வெள்ளி, 21 மே, 2021

டவ்-தே புயலில் காணாமல் போன நாகப்பட்டின மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை மீட்கும் பணியை விரைவுபடுத்தக்கோரி மத்திய அரசுக்கு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் கடிதம்


நாகப்பட்டினம் மாவட்ட மீன்பிடி விசைப்படகு IND-TN-06-MM- 5517 கடலில் மூழ்கியது - காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்பாக

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் 11.05.2021 அன்று அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என தகவல் தெரிவித்தது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவலையும் அதன் பின்னர் உருவாக உள்ள டவ் - தே புயல் தொடர்பாக வானிலை முன்னெச்சரிக்கை செய்திகளை மீனவர்களுக்கு தெரிவித்து 13.05.2021 முதல் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீன்பிடி படகுகளை உடனே கரைக்கு திரும்பிடவும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக அரசு உயர் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள் அரசு மேற்கொண்ட ஒருங்கிணைந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

காரணமாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 232 படகுகள், இராமநாதபுரத்தை சேர்ந்த 12 படகுகள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 3 படகுகள் சேர்த்து மொத்தம் 247 படகுகளில் 246 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 3 மீன்பிடி விசைப்படகுகள் கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றதாகவும், இதில் இரண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் மீனவர்கள் இலட்சத்தீவு மீன்வளத்துறை உதவியுடன் பித்ரா தீவில் பாதுகாப்பாக கரைதிரும்பியதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றது.

மற்றொரு படகான IND-TN-06-MM- 5517 என்ற பதிவெண் கொண்ட படகு இலட்சத்தீவிற்கு அருகே கடலில் மூழ்கியதாகவும் அதிலுள்ள ஒன்பது மீனவர்களான மணிகண்டன் த/பெ இடும்பன் (21), இடும்பன் த/பெ சின்னையன் (60), மணிவேல் த/பெ இடும்பன் (27), தினேஷ் த/பெ பாலு (32) பிரவீன் குமார் த/பெ கனகராஜ் (34) இளஞ்செழியன் த/பெ சந்திரகாசி (36), கணேசமூர்த்தி த/பெ வடமாலை (35), முருகப்பா த/பெ சின்னதுரை (40), முகமது உசேன் த/பெ தாஜிதீன் (35) ஆகியோர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது.

காணாமல் போன 9 மீனவர்களை தேடுதல் மற்றும் மீட்புப்பணி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து மூழ்கிய படகு மற்றும் 9 மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்திய கடலோர காவற்படை மற்றும் இலட்சத்தீவு நிர்வாகியின் வழியாகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. மீட்புப்பணியில் இந்திய கடலோர காவற்படையின் கப்பல் “விக்ரம்" மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் இலட்சத்தீவு நிர்வாகியின் ஒரு ஹெலிகாப்டரும் காணாமல் போன மீனவர்களை தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மாண்புமிகு மீன்வளம் - மீனவர்நலத்துறை மற்றும் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள் 17.05.2021 அன்று காணாமல் போன 9 மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து தமிழக அரசு காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கடலில் மூழ்கிய "முருகன் துணை" பெயர்கொண்ட திரு.மணிகண்டன், என்பவரது மீன்பிடி படகுடன் ஒன்றாக சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 2 மீன்பிடி விசைப்படகுகளில் சென்ற 23 மீனவர்களும் காணாமல் போன 9 மீனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன 9 மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல்படையின் கப்பலான “விக்ரம்" மூலமும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக