புதன், 24 ஜூன், 2020

தேங்காய்களை கொள்முதல் செய்வதற்காக, நார் உரிக்கப்பட்ட முற்றிய தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. - நரேந்திர சிங் தோமர்


நார் உரிக்கப்பட்ட முற்றிய தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு அறிவித்துள்ளது.

நார் உரிக்கப்பட்ட முற்றிய தேங்காய்க்கான 2020 பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டால் ஒன்றுக்கு 2,700 ரூபாய் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 2019 பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு 2571 ரூபாயாக இருந்தது. தற்போதைய விலை 5.02 சதவிகிதம் அதிகமாகும். 

இத்தகவலைத் தெரிவித்த வேளாண்மை, விவசாயிகள் நலன், கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு வகையான பயிர்களை விளைவிக்கும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார். இலட்சக்கணக்கான சிறு தேங்காய் விவசாயிகள் பயனடைவதை உறுதி செய்யும் வகையில் தேங்காய்களை கொள்முதல் செய்வதற்காக, நார் உரிக்கப்பட்ட முற்றிய தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தேங்காய் என்பது சிறு விவசாயிகள் விளைவிக்கும் பயிர் என்பதால், விவசாயிகள் அளவில், தேங்காயை, கொப்பரைத் தேங்காயாக மாற்றுவதற்கான வசதி ஏற்படுத்துவது என்பது இயலாது. எண்ணெய்க் கொப்பரைத் தேங்காய்க்கு 2020 பருவப்பயிருக்கு குவிண்டால் ஒன்றுக்கு 9960 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது நார் உரிக்கப்பட்ட தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களிடமுள்ள தேங்காய்களை கொப்பரையாக மாற்றுகின்ற வரை தங்களிடம் வைத்திருக்க  வசதி இல்லாத சிறு விவசாயிகள் தங்களிடமுள்ள தேங்காய்களுக்கு உடனடியாகப் பணம் பெறுவதை உறுதிசெய்ய முடியும் என்று திரு தோமர் கூறினார். பெருந்தொற்று காரணமாகவும், அதையடுத்து பொருள் வழங்கு தொடரில் ஏற்பட்ட இடையூறுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள தேங்காய் விவசாயிகளுக்கு இது நிம்மதி அளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக