புதன், 24 ஜூன், 2020

குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பு

கவுதம புத்தர் இயற்கை எய்திய பிறகு மகாபரி நிர்வானம் அடைந்த முக்கிய யாத்திரைத் தலம்  குஷிநகர்.  பவுத்த மதத்தினரின் மிகவும் புனிதமான யாத்திரைத் தலமாக கருதப்படும் இங்கு, உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்கள் வருகின்றனர்.     குஷிநகரைச் சுற்றி ஸ்ரவாஸ்தி(238கி.மீ), கபிலவஸ்து(190கி.மீ.) மற்றும் லும்பினி (195கி.மீ.)  உள்ளிட்ட வேறு சில புத்தமதத் தலங்களும் உள்ளதால்,  புத்தமதத்தினர் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலமாகவும் உள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள புத்தமத யாத்திரைத் தலங்களில் குஷிநகர் ஏற்கனவே முக்கிய இடமாகத் திகழ்கிறது.   எனவே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

உலகெங்கிலும் வாழும் சுமார் 530 மில்லியன் பௌத்தர்களுக்கு, புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய தலங்கள், முக்கியமான யாத்திரைத் தலங்களாகக் கருதப்படுகின்றன.  எனவே,  குஷிநகர் விமான நிலையத்தை, ‘சர்வதேச விமான நிலையமாக’  அறிவித்திருப்பது,  கூடுதல் விமானங்களை இயக்குவதற்கும்,  தொழில் போட்டி காரணமாக விமானப் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வதற்கும் வழிவகுப்பதோடு,  உள்நாட்டு/சர்வதேச சுற்றுலாவிற்கு ஊக்கம் அளித்து,  அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிப்பதாக அமையும். 

தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், பர்மா (மியான்மர்)  போன்ற நாடுகளிலிருந்து தினந்தோறும் சுமார் 200 முதல் 300 பக்தர்கள் குஷிநகர் வந்து வழிபாடு செய்கின்றனர்.  எனினும்,  இந்த சர்வதேச சுற்றுலாத் தலத்திற்கு வர நேரடி விமானச் சேவை ஏற்படுத்த வேண்டுமென்பது,  சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்தது.  

குஷிநகருக்கு நேரடியாக சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம்,  குஷிநகர் வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு,  அப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும்.   இந்த சர்வதேச விமான நிலையம், நாட்டில் ஏற்கனவே வளர்ந்துவரும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சூழலுக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக