புதன், 24 ஜூன், 2020

சேவை ஏற்றுமதியாளர்களுடன் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் சந்திப்பு.


சேவைத் துறையில் வெளிநாடுகளுக்கான பணியில் ஈடுபட்டிருக்கும் சேவைகள் ஏற்றுமதியாளர் மேம்பாட்டுக் கவுன்சில் (எஸ்.இ.பி.சி.) நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சேவைத் துறைகளில் தொடர்புடையவர்களின் நிர்வாகிகளுடன் மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் இன்று காணொளி மூலம் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது, கோவிட்-19 நோய்த் தாக்குதல், முடக்கநிலை அமல், இப்போது கட்டுப்பாடுகள் தளர்வு சூழ்நிலையில் பல்வேறு கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் அவர்கள் அமைச்சரிடம் முன் வைத்தனர். இந்தியாவின் வெளி வர்த்தகத்தில் சேவைகள் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 2020 ஏப்ரல் மாதத்தில் சேவைத் துறையில் ரூ. 1,25,409 கோடி அளவுக்கு ஏற்றுமதியும், ரூ. 70,907 கோடி அளவுக்கு இறக்குமதியும் நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு ஆலோசனைகளைக் கேட்டறிந்த அமைச்சர் திரு. பியூஷ் கோயல், சேவைத் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளது என்றும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தாத நிலை இருப்பதாகவும் கூறினார். இந்தத் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த துறைகள் மிகவும் வெற்றிகரமாக இயங்குவதாகவும், அவற்றின் சொந்தத் திறன்கள் காரணமாக, அரசின் பெரிய ஆதரவுகள் ஏதுமின்றி இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் நிர்வாக தடங்கல்கள் ஏற்படும் நிலை இல்லாமல் அவை இயங்கி வருகின்றன என்றார் அவர். போட்டி நிலையில் உள்ள சாதகங்களை பயன்படுத்திக் கொள்வது, தரத்தில் கவனம் செலுத்துவது, புதிய சேவைநாடுநர்களைக் கண்டறிதல், புதிய சேவைகளை கண்டறிதல் என துறையில் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். 

அரசுக்கு முன்னுரிமை தர வேண்டிய விஷயங்களும், கட்டுப்பாடுகளும் உள்ளன. ஆரம்ப கட்டத்தில் ஸ்டார்ட் அப் நிலையில் உள்ள துறைகள், தொழிற்சாலைகளுக்கு உதவுதல், கொள்கை அளவில் தலையீடுகள் செய்தல், நியாயமற்ற நடைமுறைகளைத் தடுத்து அவை வளர அரசு உதவலாம், ஆனால் எல்லா நேரங்களிலும் அவ்வாறு செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டார். ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதற்கு, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக