ஞாயிறு, 23 மே, 2021

யாஸ் புயல், வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படையின், கப்பல்கள், விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

யாஸ் புயலை முன்னிட்டு, இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

யாஸ் புயல், கிழக்கு கடலோர பகுதியை மே 26ம் தேதி தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, கடலோர காவல் படை மையங்கள் அனைத்தும் விழிப்புடன் உள்ளன. வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படையின், கப்பல்கள், விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இந்திய கடலோர காவல்படையின் தொலைதூர மையங்கள், வானிலை குறித்த எச்சரிக்கைகளை உள்ளூர் மொழியில் எம்எம்பி ரேடியோ மூலம் கடற் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், மீனவர்களுக்கும் ஒலிபரப்பி வருகிறது. வங்க கடல் பகுதியில் நுழையும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்க சர்வதேச பாதுகாப்பு வலைதளமும் செயல்படுத்தப்பட்டு ‘நேவ்டெக்ஸ்’ எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.


வங்க கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதி மற்றும் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் கடலோர பகுதிகளிலும், நாள் ஒன்றுக்கு  16 கப்பல்களையும், 3 விமானங்களையும் இந்திய கடலோர காவல்படை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

மேலும், கடலோர காவல் படையின் 31 பேரிடர் மீட்பு குழுக்கள் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் தயார்நிலையில் உள்ளன.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், தற்போது வரை, 254 படகுகள் பாதுகாப்பாக கரை திரும்புவதை இந்திய கடலோர காவல் படை உறுதி செய்துள்ளது. மேலும் 77 வர்த்தக கப்பல்கள், நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்களுக்கும் இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக