ஞாயிறு, 10 மே, 2020

கல்வியை மாநிலத்திடமிருந்து பறித்தால் விபரீதமே நிகழும் என்பதை மோடிக்குச் சொல்வார்களா? - தி.வேல்முருகன்


கொரோனா பற்றிய கவலையே இன்றி, புதிய கல்விக் கொள்கை இறுதி வரைவு தயார் என, அந்த வர்ணாசிரமக் கல்வியைத் திணிக்கத் துடிக்கும் மோடி! கல்வியை மாநிலத்திடமிருந்து பறித்தால் விபரீதமே நிகழும் என்பதை மோடிக்குச் சொல்வார்களா? - தி.வேல்முருகன்

நாடாளுமன்றம், மாநிலங்கள் எதையுமே கலந்தாலோசிக்காமல், புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒரு வரைவு அறிக்கையைத் தயாரிக்குமாறு, கஸ்தூரி ரங்கன் என்பவரைப் பணித்தது ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை. கஸ்தூரி ரங்கன் தன் தலைமையில் ஒருசிலரைச் சேர்த்துக்கொண்டு, ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு-2019’ என்பதினை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டார். இதன் மீது கருத்துக் கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தக் கல்விக் கொள்கை வரைவு, தொடக்கம் முதல் இறுதி வரை முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மலைவாசி மற்றும் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு வேட்டு வைப்பதற்கென்றே தயாரிக்கப்பட்டதுதான் இந்த வரைவு அறிக்கை என்பது தெளிவாகப் புரிந்தது. 

இந்த வரைவு அறிக்கையின் பேரில் கடந்த ஆண்டு ஜூலை 31ந் தேதி வரை கருத்துகளைத் தெரிவிக்க ஒன்றிய மனித வள மேம்பாட்டுத் துறை அவகாசம் அளித்தது. நாடு முழுதும் சுமார் 2 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை அனுப்பியதாகவும், மாநில கல்வி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. கருத்துக் கேட்பு கூட்டம் நாட்டில் பல இடங்களில் ரகசியமாக நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

கருத்துரைகள் யாவற்றையும் ஆய்வு செய்து, தற்போது இறுதி வரைவு அறிக்கையை ஒன்றிய அரசு தயாரித்துள்ளது. 07.05.2020இல் பிரதமர் மோடி இறுதி அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பிறகு, கூடிய சீக்கிரத்திலேயே புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்த கல்விக் கொள்கை வரைவு புராண, இதிகாச கால குருகுலக் கல்வி முறையிலானதாகும். மேல்ஜாதியினர், கனதனவான்கள் குடும்பத்தவரைத் தவிர, வேறு யாருக்கும் கல்வி கற்கும் உரிமை இல்லை. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மலைவாசி மற்றும் ஏழை எளிய மாணவர்கள் குறிப்பாக உயர்கல்விக்குள் சென்றுவிட முடியாதபடி பல்வேறு தடுப்புகள் உள்ளன. 

மேலும் இந்தக் கல்விக் கொள்கை வரைவில், இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால், “கட்டாயம்” என்பது “விரும்பினால்” என்று மாற்றப்பட்டு இறுதி வரைவு தயாராகியுள்ளது. இருந்தும்கூட வரைவின் அனைத்து விடயங்களுமே, இன்றைய நவீன அறிவியல் உலகிற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கியே உள்ளன. 

இந்தச் சூத்திரப் பஞ்சக் கூட்டத்துக்கு, இத்தகைய படுபிற்போக்கான கல்விதான் சரி என்றுதான் மோடி அதைத் திணிக்கப் பார்க்கிறார். இது அவருக்கு மக்களாட்சி, ஜனநாயகம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதோடு; பிரதமர் என்ன வார்டு கவுன்சிலர் பதவிக்குக் கூட அவர் லாயக்கற்றவர் என்பதையுமே காட்டுகிறது. 

கொரோனா பற்றிய கவலையே இன்றி, புதிய கல்விக் கொள்கை இறுதி வரைவு தயார் என, அந்த வர்ணாசிரமக் கல்வியைத் திணிக்கத் துடிக்கும் மோடி! 

இப்போது இந்தியா முழுவதுமே அவரது பெயர் சரி செய்ய முடியாத அளவுக்கு ரிப்பேர் ஆகிவிட்டது; இது அவருக்கும் தெரிந்திருக்கக் கூடும். அதனால்தான் இதை நாட்டு மக்களுக்கும் நாம் உணர்த்த வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக