வெள்ளி, 23 ஜூலை, 2021

இந்திய கடற்படை கப்பலான தபார் (INS TABAR ) நல்லெண்ணப் பயணமாக ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கை அடைந்தது


 ஐந்து நாள்  நல்லெண்ணப் பயணமாகவும், ரஷ்ய கடற்படையின் 325-வது கடற்படை நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகவும் இந்திய கடற்படை கப்பலான தபார் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கை 2021 ஜூலை 22 அன்று சென்றடைந்தது. இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயான வலுவான ஒத்துழைப்பு மற்றும் நெருக்கமான ராணுவ கூட்டு உள்ளிட்ட சிறப்பான இருதரப்பு உறவுகளை இந்தியா மற்றும் ரஷ்யா பல தசாப்தங்களாக பகிர்ந்து வருகின்றன.

தல்வார் பிரிவை சேர்ந்த கப்பலான ஐஎன்எஸ் தபார், மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடற்படையின் மேற்கு தளத்தின் கீழ் இயங்குகிறது. இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் இக்கப்பல் கட்டமைக்கப்பட்டு, 2004 ஏப்ரலில் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மகேஷ் மங்கிபுடி தலைமையில் 300 பணியாளர்களுடன் இக்கப்பல் இயங்கி வருகிறது. பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் மற்றும் சென்சார்களை தன்னகத்தே கொண்டு, இந்திய கடற்படையின் வலிமைமிக்க கப்பல்களில் ஒன்றாக ஐஎன்எஸ் தபார் விளங்குகிறது.

2021 ஜூலை 25 அன்று ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் ஆய்வு செய்யவுள்ள ரஷ்ய கடற்படை நாள் அணிவகுப்பின் போது, ஐஎன்எஸ் தபார் பங்கேற்கும். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மாநகர அணிவகுப்பில் இந்திய கடற்படை இசைக்குழுவினர் கலந்து கொள்வார்கள்.

மேலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பயணத்தின் போது, ரஷ்ய கடற்படையுடனான பல்வேறு இருதரப்பு தொழில்முறை உரையாடல்களிலும் ஐஎன்எஸ் தபார் குழுவினர் பங்கேற்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக