வியாழன், 29 ஜூலை, 2021

அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ இடங்களில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. - வானதி சீனிவாசன்


அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) நடப்பாண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்து வந்தன. 

பட்டியலின (SC) , பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றம், மாநில, மத்திய அமைச்சரவைகளில் உரிய இடங்களை வழங்கி உண்மையிலேயே சமூக நீதியை நிலைநாட்டி வரும் இயக்கம் பாஜக மட்டுமே. கடந்த 7-ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 12 பேர், பழங்குடியினர் 8 பேர், பெண்கள் 11 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாய்ப்பளித்திருப்பதே இதற்கு சாட்சி.

மருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2020-ல் பதில் மனு தாக்கல் செய்த மத்திய பாஜக அரசு, “மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான தரவுகளை சேகரித்து அது தொடர்பாக முடிவெடுக்க ஓராண்டு கால அவகாசம் தேவை" என்று  கூறியிருந்தது.

அதன்படி தற்போது அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவக் கல்வி இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து பிரதமராக வந்துள்ள திரு. நரேந்திர மோடி, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உணர்வுகளை மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரச்சினைகளையும், துன்பங்களையும் புரிந்து கொண்டு வந்து இட ஒதுககீட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். 

இதன்மூலம் இளநிலை, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் 5,500-க்கும் அதிகமான OBC, EWS 5பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்திய சமூக நீதி வரலாற்றில் இது மாபெரும் புரட்சியாகும். இந்நாள் வரலாற்றின் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.  இந்த நடவடிக்கை மூலம் சமூக நீதியை நிலைநாட்டியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், பாஜக தேசிய மகளிரணி சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக