புதன், 24 ஜூன், 2020

ரூ.15,000கோடி மதிப்பில், கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்



பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில், 24 ஜுன், 2020 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,  பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்த முடிவுகள்,  கொரோனோ பெருந்தொற்றுக் காலத்தில்,  பல்வேறு துறைகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் அமைப்பு

அண்மையில் அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா திட்ட  ஊக்குவிப்புத் தொகுப்பின் தொடர்ச்சியாக,  ரூ.15,000கோடி மதிப்பில், கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

பால்வளக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கூட்டுறவுத்துறை முதலீடுகளுக்கு உதவும் நோக்கில், ரூ.10,000 கோடி மதிப்பிலான  பால்வளக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை அமைக்க மத்திய அரசு, ஏற்கனவே அளித்துள்ளது.  எனினும், குறு,சிறு, நடுத்தரத் தொழில்துறையினர் மற்றும் தனியார் நிறுவனங்களையும் ஊக்குவித்து, அவர்களுக்கு உதவியளித்து, கால்நடை வளர்ப்புத் தொழிலில் மதிப்புக் கூட்டப்பட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. 

இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம்,  பால்வளம், இறைச்சி பதப்படுத்துதல், கால்நடைத் தீவனத் தாவர வளர்ப்புக் கட்டமைப்பு முதலீட்டிற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.  10 சதவீத  விளிம்புநிலைப் பணப்பங்களிப்புடைய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்,  பிரிவு-8இல் உள்ள தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் தொழில்முனைவோர் உள்ளிட்ட தகுதிவாய்ந்த பயனாளிகள்,  இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.   இவர்களுக்கு எஞ்சிய 90 சதவீத நிதி, வர்த்தக வங்கிகளால் கடனாக வழங்கப்படும். 

வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, மத்திய அரசு 4 சதவீத வட்டித் தள்ளுபடியும்,  எஞ்சிய மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 3 சதவீத வட்டித் தள்ளுபடியும் அளிக்கும்.  கடன் பெற்றதிலிருந்து 2 ஆண்டுகளுக்கு, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.  அதற்கடுத்த 6 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.   இது தவிர, நபார்டு வங்கிக் கட்டுப்பாட்டில்,  ரூ.750கோடி கடன் உத்தரவாத நிதியம் ஒன்றையும் மத்திய அரசு அமைக்கவுள்ளது.  இந்த நிதியத்திலிருந்து, குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட உச்சவரம்பு வரையிலான திட்டங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.   கடன்தாரர் பெறும் கடன் தொகையில் 25 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் கிடைக்கும். 

பலன்கள் :

கால்நடை வளர்ப்புத் தொழிலில் தனியார் துறை முதலீடு செய்வதற்கான பெரும் வாய்ப்புகள் உள்ளன.  கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம்,  தனியார் முதலீட்டாளர்களுக்கு வட்டித் தள்ளுபடி அளிக்கப்படுவதுடன்,  இந்தத் திட்டங்களுக்குத் தேவையான வெளிப்படையான முதலீட்டிற்குத் தேவையான மூலதனம் கிடைப்பதை உறுதி செய்வதோடு, முதலீட்டாளர்களுக்கு உரிய லாபம் கிடைக்கவும்/கடனைத் திருப்பிச் செலுத்தவும் உதவும்.   பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுக் கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள்,  தகுதிவாய்ந்த பயனாளிகள் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்.  

இந்தியாவில் உற்பத்தியாகும் பால்வளப் பொருள்களின் இறுதி மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் வரை விவசாயிகளுக்குக் கிடைப்பதோடு,  இத்துறையில் ஏற்படும் வளர்ச்சி, விவசாயிகளின் வருமானத்தில் நேரடி விளைவுகளை ஏற்படுத்தும்.  பால் விற்பனை மூலம்,  பால்பொருள்கள் சந்தையின் அளவு மற்றும், விவசாயிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தியாவதும், கூட்டுறவு மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் அளவு அதிகரிப்புடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.   எனவே, கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.15,000 கோடி முதலீடு, தனியார் முதலீட்டை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதோடு, விவசாயிகள் தங்களது வருமானத்தை அதிகரிக்க ஏதுவாக, உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான அளவுக்கு இடுபொருள் முதலீடு செய்ய  விவசாயிகளை  ஊக்குவிப்பதாகவும் அமையும்.   இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், சுமார் 35லட்சம் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் உதவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக