பவர்கள்,  மக்கள், வழக்கறிஞர்கள்,  சட்ட நிறுவனங்கள், காவல்துறை, அரசு நிறுவனங்கள், வழக்கு தொடுக்கும் இதர நிறுவனங்கள் நலனுக்காக  உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழுவால்,  ஏற்கனவே வெளியிடப்பட்ட ‘‘மின்னணு-நீதிமன்றங்கள் சேவை கைபேசி செயலி’’ இதுவரை 57 லட்சம் பதிவிறக்கங்களை கடந்துள்ளது. 

இந்த கைபேசி செயலி மற்றும் அதன் கையேட்டை ஆங்கிலம் மற்றும் மாநில  மொழிகளில்  உச்சநீதிமன்றத்தின் மின்னணு-குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://ecommitteesci.gov.in/service/ecourts-services-mobile-application/ - லிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்த கையேடு பற்றி விளக்கியுள்ள, உச்சநீதிமன்ற நீதிபதியும், மின்னணு-குழுவின் தலைவருமான டாக்டர் நீதிபதி தனன்ஜெயா ஒய் சந்திராசூட், இந்த மக்கள் மைய இலவச கைபேசி செயலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதன் பயன்பாட்டை  சுட்டிக்காட்டியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்,  ‘‘ சட்டத்துறையில் டிஜிட்டல் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வதில் உச்சநீதிமன்றத்தின் மின்னணு-குழு முன்னணியில் உள்ளது. கடந்த ஓராண்டில்,   ஊரடங்கு மற்றும் மக்கள் சுகாதார நலனை முன்னிட்டு, அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மூடப்பட்டதன் காரணமாக,  வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கு தொடுப்பவர்கள் ஆகியோரை, இந்த கொரோனா ஹைடெக் தொழில்நுட்பத்துக்கு மாற வைத்துள்ளது.

தொலை தூரத்தில் இருந்து பணியாற்றுவது, டிஜிட்டல் பணியிடங்கள் மற்றும் மின்னணு வழக்கு  மேலாண்மை ஆகியவை ஒருங்கிணைந்து சட்டத் தொழில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை காட்டியுள்ளது. இடைக்கால நடவடிக்கையாக மட்டும் இல்லாமால், சட்ட அமைப்பை அதிக திறம்படவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், அணுகக் கூடியதாகவும், சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்து நிலைக்கக்கூடிய வகையிலும் நவீன தொழில்நுட்பத்துக்கு மாறும் அரிய வாய்ப்பை இந்த கொரோனா தொற்று நமக்கு வழங்கியுள்ளது.

இந்த நோக்கில்,  இந்த மின்னணு- நீதிமன்றங்கள் சேவை கைபேசி செயலி’’ ஒரு முக்கியமான நடவடிக்கை. இந்த செயலி மூலமாக மின்னணு நீதிமன்ற சேவைகளை, பல வழக்கறிஞர்கள், வழக்கு தொடுப்பவர்கள் ஏற்கனவே பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த செயலி 57 லட்சம் பதிவிறக்கங்களை கண்டுள்ளது. வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், நமது சட்ட  அமைப்பு மேம்பட இந்த செயலி வழி வகுக்கும் ’’ என்றார்.

நீதித்துறை செயலாளர் திரு பருண் மித்ரா கூறுகையில், ‘‘ இந்த பலபரிமாண முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக, மின்னணு-நீதிமன்றங்கள் சேவைகள் கைப்பேசி செயலி, பயனுள்ள  மின்னணு வழக்கு மேலாண்மை கருவியாக (இசிஎம்டி) பாராட்டப்படுகிறது. இதன் மூலம் வழக்கு சம்பந்தமான தகவல்கள்,  ஆவணத்தை தொகுப்பது, தேதி குறிப்பது, வழக்கு நிலவரத்தை கண்காணிப்பது, தேவையானவற்றை பின்பற்றுவது போன்ற செயல்களை  ஒரு வழக்கறிஞரால் திறம்பட கையாள முடிகிறது.

இந்த செயலியை, 24 மணி நேரமும் செலவின்றி எங்கிருந்தும் பயன்படுத்த முடியும்’’ என்றார்.

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியின் கையேடு, அனைத்து அம்சங்களையும் சாதாரண மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ‘ஸ்கிரீன்-ஷாட்’ படங்களுடன் விளக்குகிறது.  இந்த செயலியை பயன்படுத்தி ஒருவர்,  வழக்கு எண்கள் மூலம் வழக்குகளின் முழு விவரங்களையும் அறிந்துக் கொள்ள  முடியும். மின்னணு-நீதிமன்றங்கள் சேவைகள் அனைத்தும், இந்த செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக