செவ்வாய், 27 ஜூலை, 2021

பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டவர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு எடுக்க மறுப்பது ஏன்? - கி.வீரமணி



பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டவர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி - பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு எடுக்க மறுப்பது ஏன்? - கி.வீரமணி

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குக்கு இது அவசியம் தேவை
தி.மு.க. அரசு தனியே ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளட்டும்!

நம் நாட்டில் மட்டும்தான் பிறப்பின்  அடிப்படையில் மனிதர்களைப் பேதப்படுத்தி பிரித்து வைக்கும் ஜாதி முறை, சனாதனத்தின் பாதுகாப்பு அரணான ஹிந்து மதம் என்ற வேத மதத்தின் மூலக் கல்லாக - வருணாசிரம தர்ம முறை என்ற பெயரில் வேதங்கள், சாஸ்திரங்கள், சட்டங்கள்மூலம் பாதுகாக்கப்பட்டு, இன்றும் அதன் தாக்கத்தினால் படிப்பு, உத்தியோகம் உயர்ஜாதியினரின் ஏகபோகமாக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பெரும்பான்மையோருக்கு பாதிப்பாக உள்ளது.

மனுமுதல் முதல் ஜாதியின் பெயரால் ஜாதி சங்கம் நடத்தும் தலைவர்கள் வரை.

ஜாதியை தாங்களே உருவாக்கியதாகக் கூறும் கடவுள்களும் மனுதர்மமும், பகவத் கீதையும் ஆதாரபூர்வமாக இந்தக் கொடுமையை நியாயப்படுத்துவது மறுக்க முடியாத உண்மை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘ஜாதி’ (Caste) என்ற சொல் 18 தடவை கையாளப்படுகிறது!

நாட்டில் இன்னும் ஜாதி அடிப்படையில்தான் பல திருமணங்கள் நிச்சயிக்கப்பட தனித்தனி ஜாதிக்கென திருமண நிலையங்களே - சற்றும் கூச்சநாச்சமின்றி வெளிப்படையாக விளம்பரப்படுத்திடும் வியாபாரமாக நடைபெறுகின்றன.
ஜாதிச் சங்கங்களும் அவற்றையே படிக்கட்டாக, ஏணியாக ஆக்கி, அரசியல் நடத்தும் தலைவர்களும் அரசியல் அரங்கில் ஏராளம் உள்ளனர் என்பதும் யதார்த்தமாகும்!

ஒரே நாடு, ஒரே மதம் என்போர் ஒரே ஜாதி என்று கூறத் தயாரா?

இந்நிலையில், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு என்றெல்லாம் கூறி, அவசர அவசரமாக பல சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான - ஆர்.எஸ்.எஸினால் வழி நடத்தப்படும் பா.ஜ.க. ஒன்றிய அரசு ‘ஒரே ஜாதி’ என்று பிரகடனப்படுத்தி, ஜாதியை ஒழித்து, ஏன் மக்களிடையே ஒருமைப்பாட்டை உருவாக்கக்கூடாது என்று நாம் தொடர்ந்து எழுப்பும் கேள்விக்கு இதுவரை பதிலே தரப்படவில்லை!

இந்நிலையில், கரோனா காலத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு - மீண்டும் தொடங்கவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (சென்சஸ் 2021 இல்) ஆதிதிராவிடர் (எஸ்.சி.,), பழங்குடியினர் (எஸ்.டி.) தவிர இதர பிற்படுத்தப்பட்டவர்களிடம் ஜாதி ரீதியான கணக்கெடுப்பு செய்வதில்லை என்பது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு என்று ஒன்றிய இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமான பதில் அளித்திருக்கிறார்!
இது எவ்வகையில் நியாயம்?

இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவையே!

ஜாதிக் கொடுமையால் - பல்லாயிரம் ஆண்டுகளாக பல கோடி மக்கள் ஒடுக்கப்பட்டு, உடல் உழைப்புக்காரர்களாக மட்டுமே ஆக்கப்பட்டு, கல்வி, உத்தியோக வாய்ப்புகள் கதவடைக்கப்பட்டதையும் மாற்றுவதே சமூகநீதி - இட ஒதுக்கீடுமூலம் கடந்தகால சமூக அநீதியின் விளைவைப் போக்கி, சம வாய்ப்பு, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடத்தான் இட ஒதுக்கீடு.

அதனை அரசமைப்புச் சட்டப்படி பெரும்பான்மையான பாதிப்புக்குள்ளாகியுள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி ஜாதியினரைப் போல ஜாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுத்து, அவர்களுக்கு தற்போது அளிக்கும் இட ஒதுக்கீடு மிகை அல்ல;போதுமானதும் அல்ல என்று  உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்,  சில உயர்ஜாதி ஊடகத்தவர்களுக்குப் புரிய வைக்க ஒரே வழி, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ள புள்ளிவிவரங்கள்தானே!

அதை அப்படி செய்யக்கூடாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு கூறுவது, அந்த ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்ட) மக்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் ஒரு அநீதி அல்லவா?

அதுவும் தானும் பிற்படுத்தப்பட்ட ஜாதிதான் என்று காட்டிக்கொண்ட ஒருவர்,  பிரதமராக இரண்டாவது முறையும் இருக்கும் நிலையில் - அவர்களுக்கு மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மறுப்பது எவ்வகையில் நியாயம் - இது மிகப்பெரிய அநீதி அல்லவா?

‘தலைக்கு ஒரு சீயக்காய்; தாடிக்கொரு சீயக்காயா?’ என்று தந்தை பெரியார் கூறும் உவமைதான் நினைவிற்கு வருகிறது!

தமிழ்நாடு அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும்!

பீகார், ஒரிசா, மராத்தியம், தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களும், அரசுகளும் ஜாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்துகையில், ஒன்றிய அரசு அதனை மறுக்கலாமா?

ஒன்றிய அரசு தனது கொள்கை முடிவினை மறுபரிசீலனை செய்ய முன்வரவேண்டும். அதன் நெருப்புக்கோழி மனப்பான்மையால் பல கோடி பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஜாதிவாரியாக கணக்கெடுக்க - மாநில அரசு சார்பில் - முந்தைய அ.தி.மு.க. அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் குலசேகரன் அவர்கள் தலைமையில், பல அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் துணையோடு - ஜாதிவாரி கணக்கெடுப்புக் குழுவை நியமித்த நிலையில் பொதுத் தேர்தல் குறுக்கிட்டது.

நீதிபதி ஜஸ்டீஸ் குலசேகரன் ஆணையத்தை தொடர வைத்து..

அந்தக் குழுவின் பதவிக்காலம் (21.12.2020 அன்று நியமிக்கப்பட்ட அதன் பதவிக் காலம் 20.6.2021 தேதியோடு முடிவடைந்து இருப்பதால்) அதைத் தொடர வைத்து, அறிக்கை  வழங்க - தமிழ்நாட்டில் உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பை முடிக்க புதிய தி.மு.க. அரசு அதற்கான மேலும் ஒரு ஆறு மாதம் (ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பதவி நீட்டிப்பு 11 ஆவது முறையாகத் தந்ததுபோல) ஜஸ்டீஸ் குலசேகரன் ஆணையத்தை இயங்க வைத்து, கணக்கெடுப்பு பெறுவதன்மூலம் நீதிமன்றங்களில் வழக்குகள் வரும்போது, இந்த கணக்கெடுப்பைப் பயன்படுத்த உதவியாக அமையும்; மற்றும் பல விஷயங்களுக்கு ஜாதிவாரியாக தமிழ்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பயன்படக்கூடும்.

அக்குழுவினர் போலித்தனமான ஜாதி எண்ணிக்கையினை பெருக்கிக் காட்டுவோரிடம் எச்சரிக்கையுடன் பணி செய்து, உண்மைகள் கள பலியாகாமல் காப்பதுவும் முக்கியமாகும்; தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் அவர்கள் இணக்கமாக சிந்திப்பாராக!

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இது அவசர, அவசியம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக