சனி, 22 மே, 2021

கரும் பூஞ்சை எனும் நோயின் அடுத்த அபாயம்! மேலும் ஊரடங்கை நீட்டிப்பது அவசியமே! அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தாரீர்! - கி.வீரமணி


 புதிதாக கடந்த 7.5.2021 அன்று  மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பதவியேற்ற தி.மு.க. அரசு முதல்வரின் புயல் வேக செயல் வேகத்தால் கரோனா கொடுந் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்து, அறவே ஒழிக்க தீவிர நடவடிக்கைகளில் அசராமல் ஈடுபட்டு வருகின்றது. என்றாலும் அதன் வீச்சு பெரிதும் குறைந்தபாடில்லை; குழந்தைகளையும் பாதிக்கும் செய்தி நம்மை ரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்கிறது. 

உயிர் பறிப்பு ஆபத்து

போதாக் குறைக்கு, கண்களில் கரும் பூஞ்சை என்ற கொடிய தொற்று  (Mucromycosis) நீரிழிவு நோயாளிகளின் கண் பார்வை - உயிர் பறிப்பு ஆபத்துகளை உணர்த்துகிறது. ஏராளம் செலவாகும்  நோய்த் தொற்றாக அமையும் அதிர்ச்சித் தகவலும் கூடவே வருகிறது. என்றாலும், இம்மாத இறுதியில் அதாவது 31ஆம் தேதி வாக்கில் அது உச்சக் கட்டத்தை அடையக் கூடும்; அதன் பிறகே ஊரடங்கு நடவடிக்கைகளின் பயன்  நல்ல விளைவைத் தரக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்துக் கூறுகின்ற நிலையில், பொது மக்களின் முழு ஒத்துழைப்பின் மூலம் தமிழக அரசின் அத்துணை தடுப்பு நடவடிக்கைகளும் முழுப் பயனைத் தரும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஊரடங்கு நீட்டிப்பு தேவையான கசப்பு மருந்து

எனவே, 24ஆம் தேதியோடு முடிவு அடையும் இந்த ஊரடங்கை, கடும் பத்தியம் போல் மேலும் 2 வாரங்களுக்கோ, 10 நாட்களுக்கோ நீட்டுவது தேவையான கசப்பு மருந்தாகும். அடுத்த கட்ட தவணையாக ரேசன் அட்டைதாரக் குடும்பத்தினருக்கு மேலும் ரூ.2000 தருவது ஜூன்  மூன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று நமது முதல் அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். கரோனா தடுப்பு முக்கியம்  - முன்னுரிமை பெற வேண்டியது என்பதால் - முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது அவசர, அவசியமாகும்.

அதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க அரசு இயந்திரத்தை- குறிப்பாக காவல்துறை மற்றும் மக்கள் நல களப்பணியாளர்கள் வேகமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்! தமிழக அரசு எடுக்கும் சரியான நடவடிக்கைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு.

நமது முதல் அமைச்சர் அவர்கள் திருச்சியில் கூறியதுபோல, கரோனா ஒழிந்த நாளே மகிழ்ச்சிக்குரிய நாள் - அரசுக்கும் முதல் அமைச்சருக்கு மட்டுமல்ல - அனைவருக்கும் என்பதை மனதிற் கொண்டு தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பைத் தர அனைவரும் முன்வர வேண்டும்.

ஓரணியில் நிற்போம்!

அரசியல் கட்சித் தலைவர்கள், கலைத்துறை அன்பர்கள், பொது நல, சமூகநலப் பணியாளர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து, இப்பெரும் போரில் வெற்றி பெற ஓர் அணியில் நின்று, அரசின் முயற்சிகள் வெல்லும்படி பாடுபடுவோம் வாரீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக