வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தை இயற்றியது. அது, 2010 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளும் கல்வி பெறுவதில் சமவாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது தான் இலவச கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டம். இதன் மூலம் மாணவர்களின் இடைநிறுத்தல் பல மடங்கு குறைந்திருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் இலவச கல்வி வழங்குகிற அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீதம் இடங்களை பொருளாதாரத்தில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. இதன்படி, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட வில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் அறிக்கை தரும்படி தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பது காலதாமதம் ஆகி வருகிறது. அதே போல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஏப்ரல் 2 இல் தொடங்கி மே 29 இல் முடிவடைந்து விடும். ஆனால் நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குகிற மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இணைய வழி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் மாணவர்கள் சேர்க்கை காலதாமதமாவதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு பள்ளிகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான நிலை ஏற்பட்டு இருக்கிறது.
எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக