வியாழன், 20 மே, 2021

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்திட, பெருமளவில் பங்களிப்பு அளித்திட முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகளுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்


மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அன்று (19.05.2021) தலைமைச் செயலகத்தில், முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் கூட்டமைப்புகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்திட பெருமளவில் பங்களிப்பு அளித்திட வேண்டுகோள் விடுத்தார்.

கோவிட் தொற்றின் இரண்டாம் அலை வெகுவாகப் பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தி, பொது மக்களின் வாழ்வாதாரத்தினையும், பொருளாதாரத்தினையும் மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து துரிதமான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முழு ஊரடங்கு காலத்திலும் தடையின்றி செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 24 மணி நேர உதவி அழைப்பு சேவை, பணியாளர்களின் சுமூகமான போக்குவரத்திற்காக மின் பதிவு முறை (E-Registration) என பல்வேறு வசதிகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

இந்த நோய்த் தொற்று, சுகாதாரம், பொருளாதாரம் மட்டுமின்றி, பொது மக்களின் உயிரினைப் பாதுகாக்க தேவையான மருத்துவ உபகரணங்களான ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள், மருத்துவமனை படுக்கைகள் போன்றவற்றின் தேவைகளும் அதிகரித்துள்ளன.

இந்த தொற்று நோய்க்கு எதிரான போர்க்கால நடவடிக்கைகளில் பங்கேற்குமாறும், அதைப் பற்றிய வழிமுறைகளை எடுத்துரைக்கும் வகையிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முகஸ்டாலின் அவர்கள், இன்று முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் மற்றும் தொழில் கூட்டமைப்பிளருடனும் கலந்தாய்வு நடத்தினார்கள். இந்த தொற்று ஏற்படுத்தி இருக்கும் பெரும் பாதிப்பினையும், உயிர் காக்கும் மருத்துவப் பொருட்களுக்கான தேவையையும் மனதில் கொண்டு, தங்களது சமூகபொறுப்புணர்வு முயற்சியின் மூலமாக அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக வழங்கவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டார்.

மக்களின் வாழ்வாதாரத்தினை மீட்பதற்கும், நோய்த் தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இந்நிகழ்வின் போது, ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஐந்து கோடி ரூபாய், LMW நிறுவனம் மூன்று கோடி ரூபாய், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்கள்.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உறுதி அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக