செவ்வாய், 30 ஜூன், 2020

பொது ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பிழந்து, வருமானத்தை பறி கொடுத்து, பஞ்சம், பட்டினியும் தலைவிரித்தாடி வருகிறது. - கே.எஸ்.அழகிரி


பிரதமர் மோடி அறிவித்த பொது ஊரடங்கு 100 நாட்களை நெருங்குகிற நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்தை கடந்து 1141 பேர் பலியாகி இருக்கிறார்கள். பொது ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையோ, பலியானவர்களின் எண்ணிக்கையோ குறைந்தபாடில்லை. இதனால் பொருளாதாரப் பேரழிவை நோக்கி இந்த நாடு சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கொரோனா நோயினால் மடிந்து கொண்டிருக்கும் நிலையும், இன்னொரு பக்கம் பொது ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பிழந்து, வருமானத்தை பறி கொடுத்து, பஞ்சம், பட்டினியும் தலைவிரித்தாடி வருகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தலைநகர் சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் எண்ணிக்கையில் 100 கூடிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை மனப்பான்மை கொண்ட தோழர் சு. வெங்கடேசன் நோய் தொற்றை தடுக்கவும், சோதனையை அதிகரிக்கவும், உரிய சிகிச்சை வழங்க கட்டமைப்பை வசதிகளை விரிவுபடுத்தவும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர் மற்றும் பொது சுகாதராத்துறை அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார். ஆனால், அவரது கோரிக்கைகளை உதாசினப்படுத்துகிற போக்குத்தான் நடைமுறையில் இருந்து வருகிறது.

மதுரை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் கொரோனா பரவலை தடுக்க தவறிய அரசு நிர்வாகம் குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். அந்தப் பகுதியில் கொரோனா வேகமாக பரவுவதற்கான புள்ளி விவரங்களை ஆதாரத்தோடு குறிப்பிட்டு இருந்தார். இத்தகைய நிலை நீடித்தால் நாள்தோறும் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை குறிப்பிட்டு சோதனையை உயர்த்தவேண்டுமென்று அந்தக் கடிதத்திலே வலியுறுத்தியிருந்தார். இதற்காக சிகிச்சை மையங்களை உருவாக்கி குறைந்தது 5000 படுக்கைகளாவது உடனடியாக ஏற்படுத்த வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். ஆனால், முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. இத்தகைய சூழலில் வருவாய்த் துறை அமைச்சராக இருக்கிற ஆர்.பி. உதயகுமார் மக்களவை உறுப்பினர் திரு சு. வெங்கடேசன் எழுதிய கடிதத்தின் மூலம் மக்களிடையே அச்சம் பீதியை ஏற்படுத்துவதாகவும், தவறான தகவலை பரப்புவதாகவும் கூறி அவர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பாதிக்கப்படுகிற களநிலவரத்தை நேரில் பார்த்து முற்றிலும் அறிந்து அதை முதலமைச்சருக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவதில் என்ன தவறு? என்ன குற்றம்? இதற்காக மக்களவை உறுப்பினரை தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிரட்டுவதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மக்களவை உறுப்பினர் என்கிற முறையில் சேவை மனப்பான்மையோடு ஜனநாயகக் கடமை செய்கிற திரு சு. வெங்கடேசன் அவர்களை இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் அவரது செயல்பாடுகளை முடக்கி விடலாம் என்று ஊழலில் ஊறித்திளைத்த உதயகுமார் செய்யும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறாது.

ஏற்கனவே ரூபாய் 2000 கோடி மதிப்பிலான பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிற உதயகுமாரின் செயல்பாடுகள் கடந்த சில நாட்களாக மக்கள் மன்றத்தில் அம்பலமாகி வருகின்றன. மாநில அரசு பரிந்துரை செய்து முன்வைத்த டெண்டரை மத்திய அரசு ரத்து செய்திருப்பதை விட ஒரு அவமானம் வேறெதுவும் இருக்கமுடியாது. இன்றைக்கு இந்தப் பின்னணியில் உள்ள தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் சு. வெங்கடேசன் அவர்களின் ஜனநாயகக் கடமையை முடக்குகிற வகையில் தொடர்ந்து செயல்படுவாரேயானால் அவருக்கு எதிராக தி.மு.க - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஓரணியில் திரண்டு கடும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்க விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக