ஞாயிறு, 25 ஜூலை, 2021

‘‘என்றும் பசுமைமாறா வடகிழக்கு’’ மரங்கள் நடுவதற்காக, ஒட்டுமொத்த சிரபுஞ்சியையும் அசாம் ரைபிள்ஸ் (Assam Rifles) படைப்பிரிவு தத்தெடுக்கவுள்ளது.- திரு.அமித்ஷா


 மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, மேகாலயா பயணத்தின் 2வது நாளில், சோஹ்ரா(சிரபுஞ்சி) என்ற இடத்தில் பசுமை சோஹ்ரா காடு வளர்ப்பு பிரச்சாரத்தை இன்று தொடங்கிவைத்தார். பெருநகர  சோஹ்ரா குடிநீர் விநியோக திட்டத்தையும், திரு அமித்ஷா தொடங்கிவைத்தார்.  

இந்நிகழ்ச்சியில், வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, இணையமைச்சர் பி.எல்.வர்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், மேகாலயா முதல்வர் திரு கான்ரட் சங்மா உள்பட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ‘‘என்றும் பசுமைமாறா வடகிழக்கு’’ என்ற கோஷத்தை எழுப்பிய திரு அமித்ஷா, காடு வளர்ப்பு, மற்றும் மரம் நடுதலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.  முன்பு சிரபுஞ்சியில் ஆண்டு முழுவதும் மழை பெய்ததாகவும், வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக காடுகள் அழிக்கப்பட்டதால், இன்று நிலைமை மாறிவிட்டதாகவும் திரு. அமித்ஷா கூறினார். சிரபுஞ்சியை மீண்டும் பசுமையாக்கும் லட்சிய திட்டம் இன்று தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். மரங்கள் நடுவதற்காக, ஒட்டுமொத்த சிரபுஞ்சியையும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு தத்தெடுக்கவுள்ளதாக திரு.அமித்ஷா தெரிவித்தார்.

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணியில், துணை ராணுவ படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், நமது நாடு பாதுகாப்பாக உள்ளது எனவும்,  கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள், சுற்றுச்சூழலை  மேம்படுத்தும் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் திரு அமித்ஷா கூறினார்.  அவர்கள் இதுவரை 1.48 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அவற்றில் 1.36 கோடி மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன. இந்தாண்டில், நாட்டின் பல பகுதிகளில்,  ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் 1000 ஹெக்டேரில், 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

புவிவெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் இன்று போராடி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடு முழுவதும் அதிகளவிலான சமையல் கேஸ் சிலிண்டர்களை விநியோகிப்பதன் மூலம், கார்பன் உமிழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி குறைத்துள்ளார் எனவும், நீர்மின்சக்தி மற்றும் சூரிய மின்சக்தியில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளதாகவும் திரு அமித்ஷா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சரின் முயற்சியில் தொடங்கப்பட்ட மரம் நடுதல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மத்திய ஆயுதப்படைகள் அனைத்தும் நாடு முழுவதும் மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளன.  இந்த பிரச்சாரத்தின் கீழ் தற்போது 16 லட்சத்து 31 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சோஹ்ராவில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்த திரு அமித்ஷா, பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ராமகிருஹ்ணா  மடத்தின் நிர்வாகிகளையும் திரு அமித்ஷா சந்தித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக