செவ்வாய், 23 ஜூன், 2020

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியை மட்டுமல்ல, கோபத்தையும் ஒருங்கே வரவழைக்கிறது.- உ.வாசுகி


உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியை மட்டுமல்ல, கோபத்தையும் ஒருங்கே வரவழைக்கிறது.. கௌசல்யாவின் தாய் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டதை இத்தீர்ப்பு உறுதி செய்வதோடு, தந்தையையும் குற்றங்களில் இருந்து விடுவித்து இருக்கிறது. 300 பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடிய தீர்ப்பினை முழுமையாக ஆய்வு செய்தால்தான் எந்த அடிப்படையில் உயர் நீதிமன்றம் இந்த முடிவுக்கு போனது என்பதை மதிப்பீடு செய்ய முடியும். சாதி வெறியும் சாதிப் பெருமிதமும் மேலோங்கி நிற்கக்கூடிய சமூகச் சூழலில், ஆணவக் கொலை செய்வது குற்றமே அல்ல, அது சாதியின் கவுரவத்தை உயர்த்திப் பிடிக்கிறது என சாதிய சமூகம் கருதுகிற பின்னணியில், அந்த சட்டகத்திற்கு (framework) உட்பட்டு தான் சட்டமும் சாட்சியங்களும் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும்.  கூலிப்படை கொலை செய்தது என்றால், கௌசல்யாவின் தந்தைக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் அது நடந்திருக்க முடியுமா? உறவினர்களே முடிவெடுத்து கொலையை நடத்தி விட்டார்களா? அப்படியே வைத்துக்கொண்டாலும், தமக்கு சம்பந்தம் இல்லாமல் மருமகன் கொலை செய்யப்பட்ட சூழலில் மகளை தந்தையும் தாயும் அரவணைத்தார்களா? சாதி ஆணவக் கொலைகள் குறித்து உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அளித்து இருக்கக்கூடிய பல்வேறு சரியான தீர்ப்புகளை இந்தத் தீர்ப்பு பின்னுக்குத் தள்ளுகிறது. இந்தத் தீர்ப்பு சாதிய சக்திகளுக்கு ஊக்கத்தை அளிக்கும் என்பது உறுதி.. யாரை காதலிப்பது யாரை திருமணம் செய்து கொள்வது என்கிற இளைஞர்கள் இளம்பெண்களின் தேர்வு செய்யும் உரிமையை பறிக்கும். உடனடியாக தமிழக அரசு இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எவ்வளவு முக்கியமானது, அத்தியாவசியமானது என்பது இந்த தீர்ப்பின் பின்புலத்தில் மீண்டும் முன்னுக்கு வருகிறது. இல்லையேல் சமூக நிலைமையை கணக்கில் எடுக்காமல் சட்டப் பிரிவுகளுக்குள் மட்டுமே நின்று தீர்ப்பளிக்கும் நிலைமை தொடரும்.

ஜனநாயக சக்திகள் உரக்க குரல் எழுப்ப வேண்டிய நேரமிது.. இது சங்கர் படுகொலை என்கிற ஒற்றை வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக பார்க்க கூடாது... இது நாடு தழுவிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது எதிர்வினை அதை எதிர்கொள்ளும் விதத்தில் அமைய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக