ஞாயிறு, 23 மே, 2021

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த குடும்பங்களிலும் யாருக்கும் அரசு வேலைகளும் வழங்கப்படவில்லை. - முனைவர் சுப. உதயகுமாரன் கடிதம்


மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் அவர்களுக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் எழுதும் ஒரு திறந்த கடிதம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியும், விசாரணையில் இருக்கும் ஒரு சில வழக்குகள் தவிர்த்து மற்ற வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற்றும், கைது செய்யப்பட்டவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான தடையில்லாச் சான்றிதழ் வழங்கியும், கைது செய்யப்பட்ட 93 பேருக்கு ரூ. ஒரு லட்சம் நிவாரணத்தொகை வழங்கியும் தூத்துக்குடி மக்கள் உள்ளங்களில் பால் வார்த்திருக்கிறீர்கள்.

மக்களுக்காக ஆட்சி நடத்துகிற ஒரு மக்கள் தலைவர் செய்யவேண்டியதை காலதாமதமின்றி அருமையாகச் செய்திருக்கிறீர்கள். தங்களுக்கும், தமிழ் நாடு அரசுக்கும் தமிழ் மக்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நலன்களை முன்னிறுத்தி இயங்கும் தங்களுடைய அரசு நிச்சயமாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுமென்றும், கொலை செய்தவர்கள் மற்றும் ஆணைப் பிறப்பித்தவர்கள் அனைவரையும் தண்டிக்குமென்றும், ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர உற்பத்தியை ஒருக்காலும் அனுமதிக்காது என்றும் தமிழ் நாடு மக்கள் அனைவரும் உறுதியாக, உளமார நம்புகிறோம், காத்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2014-ஆம் ஆண்டு இறுதி வரை கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்கு எதிராக நெல்லை மாவட்டம், இடிந்தகரை ஊரில் மக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் மீது ஏறத்தாழ 350 இட்டுக்கட்டிய வழக்குகள் சுமத்தப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் போன்றவற்றின் அறிவுறுத்தலின்படி, மொத்தம் 245 வழக்குகள் இரு தவணைகளாக திரும்பப் பெறப்பட்டன.

ஆனாலும் தேசத் துரோகம் (124A), தேசத்தின் மீது போர் தொடுத்தல் (121, 121A) போன்ற கொடியப் பிரிவுகள் அடங்கிய 37 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அவை வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும் 68 வழக்குகள் முதல் தகவல் அறிக்கை நிலையில் அப்படியே இருக்கின்றன. அண்மையில் நடந்த சட்டமன்றத்  தேர்தல் பிரச்சாரத்தின்போது, அப்போதைய முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து, அவ்வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு விண்ணப்பம் கொடுத்தோம். அவரும் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

அந்த காலக்கட்டத்தில் வள்ளியூரில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்வு ஒன்றில் பேசும்போது, தாங்களும் கூடங்குளம் போராட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். நாங்களும் அதை மனமுவந்து வரவேற்று, தங்களுக்கு நன்றி தெரிவித்தோம்.

மேற்படி வழக்குகளால் கடந்த பத்தாண்டுகளாக எங்கள் பகுதி இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கடவுச்சீட்டுப் பெற முடியாமல், வெளிநாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்ல இயலாமல், குடும்பத்தோடு வறுமையில் வாடி வருகின்றனர். அதே போல, காவல்துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெற முடியாமல், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கல்வி, வேலை வாய்ப்புக்களை இழந்துப் பரிதவிக்கின்றனர். எனவே தங்களின் வாக்குறுதியை நினைவூட்டி, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த மணப்பாடு ஊரைச்சார்ந்த திரு, அந்தோணி ஜான் குடும்பத்துக்கு மட்டும் அப்போதைய செல்வி. ஜெயலலிதா அரசு ஒரு சிறு நிவாரணத் தொகையை வழங்கியதே தவிர, அப்போது உயிர்நீத்த இடிந்தகரையைச் சார்ந்த திருமதி. ரோஸ்லின், திரு. சகாயம் மற்றும் கூடங்குளம் ஊரைச் சார்ந்த திரு. ராஜசேகரன் குடுமப்த்தினருக்கு எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை. மேற்படி நான்கு பேருடையக் குடும்பங்களிலும் யாருக்கும் அரசு வேலைகளும்  வழங்கப்படவில்லை. அந்நால்வரின் குடும்பங்களும் இன்றும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். எனவே மேற்படி குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கூடங்குளத்தில் முதலிரண்டு உலைகளே பெரும்பாலும் முடங்கிக்கிடக்கும் நிலையில், 3, 4 அணுஉலைகளை விரைந்துக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் 5, 6 உலைகளுக்கானப் பூர்வாங்க வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். அணுஉலைக் கழிவு மையம் அமைக்கும் வேலைகளையும் ரகசியமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29, 2021 அன்று தமிழ் நாட்டின் தென்கோடிக் கடலோரம் முழுவதும் லேசான நிலநடுக்கம் நிகழ்ந்ததையும் தங்கள் கவனத்துக்குக் கொணர விரும்புகிறோம்.

கொரோனா நோய்த்தொற்றால் நாடேப் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குள் மட்டும் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ரகசியமாகத் தனிமைப்படுத்திவைப்பதும், உண்மைகளை வெளியுலகிடமிருந்து மறைப்பதும் அணுஉலை நிர்வாகத்தால் சிரத்தையுடன் மேற்கொள்ளப்படுகிறது. மே 21, 2021 அன்று நெல்லை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட மொத்தம் 695 கொரோனா நோயாளிகளில் 267 பேர் இராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஒன்றியப் பகுதிகளில் வாழ்பவர்கள். இந்த மோசமான நிலைமைக்கு கூடங்குளம் அணுமின் நிலையச் செயல்பாடுகள் மிக முக்கியமானக் காரணங்களாக அமைகின்றன.

தமிழ் நாடு அரசு இதனை கவனமாகக் கண்காணித்து, அணுமின் நிலைய விரிவாக்கம் மற்றும் கட்டுமான வேலைகளை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டுமென்றும், கொரோனாப் பரவலைத் தடுக்க வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எங்களைப் போலவே தமிழ் நாடெங்கும் ஹைட்ரோகார்பன், காவிரி நதிநீர், சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஏராளமானோர் மீது வழக்குகள் போட்டு, மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கியது முந்தைய அரசு. மேற்படி பிரச்சினைகள் அனைத்திலும் மக்கள் சார்பு நிலைப்பாட்டை எடுக்கும் தங்களின் அரசு அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெற்று, அறவழிகளில் போராடிய மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக