புதன், 24 ஜூன், 2020

மனித உரிமை மீறல்கள் எந்த பகுதியில் எவருக்கு நடந்தாலும் அது ஏற்புடையது அல்ல - டாக்டர் K. கிருஷ்ணசாமி


சாத்தான்குளம் தந்தை - மகன் சிறையில் மரணம்!
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், அரசரடி பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் இரு தினங்களுக்கு முன்பு, கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் அடுத்தடுத்து இறந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கோவிட் - 19 காரணமாக இரவு 8 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்க வேண்டும் என்ற பொதுவான அரசின் உத்தரவை அமலாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கும், அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், அதைத் தொடர்ந்து ஜீன் 19-ம் தேதி மாலை 6 மணியளவில் ஜெயராஜ் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டது, அதைக் கேள்வியுற்ற அவரது மகன் பென்னிக்ஸ் ஐந்து வழக்கறிஞர்கள் மற்றும் அவரது நண்பர்களுடன் காவல் நிலையம் சென்றது, காவல் நிலையத்தில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதலையெடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அச்சிறையில் அடைக்கப்பட்ட தந்தை ஜெயராஜும், மகன் பென்னிக்ஸ்-ம் அடுத்தடுத்து சிறையிலையே இறந்துள்ளனர். 

எந்தவொருக் குடிமகனும் எந்தவொரு வழக்குக்காகவும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றபோதும், கைது செய்யப்படுகின்றபோதும் உச்சநீதிமன்றத்தின் 15-க்கு மேற்பட்ட கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது நியதியாகும். 

மனித உரிமை மீறல்கள் எந்த பகுதியில் எவருக்கு நடந்தாலும் அது ஏற்புடையது அல்ல. எனவே, ஊரடங்கு உத்தரவை அமலாக்குவதில் தொடங்கி சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கைது, மரணம் ஆகிய பல்வேறு தொடர் நிகழ்வுகளை  மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்பு விசாரித்தால் மட்டுமே முழு உண்மை வெளிவரும், நியாயம் கிடைக்கும்.

எனவே இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக