செவ்வாய், 11 மே, 2021

இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுக்களுடன் சர்வதேச வர்த்தகம் தொடர்பாக மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆலோசனை

 

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலும், வர்த்தகத்துறை மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்குநரகத்தின் உயரதிகாரிகளும், ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்களுடனான கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு, சர்வதேச வர்த்தகம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

இதுபோன்ற சவாலான தருணங்களிலும் ஏற்றுமதியாளர்களின் சிறப்பான செயல்திறனை அமைச்சர் பாராட்டினார். இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதிகள் 2021 ஏப்ரல் மாதத்தில் 30.21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததாகவும், இது 2020 ஏப்ரல் மாதத்தின் 10.17 பில்லியன் அமெரிக்க டாலரை விட 197.03 சதவீதமும், 2019 ஏப்ரல் மாதத்தின் 26.04 பில்லியன் அமெரிக்க டாலரை விட 16.03 சதவீதமும் அதிகம் என்று அவர் குறிப்பிட்டார். 

அதேபோல 2021 மே மாதத்தின் முதல் வாரத்தில் ஏற்றுமதியின் மதிப்பு 2019-20 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 9% அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பெட்ரோலியம், எண்ணெய், மசகுப் பொருட்களைத் தவிர, இதர பொருட்களின் ஏற்றுமதி இந்தக் காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட 15% அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டுக்குள் லட்சிய இலக்கான 400 பில்லியன் டாலர் அளவிலான ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையை 2021 ஏப்ரல் மாதம் மற்றும் 2020-21 ஆம் ஆண்டு ஏற்றுமதியின் செயல்திறன் தந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். மருந்துகள், பொறியியல், வாகன உதிரி பாகங்கள், மீன்வளம், வேளாண் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு ஏராளமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக