சனி, 1 மே, 2021

உலகறிந்த விசயத்தை ஆதாரத்துடன் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது எப்படி அற்பகாரணமாகும்? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 உலகறிந்த விசயத்தை ஆதாரத்துடன் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது எப்படி அற்பகாரணமாகும்?

தேர்தல் ஆணையத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென நீதிமன்றத்தை நாடியது எப்படி விளம்பர நோக்கமாகும்? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 தமிழ்நாட்டில் வேறு எப்பொழுதும் இல்லாத அளவிற்குப் பணப்பட்டுவாடா தேர்தல் நடைபெற்றது. இது அடிப்படை  ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானது ஆகும். இதை இப்பொழுதே கட்டுப்படுத்த முடியவில்லை எனில் நாளடைவில் குணப்படுத்த முடியாத வியாதியாக மாறிவிடும் என்ற காரணத்தினால் தான் அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் வைத்திருந்தோம். நான் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியிலும், தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிட்டு இருந்தோம். கள அளவில் பணப்புழக்கம் எந்த அளவிற்கு வாக்காளர்களை ஊழல்படுத்தி உள்ளது என்பதை கண்கூடாகக் கண்டதன் அடிப்படையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் எவ்வாறெல்லாம் ”பணம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது’ என்ற தகவல்களின் அடிப்படையிலும் நாம் அவ்வப்போது தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வந்தோம். தேர்தல் ஆணையம் என்பது இயந்திரத்தனமான ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நத்தும் இயந்திரம் அல்ல, மாறாகத் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தும் பொருப்பு தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.

அரசு; நிர்வாகம்; நீதிமன்றம் மூன்றும் தனித்தனி அதிகாரம் பெற்ற அமைப்புகளாக இருப்பினும், அரசாலும், நிர்வாகத்தாலும் ஒரு குடிமகன் பாதிப்புக்கு ஆளாகும் பட்சத்தில் ”நீதிமன்றத்தின் மூலமே’’ தீர்வு காணச் செல்கிறான். அது தனி மனிதனுக்கும், ஒரு அமைப்பிற்கும், ஒரு கட்சிக்கும் பொருந்தும். புதிய தமிழகம் கட்சி ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் சுதந்திரம், சமத்துவம், சம உரிமைகளுக்காக போராடிவரும்  அமைப்பாகும்.

கடைக்கோடி மனிதனுக்கும்  ”அரசியல் அதிகாரம்” என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து புதிய தமிழகம் கட்சி இயங்கி வருகிறது. எனவே. இந்த நாட்டில் ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் குரல் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டுமென்றால் அவர்கள் தேர்தலில் பங்கேற்க வேண்டும். தேர்தல்களில் வாக்காளரிடத்தில் கொள்கை, கோட்பாடு, செயல் திட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஓட்டு கேட்பதற்குப் பதிலாக, மக்களின் வறுமை; அறியாமை ஆகியவற்றை பயன்படுத்தியும், அதிகார பலம்; ஆள் பலம்; பண பலத்தை வைத்து அச்சுறுத்தியும் வாக்குகள் விலைக்கு வாங்கும் மோசமான நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. இன்னும் சில வருடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது கட்டாயமாக்க வேண்டும் என்ற அவல நிலை கூட உருவாகலாம். அப்படி ஒரு மோசமான சூழல் உருவாகும் பட்சத்தில் ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் குரல் எந்த மக்கள் மன்றத்திலும் ஒலிக்காமல் போய்விடும். ”வல்லான் வகுத்ததே வாய்க்கால் ” என்பது போல் ஆகிவிடும். எனவே தான், இந்த தேர்தல் அப்பட்டமாக இருபெரும் கட்சிகளால் அரங்கேற்றப்பட்ட பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்தால் முழு விசாரணை செய்ய வேண்டும்; அதுவரையிலும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். பணப்பட்டுவாடா குறித்து பல செய்தித்தாள்களில் வந்த செய்திகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. எனினும் இந்த வழக்கின் உண்மை தன்மைக்குள் செல்லாமலும், நாம் கொடுத்துள்ள ஆதாரங்களைச் சிறிதும் கணக்கில் கொள்ளாமலும் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் எவ்வித தவறும் நடக்கவில்லை என்பது போன்ற ஒரு கருத்தை உருவாக்கும் பொருட்டு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததோடு அல்லாமல், தேவையில்லாமல் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது. அதாவது ”அற்ப காரணமாம், விளம்பரத்திற்காக வழக்கு போட்டுள்ளோமாம்” .

உலகமறிந்த விஷயத்தை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் எடுத்து நீதி கேட்பது எப்படி அற்ப காரணமாகும்? எல்லோரும் வாய்மூடி கிடக்கின்ற பொழுது, இன்று இல்லை, என்றாவது இதற்கு ஒரு விடிவுகாலம் வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, தேர்தல் ஆணையத்திற்கு பல மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிமன்றத்தை நாடியது எப்படி விளம்பர நோக்கமாகும்?

இம்மண்ணையும்; மக்களின் மண்ணுரிமை, வாழ்வுரிமை, மனித உரிமையை மீட்கப் போராட்டமே வாழ்க்கை என 50 ஆண்டுகாலமாக போராடி ஒவ்வொன்றையும்  மீட்டு வருகிறோம். இந்திய நீதிமன்றங்களில் எளிய மக்கள் எளிதாக நீதியைப் பெற முடியாது என்பதால் தான், எப்பொழுதாவது நீதிமன்ற படிக்கட்டை ஏறுகிறோம். அதற்கும் உள் நோக்கம் கற்பிப்பதிலும், மனுவை தள்ளுபடி செய்வதும் இயற்கை நியதியாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக