செவ்வாய், 23 ஜூன், 2020

உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் : திருமதி.ஹர்சிம்ரத் கவுர் பாதல்



உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் : திருமதி.ஹர்சிம்ரத் கவுர் பாதல்

மத்திய அரசின், தேசிய முதலீடு மேம்பாட்டு வசதிக்கான பிரத்யேக அமைப்பான இந்தியாவில் முதலீடு அமைப்பின், உணவு பதப்படுத்தும் தொழில் முதலீட்டு வாய்ப்புகளை, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் திருமதி.ஹர்சிம்ரத் கவுர் பாதல் தொடங்கிவைத்தார். 

மத்திய – மாநில அரசுகளின் உயர்மட்டக் கொள்கை வகுப்போர் மற்றும் சர்வதேசத் தொழில் துறையினரிடையே விரிவான ஆலோசனை நடத்த ஏதுவாக,  இந்தியாவில் முதலீடு அமைப்பு, துறை வாரியான இந்த பிரத்யேக ஏற்பாட்டை  செய்துள்ளது.   மத்திய அரசு மற்றும், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஆறு மாநில அரசுகளின் உயர்மட்டக் கொள்கை வகுப்போர், இந்த அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர்,  கோவிட் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக,  உணவு பதப்படுத்தும் தொழில் துறை பல்வேறு பிரத்யேக சவால்களை சந்தித்து வருவதாகவும்,  ஊரடங்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், இத்துறை முக்கியப் பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.   தற்போது எதிர்கொண்டு வரும் சில சவால்கள்,  சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடையவை என்பதால்,  சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள சரிவு, உள்நாட்டுத் தேவையிலும் எதிரொலித்துள்ளது என்றார்.

எனினும், இந்த சவால்கள், புதிய வாய்ப்புகளுக்கு வழிவகை செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.    தற்போதைய நடவடிக்கைகள் மூலம், 180-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்,  ஆறு மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

இந்த சந்திப்பில் பங்கேற்ற அனைவருக்கும், இந்திய உணவு பதப்படுத்தும் தொழிலில்  உள்ள  எண்ணற்ற வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதாகக் கூறிய மத்திய அமைச்சர்,  மத்திய உணவு பதப்படுத்தும் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் செயல்படும் திட்டங்களுக்கு,  பல்வேறு நாடுகளிலிருந்து, சமீபத்தில் ஏராளமான ஆர்டர்கள் வரப்பெற்றுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.  கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதில், மற்ற நாடுகளை விட இந்திய வளர்சிதை மாற்றம் (உணவுப் பழக்கவழக்கம்), சிறப்பானது என்பதை மக்கள் அறிவார்கள் என்பதால்,  ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தயாரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.   இந்தியாவில் உட்கொள்ளப்படும் தலைசிறந்த உணவுகள்,  மேற்கத்திய உலகிற்கு எடுத்துரைக்கப்பட வேண்டியது அவசியம்.   இது தவிர,  சாப்பிடுவதற்குத் தயார் நிலையில் உள்ள உணவுகளை விட,  இந்திய உணவு வகைகளை தங்களது கடைகளில் விற்பனைக்கு இருப்பு வைப்பது குறித்து,. உலகம் முழுவதுமுள்ள சில்லரை வியாபாரிகள் பரிசீலித்து வருகின்றனர். 

முதலீடுகளைப் பெருமளவில் ஈர்க்கவும்,  உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவு அளிக்கவும், “அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு” மற்றும் “திட்ட வளர்ச்சிக் குழு”- க்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதையும்,  கூட்டத்தில் பங்கேற்ற தொழில் துறையினருக்கு மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார்.   உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவாக,  இந்தியாவில் முதலீடு அமைப்பின் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறையில்,  முதலீட்டு உதவிக்கென பிரத்யேகப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துமாறு, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக