செவ்வாய், 30 ஜூன், 2020

"இந்தியாவின் பசுமைப் போர்வை மொத்தமாக அழிந்து விடும்; சுற்றுச்சூழலை முற்றிலுமாக அழித்து விடும்." மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை நாடாளுமன்றக்குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்! கொரோனா அச்சம் விலகும் வரை கிடப்பில் போட வேண்டும்!! மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்

இந்தியாவில் சுற்றுச்சூழல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகளை தளர்த்தி மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு அறிவிக்கையை அதன் இப்போதைய வடிவத்தில் செயல்படுத்தினால், இந்தியாவின் பசுமைப் போர்வை மொத்தமாக அழிந்து விடும்; சுற்றுச்சூழலை முற்றிலுமாக அழித்து விடும்; இந்திய சுற்றுச்சூழல் மீது நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும் வகையில்  மிக மோசமான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எச்சரித்திருக்கிறார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளை தளர்த்த திட்டமிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதற்கான வரைவு அறிவிக்கையை மக்களின் கருத்துகளை கேட்டறியும் நோக்கத்துடன் கடந்த மார்ச் 12 ஆம் தேதி அதன் இணையதளத்தில் வெளியிட்டது. மே மாதம் 10 ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நாளை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை மீதான தமது கருத்துகளை விளக்கி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அத்துடன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையில் செய்யப்பட வேண்டிய  திருத்தங்கள் குறித்த  தமது ஆலோசனைகளையும்  அவர் தனி இணைப்பாக இணைத்துள்ளார். அதில், இந்தியா கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பும்வரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையையும், அதன் மீதான நடவடிக்கைகளையும் கிடப்பில் போட வேண்டும்; சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை அறிவியல்,  தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளுக்கான  நாடாளுமன்றக்குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக