செவ்வாய், 23 ஜூன், 2020

இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களுக்கு, இத்தீர்ப்பு அவர்களின் நெஞ்சில் எய்தப்பட்ட ஈட்டி! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


பட்டப்பகலில் நடத்தப்பட்ட படுகொலைக்குப் பரிசளிப்பா?
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கு! 
முக்கியக் குற்றவாளிகள் விடுதலை!!

இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களுக்கு, இத்தீர்ப்பு அவர்களின் நெஞ்சில் எய்தப்பட்ட ஈட்டி!

சிசுக் கொலைகளை ஒரு காலத்தில் நியாயப்படுத்தினார்கள்; அதே கும்பல் இனிமேல் கௌரவக் கொலைகளை நியாயப்படுத்தி பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை அல்லது அவர்களுடைய பிறப்புரிமை என்று கூடக் கோரலாம். பட்டப்பகலில் மதியம் 2 மணி அளவில், பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கணக்கானவர்கள் கண்ணெதிரே நடந்த உடுமலைப்பேட்டை சங்கர் கொலைக் குற்றவாளிகளில் முக்கியமானவர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு உலகெங்கும் வாழக்கூடிய இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் நெஞ்சில் வேல் கொண்டு பாய்ச்சுவதற்கு  சமமானதாகும்.

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை செய்யப்பட்ட சமயத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே அதை கண்டித்துக் குரல் கொடுத்தது. மனிதநேயமற்ற முறையில் செய்யப்பட்ட கொடூரமான கொலை இது. இதுபோன்ற குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை பிறக்கும்? கதைக்கு உதவாத சம்பவங்களை எல்லாம் நீதிமன்றங்கள் ’தானே’ முன்வந்து விசாரிக்கக்கூடிய நிகழ்வுகளை  எல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த சம்பவத்திற்கு சிசிடிவி காட்சிகள் இருந்தும், கண்ணுற்ற சாட்சிகள் பல இருந்தும், இக்கொலைக்கு யார் தூண்டுதலாக இருந்தார்களோ, யார் இந்த கொலையால் பலனடைய நினைத்தார்களோ, அக்குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது எந்த நீதியின் அடிப்படையில் ஆகும்? இதுபோன்ற குற்றங்களுக்கு நீதிமன்றங்களில் சரியான தண்டனை கொடுக்கப்படவில்லையெனில் “வல்லான் வகுத்ததே வழி” என்ற நிலை உருவாகாதா? பல லகரங்கள் கையில் இருந்தாலும், ஆட்சி, அதிகாரங்கள் பின்புலம் இருந்தாலும் இதுபோன்ற கர்ண கொடூரங்களை செய்துவிட்டு, தப்பித்து விடலாம் என்ற சூழ்நிலை உருவாகாதா? அடுத்து இன்னொரு பக்கம், சட்டத்தின் மூலமாக நீதி கிடைக்காத பொழுது ”பல்லுக்கு பல், பழிக்கு பழி” என்ற அவலநிலை சமூகத்தில் உருவாகாதா?

தமிழகத்திலே சமூகநீதி பேசுகிறார்கள். ஆனால், அவர்களுடைய ஆட்சியில் தான் 1957-ல் இம்மானுவேல் தேவேந்திரர் படுகொலை செய்யப்பட்ட போதும், 1968-ல் தஞ்சை மாவட்டம் கீழவெண்மணியில் 43 தேவேந்திரகுல வேளாளர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும், சிவகங்கை மாவட்டம் உஞ்சனையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும், அதேபோல மாடக்கோட்டை கிராமத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடத்திய மாடக்கோட்டை சுப்புக் கொலை வழக்கிலும் நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகள் அனைவரும் தப்பித்துக் கொண்டார்கள்.
மனித உரிமைக்காக போராடியவர்களுக்கும், மனிதநேயத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்களுக்கும் முழுக்க முழுக்க எதிராக அரசாங்கமும், அரசு இயந்திரமும், நீதிமன்றமும் ஒன்றாக நிற்கும் போது எப்படி நீதி கிடைக்க முடியும்? 

கடந்த நான்கு மாத காலமாக நாடே முடக்கப்பட்டுக் கிடக்கிறது. மக்கள் மூன்று வேளை உணவுக்குக் கூட அல்லல் படக்கூடிய நிலை இருக்கிறது. அனைத்து தொழில்களும், வணிகங்களும் முடங்கி கிடக்கிறது. எல்லா அமைப்புகளும் செயலற்ற நிலையில் இருக்கிற பொழுது, ஏன் இந்த வழக்கு மட்டும் இவ்வளவு வேகமாக நடத்தப்பட்டது? எந்தவொரு தீர்ப்பிலும் குறைந்தபட்ச நியாயமாவது தென்பட வேண்டுமல்லவா? நீதி, நேர்மை, நியாயம் பேசக்கூடிய எந்த மனிதராவது இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்களா? 

வழக்கு நடத்தப்பட்ட வேகம், தீர்ப்பு சொல்லப்பட்ட நேரம் ஆகியவை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. பட்டப்பகலில் நடத்தப்பட்ட படுகொலைக்கு இது பரிசளிப்பா? இந்த வழக்கில் நல்லத் தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையோடு இருந்த இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களுக்கு, இத்தீர்ப்பு அவர்களின் நெஞ்சில் எய்தப்பட்ட ஈட்டி என்று சொன்னால் மிகையாகாது. நீதி கிடைக்க வேண்டிய இடத்தில் கிடைக்கவில்லை என்றால் அநியாயமான தீர்ப்பிற்கு மக்கள் தீர்ப்பு சொல்ல வேண்டிய காலகட்டம் வரும்.

எந்த குற்றமும் செய்யாத 21 வயது இளைஞர் சங்கர் வன்முறையாளர்களால் அவர்களுடைய பாணியிலேயே தீர்த்து கட்டப்பட்டார். அந்தப் படுகொலையாளர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக விடுதலை செய்திருக்கிறார்கள். 

இதுபோன்ற ஒரு தீர்ப்பைப் பெறுவதற்கு எந்தத் துணை, துணை நின்றது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வரும். தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் அவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வரும்.

இந்த வழக்கை உள்நோக்கத்தோடு நடத்தி, தவறான தீர்ப்பு வழங்கக் காரணமாக இருந்த அ.இ.அ.தி.மு.க அரசை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பாக அனைத்து மாவட்டங்கள், ஒன்றியங்கள் அளவில் இம்மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக