செவ்வாய், 4 மே, 2021

நாம் நியாயத்திற்காகக் குரல் கொடுத்திருக்கிறோம்; அநியாயங்களைத் தட்டிக் கேட்டு இருக்கிறோம்; அடாவடித்தனத்தை எதிர்த்துப் போர் புரிந்து இருக்கிறோம்; ஊழல்களை தோலுரித்துக் காட்டி இருக்கிறோம்.- டாக்டர் K. கிருஷ்ணசாமி



இதுவே முடிவல்ல,  இனிதான் தொடக்கம்.!

கடந்த ஏப்ரல் 06 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. புதிய தமிழகம் கட்சி போட்டியிட்ட 60 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு  எண்ணிக்கைக்கு செல்லக்கூடிய வீரர்களை வாழ்த்துகிறேன். வெற்றிப் புன்னகையோடு நீங்கள் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். வெற்றி என்றவுடன் எண்ணப்பட்ட வாக்குகளில் கூடுதலான வாக்குகள் பெறக்கூடியவர்கள் பெற்றுவரும் சான்றிதழ் வெற்றியை மட்டும் நான் சொல்லவில்லை. அதுவும் கூட நடக்கலாம். ஆனால், நடந்து முடிந்தது ஜனநாயக ரீதியானது; நேர்மையானது என்று சொன்னால் முதன்மை வாக்குகள் பெறுவது ஒன்றும் பெரிய காரியமாக இருக்காது. நடந்து முடிந்தது தேர்தலே அல்ல, கொள்கை மற்றும் கோட்பாடுகளை என்றோ; எங்கேயோ விற்று விட்டவர்கள் தேர்தல் சந்தையில் வாக்குகளை விலைக்கு வாங்கிய நேர்மையற்ற, நியாயமற்ற, நாணயமற்ற தேர்தல் இது. இந்த மீன் சந்தை மார்க்கெட்டில் உண்மை, உழைப்பு, நேர்மை, நியாயத்திற்கு எவ்வித மதிப்பும் இருக்காது. எவன் ஒருவன் அதிகமாக ஏலம் கூறியிருக்கிறானோ, அவனுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கும்.

 நாம் நியாயத்திற்காகக் குரல் கொடுத்திருக்கிறோம்; அநியாயங்களைத் தட்டிக் கேட்டு இருக்கிறோம்; அடாவடித்தனத்தை எதிர்த்துப் போர் புரிந்து இருக்கிறோம்; ஊழல்களை தோலுரித்துக் காட்டி இருக்கிறோம்; கொண்ட கொள்கையில், இலட்சியத்தில் உண்மையாக வாழ்ந்திருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் நாம் கொண்ட கொள்கையும், கொண்ட இலட்சியத்தையும் விட்டு கொடுத்ததில்லை. நாம் கொள்கை, கோட்பாடு, இலட்சியங்களை விட்டிருந்தால் நமது மடி நிறையவும், பை நிறையவும் பணம் இருந்திருக்கும். சந்தைக்கு வந்த சரக்குகளை-  வாக்குகளை நாமும் வாங்கி இருக்கலாம். அவற்றைக் கொண்டு வெற்றி பட்டங்களுடன் வெளியே வரலாம். ஆனால், எந்த இலட்சிய புருஷர்களும் அதைச் செய்ய மாட்டார்கள்; நாமும் அதை செய்யவில்லை.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்தது என்பதை இந்த மாநிலம் அறியும்; மாநிலம் தாண்டி தேசம் அறியும்; தேசம் தாண்டி உலகம் அறியும். அழுகிய மீன் நாற்றத்தைக் கோணிப்பையால் மூடி மறைக்க முடியுமா? வாக்குரிமை சந்தைப்படுத்தப்பட்டதைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் அதைச் செய்யவில்லை. வரலாற்றில் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த ஜனநாயக படுகொலைக்குத் துணை போன இந்தியத் தேர்தல் ஆணையமும்,         துணை போன அரசு நிர்வாகமும், ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பதில் சொல்லும் காலம் கட்டாயம் வரும். எனவே, இந்த நாணயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தாலும், நாம் பெறும் வாக்குகள் தான்  உண்மையான வெற்றியாகும். ஒருவேளை இதையும் மீறி நாம் வெற்றி பெறுகிறோம் என்றால் அது அதிசயத்திலும் அதிசயமாக தான் இருக்க முடியும்! ஆனால், அப்படியெல்லாம் நாம் எளிதாகக் கணக்குப் போட்டு விடக்கூடாது. அவர்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து; அடிபட்டு; உதைபட்டு; எண்ணற்ற அவமானங்களைச் சகித்துக் கொண்டு அவர்களின் அடையாளத்திற்காகவும்; பெருமைகளுக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்டு இருந்தாலும் கூட, நமக்கு காட்ட வேண்டிய விசுவாசத்தை விட, ஆசை வார்த்தைகளுக்கும்; பொய்யுரைகளுக்கும்; ரூபாய் 500 மற்றும் 1000 ஆகியவற்றிற்கு விசுவாசம் அதிகமாக இருந்திருக்கக்கூடும் என்பதுதான் இன்றைய நிலை.

இந்த வாக்குச்சாவடியில் இவ்வளவு எதிர்பார்த்தோம்? அந்த வாக்குச் சாவடியில் அவ்வளவு எதிர்பார்த்தோம்? என்று யாரும் ஆதங்கப் படவேண்டாம். ஏப்ரல் 04 ஆம் தேதி மாலை 04 மணி வரையிலும் நிமிர்ந்து இருந்த அவர்களது தலைகள், ரூபாய் 500,  1000 கைக்கு வந்து சேர்ந்தவுடன் குனிந்துவிட்டன, அவை ஏப்ரல் 06-ஆம் தேதி மாலை 06 மணி வரை நிமிரவே இல்லை. அவர்கள் தலை நிமிர வேண்டும் என்பதற்காகவும், வாழ்நிலை உயர வேண்டும் என்பதற்காகவும், நானும் நீங்களும் எத்தனையோ இடங்களில் தலைகுனிந்து இருக்கிறோம்; பல பேர் தலையைக் கூட சாய்த்திருக்கிறார்கள். ஆனால் ரூ 500க்காக வாக்குகளை  மட்டுமல்ல, தங்களது சுய மரியாதையையும், வாழ்க்கையையும் விற்றுவிட்டவர்கள்; அழித்துக் கொண்டவர்கள் ஒருபோதும் நம்மை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

 ஒரு பிரசவத்தில் தாய்க்கும், குழந்தைகளும் ஆபத்து வருகிறது என்றால் இதில் ஏதாவது ஒரு உயிரைத் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் எந்த ஒரு மருத்துவரும் தாயையே காப்பாற்ற முயற்சி செய்வார்கள்; முனைப்பு காட்டுவார்கள். ஏனென்றால் தாய் உயிரோடு மீண்டு வந்தால் இன்னும் ஒரு குழந்தை அல்ல, பல குழந்தைகளை கூட பெற்றுக் கொள்ள முடியும். அதே போலத்தான் ஒரு மருத்துவராக இருந்து எப்படி தாயைக் காப்பாற்றுவேனோ, அதேபோல இன்று தாயாகிய புதிய தமிழகம் கட்சியை காப்பாற்றி இருக்கிறேன். அந்த தாயால் எஞ்சியிருக்கும் குழந்தைகளையும் காப்பாற்ற முடியும், வேண்டுமென்றால் இன்னும் பல குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

2017 ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் என தேர்தல் அறிவிப்பு வரும் பிப்-26 வரை போர்க்களத்திலேயே தான் இருந்தோம். தேர்தலுக்காக நாம் நம்மை ஆயத்தப்படுத்த இயலவில்லை. வெறும் பெயர் மாற்றம் என்று சொன்னால் இத்தனை போராட்டங்கள் தேவை இருந்திருக்காது. ஐந்து வருட காலம் புதிய தமிழகம் கட்சியின் உழைப்பும், பொருளும் விரயமாகி இருக்காது. எந்த அரசியல் கட்சியுடனும், சமுதாயத்துடனும் நமக்கு பகை வந்திருக்காது. நாமும் மேம்போக்காக வெற்று வார்த்தைகளைப் பேசிவிட்டு அரசியல் களமாடிப் போயிருக்கலாம். நாமும் எந்த அணியுடனும், எவ்வித சிக்கலும் இல்லாமல் கைகோர்த்துப் போயிருக்க முடியும். ஆனால், பட்டியல் வெளியேற்றம் தான் ஒட்டுமொத்த கோரிக்கை என்று மேடைகளில் ஏறி பிரகடனப்படுத்தி விட்டு, பெயர் மாற்ற அறிவிப்பு வந்தவுடன் ஆளாளுக்கு மாலையுடனும், சால்வைகளுடனும் சரணாகதி அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களெல்லாம் காய்ந்த சருகுகள் சிறிய காற்றுக்கு கூட களத்தில் நிற்க முடியாது. சிறுபொறி நெருப்பிலும் பொசுங்கிப் போகக் கூடியவர்கள்.

  ஆனால், புதிய தமிழகம் கட்சிக் கொள்கையில் இரும்புப் பாலங்கள்; கோட்பாட்டில் இமயமலை. எனவே, மற்றவர்களைப் போல நாம் கைவிட்டு விட்டுச் செல்ல முடியாது. கடைசிவரை போராடினோம்; போராடிக் கொண்டிருக்கிறோம். ஆறு அடையாளங்களை அழித்தது, அந்த அடையாளங்கள் மோசமானது என்பதற்காக அல்ல! ஒற்றை அடையாளத்தில் உலகெங்கும் வாழும் அனைவரையும் சமூகமாக ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். இந்த சமூகம் ஏற்றம் அடையவே கூடாது என்று திட்டமிட்டவர்கள், அதற்காக சதி செய்தார்கள். சுயமரியாதையையும், நமது தனித்துவத்தையும் நிலை நாட்டத் தேர்தல் என்ற பணப்புழக்க அமிலக் கரைசலில் கரைந்து போகாமல் மின்னுகின்ற தங்கமாய் நாம் என்றும் ஜொலிக்கிறோம். சமூகத்தின் ஒற்றுமையைச் சீர்குலைத்து வேட்டையாடக் காத்திருந்த ஓநாய் கூட்டங்களுக்கு காட்டிக் கொடுப்பதற்கு என்றே உருவாக்கப்பட்ட தலைவர் கூட்டங்கள் என அனைத்தையும் தாண்டி 60 சிங்கங்கள் புதிய தமிழகம் கட்சியின் அடையாளத்தோடு தேர்தல் களத்தில் நின்றதே மிகப்பெரிய வரலாறு. ஐந்து லட்சம் ரூபாய் கூட செலவழிக்க முடியாதவர்களே பெரும்பாலான புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள். நேற்று தோன்றிய கட்சிகள் கூட தேர்தல் களத்தில் 30 லட்சம் முதல் ஒரு கோடி வரை செலவழித்த பொழுது, நமது வேட்பாளர்களர்களின் தேர்தல் செலவிற்கு கட்சியிலிருந்து குறைந்தது மூன்று லட்சம் ரூபாய் கூட கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மனதை வாட்டியது. ஆனால் சமுதாயத்திற்குப் பெருமை சேர்க்கச் செலவழித்த தொகைகளை; உழைத்த உழைப்பை, பொருளைச் சேர்க்கப் பயன்படுத்தி இருந்திருந்தால் நாமும் தேர்தல் களத்தில் இன்னும் வேகமாக, வலுவாகக் களமாடி இருக்க முடியும்.

இந்த தேர்தலை பொருத்தவரை புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடக் காரணம் பட்டியல் வெளியேற்றுவதற்கான வாக்கெடுப்பாக கருதுகிறோம் என்று சொல்லியிருந்தோம். 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் பட்டியல் வெளியேற்றத்தை நாம் பிரகடனம் செய்தோம். புதிய தமிழகம் கட்சி அதிலிருந்து எவ்விதத்திலும் பின்வாங்காமல் இன்று வரை முன்னே செல்கிறது.  அதைப் புரிந்து கொண்டவர்கள் நம் பின்னால் வருகிறார்கள்! திருவிழாக்களுக்குப் பெற்றோர்கள் குழந்தைகளோடு செல்வார்கள். பெற்றோர் கையை பிடித்துக் கொண்டே வரும், குழந்தை பத்திரமாக வீடு வந்து சேரும். பெற்றோரிடமிருந்து இருந்து சற்று விலகிச் செல்லும் குழந்தைகள் சிறிது காலம் காணாமல் போய்விடும், பிறகு வீடு வந்து சேரும். சில குழந்தைகள் நிரந்தரமாகக் காணாமல் கூட போய்விடும்.

கடந்த 30 ஆண்டுக் காலம் நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றிருக்கிறோம். அதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு இருக்கிறோம். புதிய தமிழகம் கட்சியின் கொள்கைகளைப் பற்றிப்பிடித்து கொண்டிருப்பவர்கள் நிச்சயமாகப் பத்திரமாக வீடு வந்து சேர்வார்கள். தவறியவர்கள் சிறிது காலம் கழித்து வந்து சேருவதும் உண்டு, சிலர் நிரந்தரமாக காணாமல் போவதும் உண்டு.

நடந்து முடிந்த தேர்தல் மோசடியின் உச்சக்கட்டம் என்பதை நாம் பல முறை, பல இடங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறோம். இந்த தேர்தலை இரத்து செய்ய வேண்டும்; வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கக்கூடாது என்றும் குரல் கொடுத்திருக்கிறோம். கூட்டுக் களவாணிகள் இதை நிச்சயம் நிறுத்த மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நடைபெற்றது ஜனநாயக தேர்தல் அல்ல என்பதை நிச்சயம் நிரூபித்துக் காட்டுவோம். இன்று அவர்கள் வாக்குகளை எண்ணி முடிவுகளைக் காட்டி வெற்றிபெற்றோர் என அறிவித்துக் கொள்வார்கள். இதுவே முடிந்த முடிவல்ல, இது வேறொன்றிற்காண முடிவும்; இன்னொன்றிற்கான தொடக்கமும் ஆகும்.

பொய்யையும், புரட்டையும் சொல்லி ஆட்சிக்கு வருவது; ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து துறைகளையும் கைவசம் வைத்துக்கொண்டு சுரண்டி தீர்ப்பது; அதில் வரும் பணத்தை வைத்து கட்சியை வளர்ப்பது; கோடான கோடி மக்களை நிரந்தரமாக அறியாமையிலும், ஏழ்மையிலும் வைப்பது; அதைப் பயன்படுத்திக் கொண்டு ஏழை, எளிய மக்களின் வாக்குகளை எளிதாக விலைக்கு வாங்குவது என்பது இன்றைய கட்சிகளின் வாடிக்கையாகவும், வழக்கமான கொள்கையும், கோட்பாடும் ஆகிவிட்டன.

  எனவே, பணப்பட்டுவாடா செய்து, எந்த ஒரு கொள்கையும் கோட்பாடும் இல்லாமல் நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் முடிவானது அல்ல, தமிழகத்தை பாதுகாப்பதற்கான, தமிழகத்திற்கு நல்லதொரு விடிவுகாலத்தை உருவாக்குவதற்கான தொடக்கம் இனிமேல்தான் தொடங்க இருக்கிறது. புதிய தமிழகம் கட்சியினர்  வாக்குகள் எத்தனை என்பதைப் பற்றி சிறிது கூட கவலைப்பட வேண்டாம். கழனியிலே விளைந்தவை எல்லாம் களத்திற்கு வந்து சேர்வதில்லை, களத்திற்கு வந்து சேர்ந்த எல்லாம் வீடு வந்து அடைவதில்லை. நல்ல நெல்மணிகள் மட்டுமே வீடு வந்து சேரும். அந்த வகையில் காசு பணத்திற்கு விலை போகாதவர்கள், கட்சி விசுவாசிகள்/கொள்கை விசுவாசிகள் எத்தனை பேர் உள்ளார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்கான அரிய வாய்ப்பு இது. நமது ஆட்டம் இனி தான் தொடங்க இருக்கிறது, நம்பிக்கையுடன் சென்று வாருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்.!!

நாளைய தமிழகம் நமதே!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர், 
புதிய தமிழகம் கட்சி.
02.05.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக