திங்கள், 29 ஜூன், 2020

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது, இத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை வேளாண் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்திட வேண்டும்.- ஜி.கே.வாசன்


விவசாயப் பணிக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டால் பணியாளர்கள் பற்றாக்குறை நீங்கும். வேளாண் பணிகள் குறித்த நேரத்தில் சீராக நடைபெறும்.

தமிழக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும் விதமாக பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

விவசாயிகள் உழவு பணிகளை குறிப்பிட்ட காலத்தில் துவங்க இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நீண்டகாலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது, இத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை வேளாண் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்திட வேண்டும். அதன் மூலம் வேளாண்மை வளர்ச்சிக்கு இத்திட்டம் உதவும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இத்திட்டம் இதுவரை ஏரி, குளம், குட்டை தூர்வாருதல் வாய்க்கால் சீரமைத்தல், வரப்பு வெட்டுதல் போன்ற வேளாண் பணிசார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் வேளாண் பணிகளுக்கு பணியாளர்கள் கிடைப்பது அறிதாகிவிட்டது, அதனால் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. இத்திட்ட பணியாளர்களை வேளாண் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்தினால் பல நன்மைகள் உருகாகும். குறிப்பாக வேளாண்பணிகளுக்கு இன்று நிலவும் ஆள் பற்றாக்குறை நீக்கப்படும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தினால் அதன் மூலம் அவர்களுக்கும் வாழ்வாதாரம் உருவாக்கப்படும்.  வேளாண் தொழில் தங்கு தடையின்றி நடைபெற வழி வகுக்கும். விவசாயிகள் இதனால் நேரடியாக பயன்பெருவார்கள், வேளாண்மை செழிக்கும். அனைவராலும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்று அழைக்ப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் ஆண், பெண் வேறுபாடு பார்க்காமல் ஒருவருக்கு ரூ.256 வழங்கப்படுகிறது. 

விவசாயப் பணியில் ஆண்களுக்கு அதிக கூலியும், பெண்களுக்கு குறைவான கூலியும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் பாலின வேறுபாடு பாராமல் ஒரே ஊதியத்தை வழங்குவதை இதன் மூலம் உறுதி செய்யலாம். இத்திட்டத்தை செயல்படுத்தும் முறையை, வழியை விவசாயிகளை கலந்து, அரசே வகுக்க வேண்டும், குறிப்பாக இன்று இத்திட்டத்தின் கீழ் ஊதியமாக வழங்கப்படும் ரூ.256 ஐ அரசே வழங்குமானால் அக்கூடுதல் கூலியை விவசாயிகள் வழங்கலாம்.

 இரண்டாவது வழி அல்லது முறை, அரசு பாதி சம்பளத்தையும் விவசாயிகள் பாதி சம்பளத்தையும் வழங்கலாம், மூன்றாவது வழி பணியின் அளவு, பணியின் காலம், பணிக்காக உட்படுத்தப்பட்ட நில பரப்பு பணியின் தன்மை ஆகியவற்றை கணக்கிட்டு இத்திட்டத்தில் கீழ் ஊதியத்தை வழங்கலாம். இதில் எந்த முறை சிறந்தது என்பதை அரசே ஆய்வு செய்யலாம்.  இத்திட்டத்தை கண்காணிப்பில் செயல்படுத்தலாம்.

விவசாயப் பணிக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டால் பணியாளர்கள் பற்றாக்குறை நீங்கும். வேளாண் பணிகள் குறித்த நேரத்தில் சீராக நடைபெறும். நேரடி கண்காணிப்பு (அரசு மற்றும் விவசாயிகள்) உறுதி செய்யப்படும். அதிக பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள், ஆக விவசாயிகள் இத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், இத்திட்டத்தின் செயல்படுத்தும் அரசு ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இது நன்மை பயக்கும் திட்டமாகும்.

இந்த கருத்தை ஆய்வு செய்து வேளாண்பணி தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழக அரசு முடிவெடுப்பது நலன் பயக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக