திங்கள், 10 மே, 2021

மக்கள் ஏற்கனவே ஒன்றரை வருடமாக மிகப்பெரிய அளவிற்கு பொருளாதார ரீதியாகவும், மனோரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மேலும் அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும்.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

முழு ஊரடங்கு தீர்வு அல்ல,

தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

கடந்த ஒன்றரை வருடமாக உலகையே அவதிக்குள்ளாகி வருகின்ற கரோனா இந்தியாவையும் ஆட்டிப்படைத்தது. தமிழகத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் அவற்றின் பாதிப்புக்கு ஆளானார்கள். கடந்த அக்டோபருக்கு பிறகு, மெல்ல மெல்லக் குறைந்த அதன் தாக்கம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மிகவும் சொற்பமானவர்களுக்கு மட்டுமே கரோனா தாக்குதல் ஏற்பட்டது. பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, மீண்டும் வேகம் எடுத்த கரோனா இரண்டாவது அலையாலும், உருமாறிய கரோனா தாக்குதலாலும் இப்போது தமிழகத்தில் தினமும் 25,000 முதல் 30,000 பேர் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் பாதிப்பு இன்னும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வார காலமாக சலூன் கடைகள் முதல் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் வரை மூடப்பட்டிருக்கின்றன. காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் வாங்குவதற்கு மட்டும் 12 மணி வரை அனுமதி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வரும் 10 ஆம் தேதி முதல் இரு வாரக் காலத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முழு ஊரடங்கு கரோனாவிற்கான சிகிச்சையும் அல்ல, அதற்கான தடுப்பும் அல்ல. மக்கள் அதிகமாகக் கூடக் கூடிய சமூக விழாக்களுக்கான கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது வேறு; ஒட்டுமொத்தமாக முழு முடக்கம் என்பது வேறு.

இந்தியாவில் முழு முடக்கம் முடிந்த பிறகு தான், கரோனா வேகம் அதிகரித்தது. கரோனா ஏற்பட்ட துவக்கக் காலத்தில் இது எப்படி தொற்றுகிறது? இதற்கான சிகிச்சை முறைகள் என்ன? பரிசோதனை முறை என்ன? என்பதைக் கண்டறிவதற்காக அமலாக்கப்பட்டது தான்  முழு ஊரடங்கு ஆகும். ஏற்கனவே ஒன்றே வருட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கிப் போய்விட்டன. சிறு வணிக நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட unorganized labours எனும் முறைசாரா தொழிலாளர்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், வேன்கள் என அனைவருமே மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புக்கும் ஆளானார்கள்; கடனாளிகளும் ஆனார்கள். அதாவது நிரந்தர பணியில் உள்ள மத்திய மற்றும் மாநில ஊழியர்கள்,  கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை தவிர, 90% மக்கள் மிகப் பெரிய சிரமத்திற்கு ஆளானார்கள்.  முழு அடைப்பு வேண்டும் என்று சிலர் தொடர்ந்து தவறான ஆலோசனை கூறுவதால், அதை மாநில அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு அமலாக்குவது ஏற்புடையது அல்ல.

தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் பரப்புரையில் மே 02 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு இருக்காது என்று அறிவித்திருந்தார். ஆனால், இன்றைய அறிவிப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ரிசர்வ் பேங்க் மற்றும் இந்திய நிதி அமைச்சகம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முழு ஊரடங்கு தேவையில்லை என கூறியிருக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் சிறிய அளவில் தேவைக்கேற்ப சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளது. 

புதிதாகப் பொறுப்பேற்ற அரசுக்கு இது மிகப்பெரிய சுமையும், சவாலும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மருத்துவ ரீதியாக அணுக வேண்டிய ஒரு விஷயத்தை முழு முடக்கம் என்று பொருளாதாரத்தை முடக்குவது தீர்வு அல்ல; மக்கள் ஏற்கனவே ஒன்றரை வருடமாக மிகப்பெரிய அளவிற்கு பொருளாதார ரீதியாகவும், மனோரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மேலும் அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே, இன்றைய அறிவிக்கப்பட்டுள்ள 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிப்பைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக