திங்கள், 22 ஜூன், 2020

உணவு தானியம் விநியோகம் மற்றும் நியாய விலைக் கடைகள் வரை கொண்டு போய் சேர்ப்பதற்கான செலவுகளுக்காக மத்திய அரசு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.


கோவிட்-19 நோய்த் தாக்குதல் பல துறைகளை சில அடிகள் பின்னோக்கித் தள்ளிவிட்டது. ஏழைகளும், தினக் கூலித் தொழிலாளர்களும் கோவிட்-19 நெருக்கடியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சமாளிப்பதற்கு, மத்திய அரசு பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் (கரீப் கல்யாண்) திட்டத்தை அறிவித்தது. அதன் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகள் 80 கோடி பேருக்கு ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 கிலோ உணவு தானியம் என்ற அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது. 2020 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி மூன்று மாதங்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது. முடக்க நிலையால் பாதிக்கப்படும் சூழலில் உள்ள பிரிவினருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 120 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகள் பிரிவில் உள்ள அனைத்து முக்கியத்துவமான வீடுகளுக்கும் (PHH) இந்த மூன்று மாத காலத்தில் வழக்கமான ஒதுக்கீட்டை விட இரு மடங்கு தானியங்கள் கிடைப்பதையும், அந்த்யோதயா அன்ன யோஜ்னா பயனாளிகளுக்கு மாதத்துக்கு வழக்கமான 35 கிலோ என்ற இயல்பான ஒதுக்கீட்டை விட கூடுதலாக மாதத்துக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்குவதையும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

            உணவு தானியம், அவற்றைக் கொள்முதல் செய்வது, சேமித்தல், போக்குவரத்து, விநியோகம் மற்றும் நியாய விலைக் கடைகள் வரை கொண்டு போய் சேர்ப்பதற்கான செலவுகளுக்காக மத்திய அரசு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது அளிக்கும் விலையில் தொடங்கி, கடைசியாக மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் இடமான நியாய விலைக் கடை உரிமையாளருக்கு கமிஷன் வழங்குவது வரை அனைத்து செயல்பாடுகளுக்கும் மத்திய அரசு அரிசிக்கு கிலோவுக்கு ரூ.37.48, கோதுமைக்கு கிலோவுக்கு ரூ.26.78 அளிக்கிறது. மாநில அரசுகளுக்கு எந்த நிதிச் சுமையும் இல்லாமல் இந்த ஒட்டுமொத்த உணவுப் பொருள் வழங்கலையும் மத்திய அரசு அமல் செய்கிறது.

            தமிழகம் மற்றும் புதுவைக்கு, முறையே மாதத்துக்கு முறையே 1.79 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 2957 மெட்ரிக் டன் அரிசி, 2020 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகள் குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் 1.11 கோடி பேருக்கு இலவசமாக வழங்குவதற்காக இது அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3.57 கோடி பயனாளிகள், புதுவையில் 6.34 லட்சம் பயனாளிகள் பயன் பெறுவர். தமிழகத்துக்கான முழு 5.36 லட்சம் மெட்ரிக் டன், புதுவைக்கான 8860 மெட்ரிக் டன்  அளவுக்கு அரிசி ஏற்கெனவே அந்தந்த அரசுகளுக்கு அளிக்கப் பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஒதுக்கீடு முன்கூட்டியே 100 சதவீதம் வழங்கப்படுவதை இந்திய உணவுக் காப்பரேசனின் தமிழகப் பிரிவு உறுதி செய்துள்ளது. எடுத்துக் கொண்டுள்ள உணவு தானியங்களை இந்த அரசுகள் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகின்றன.

            மேலே குறிப்பிட்டதைத் தவிர, 2020 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்துக்கு, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகள் பிரிவில் வராத 1.32 கோடி பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தேவைக்காக தமிழக அரசுக்கு 1,98,813 மெட்ரிக் டன் அரிசி வழங்கப் பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகள் அல்லாத திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு இவை மானிய விலையில் வழங்கப் படுகின்றன. புதுவையைப் பொருத்த வரையில், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகளின் கீழ் வராத 6.27 லட்சம் பயனாளிகளுக்கு இத் திட்டத்தின் கீழ் 2990 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி உணவு தானியங்களை கிடங்குகளில் இருந்து எடுத்துச்  செல்லும் பணிகளை புதுவை அரசு தொடங்கியுள்ளது. ஒரு வார காலத்திற்குள் முழு ஒதுக்கீட்டையும் புதுவை யூனியன் பிரதேசம் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

            புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் குடும்ப அட்டைகள் இல்லாதவர்களின் சிரமங்களைக் குறைப்பதற்கு, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத் திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவைக்கு முறையே  35,734 மெட்ரிக் டன், புதுவைக்கு 589 மெட்ரிக் டன் அளவுக்கு அரிசி இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.

            மேலே குறிப்பிட்டுள்ளவை தவிர, இந்திய உணவுக் கழகத்தின் தமிழகப் பிரிவு, முடக்கநிலை காலத்தில் இயல்பான தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகள் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் 3.34 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து 423 சரக்கு ரயில்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து இவை வழங்கப்பட்டன. இவற்றின் மூலம் முடக்கநிலை காலத்தில் மட்டும் தமிழகத்துக்கு 11.21 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் இந்திய உணவுக் கழகத்தின் தமிழகப் பிரிவு தமிழகம் மற்றும் புதுவை முழுக்க பல்வேறு மாவட்டங்களில் 69 கிடங்குகளில் 12.59 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்களை கையிருப்பு வைத்துள்ளது. 

கோவிட் -19 முடக்க நிலை காலத்தில் கொள்முதலில் சாதனை

            கோவிட் -19 நெருக்கடி சமயத்தில், விவசாயிகளுக்குத் தங்களின் விலை பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது இந்திய உணவுக் கழகத்திற்கு  பெரிய சவாலாக உள்ளது. விவசாயிகளிடம் இருந்து அரசு முகமைகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் கோதுமையின் அளவு 16.06.2020இல் முன் எப்போதும் இல்லாத உச்ச நிலையைத் தொட்டது. அன்றைய தினம் 382 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. 2012-13இல் ஒரு நாளில் 381.48 டன் கோதுமை கொள்முதல் செய்தது தான் இதுவரை சாதனை அளவாக இருந்து வந்தது. கோவிட் நோய்த் தாக்குதலால் ஒட்டுமொத்த நாடும் முடக்க நிலையில் உள்ள சூழ்நிலையில் இந்தச் சாதனை அளவு கொள்முதல் எட்டப்பட்டுள்ளது.

            முதலாவது முடக்கநிலை அமல் காரணமாகவும், கோதுமை உபரியாகக் கிடைக்கும் மாநிலங்களில் கொள்முதல் ஏப்ரல் 15ஆம் தேதி என 15 நாட்கள் தாமதமாகத் தொடங்கியதாலும் கொள்முதலில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக ஏப்ரல் 1 ஆம் தேதி கோதுமை கொள்முதல் தொடங்கும். விவசாயிகளிடம் இருந்து எந்தத் தாமதமும் இல்லாமல், பத்திரமாக கோதுமை கொள்முதல் செய்யப்படுவதை, இந்திய உணவுக் கழகத்தின் தலைமையில் மாநில அரசுகள் மற்றும் அனைத்து அரசு கொள்முதல் முகமைகளும் உறுதி செய்திட வழக்கத்தைவிட அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 14,838இல் இருந்து 21,869 என அதிகரிக்கப்பட்டது. ஏற்கெனவே உள்ள சந்தைகள், கொள்முதல் மையங்கள் மட்டுமின்றி, சாத்தியமான அனைத்து இடங்களிலும் புதிய கொள்முதல் மையங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் கொள்முதல் மையங்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டிய அவசியம் குறைந்தது, சமூக இடைவெளி பராமரிப்பு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. டோக்கன் நடைமுறையைப் பின்பற்றியதன் மூலம், கொள்முதல் மையத்துக்கு தினமும் வருபவர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்த தொழில்நுட்ப ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வப்போது கிருமி நீக்கம் செய்தல், ஒவ்வொரு விவசாயியும் தங்கள் விளைபொருள்களை இறக்கி வைப்பதற்கான இடத்தை ஒதுக்குவது ஆகியவற்றுடன், இதுபோன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதால், நாட்டில் எந்த இடத்திலும் உணவு தானியக் கொள்முதல் மையங்கள் கோவிட் -19 நோயைப் பரப்பும் இடங்களாக மாறாமல் தவிர்க்கப்பட்டது. 

தமிழகத்தில் நெல் கொள்முதல்

            இதே காலகட்டத்தில் நாடு முழுக்க 119 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் 2019-20க்கான கரீப் மார்க்கெட்டிங் பருவத்தில் 24.79 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனை அளவுக்கு அரசு ஏஜென்சிகள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 4.94 லட்சம் மெட்ரிக் டன் நெல், முடக்க நிலை காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை 1766இல் இருந்து இந்த ஆண்டில் 2094 ஆக உயர்த்தி, அதிகபட்ச நெல் கொள்முதல் உறுதி செய்யப்பட்டது. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழான சிறப்புத் திட்டங்கள், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகள் அல்லாத, இயல்பான என்.எப்.எஸ்.ஏ. மற்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட இதர நலத் திட்டங்களின் கீழ் உணவு தானியங்கள் வழங்குவது கோவிட் நோய்த் தாக்குதல் சூழல் அல்லது முடக்கநிலை காரணமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்திய உணவுக்கழகம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு, அதை வெற்றிகரமாக உறுதி செய்து வருகிறது. முடக்க நிலை தொடங்கிய முதலாவது நாளில் இருந்து, அந்தப் பகுதி தேவைகளுக்கு ஏற்ப அனைத்து கிடங்குகளும் வாரத்தின் 7 நாட்களும் செயல்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து கிராமங்களுக்கும் போதிய உணவு தானியங்கள் கிடைத்து, யாருமே பட்டினியாக தூங்கச் செல்லாத நிலை ஏற்படுவதை உறுதி செய்திருக்கிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக