புதன், 21 ஜூலை, 2021

தாய்மொழியில் பொறியியல் பாடவகுப்புகள் : மாநில மொழிகளில் பாட வகுப்புகளை நடத்துவது என்ற முடிவை நான் பாராட்டுகிறேன்.- எம். வெங்கையா நாயுடு


 தாய்மொழியில் பொறியியல் பாடவகுப்புகள் - சரியான திசையில் ஒரு நடவடிக்கை

புதிய கல்வி ஆண்டிலிருந்து எட்டு மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், தெரிவுசெய்யப்பட்ட பிரிவுகளில் மாநில மொழிகளில் பாட வகுப்புகளை நடத்துவது என்ற முடிவை நான் பாராட்டுகிறேன்;  வரவேற்கிறேன். புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்றாற்போல் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு,  கன்னடம், குஜராத்தி, மலையாளம், பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி,  ஒடியா என 11 மாநில மொழிகளில் பி.டெக் (இளநிலை தொழில்நுட்பம்) வகுப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அனுமதி அளித்திருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இது சரியான திசையிலான ஒரு நடவடிக்கை என நான் உறுதியாக நம்புகிறேன். 

கூடுதலான கல்வி நிறுவனங்கள், குறிப்பாகத்  தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சார்ந்த பாட வகுப்புகளைக் கொண்டுள்ளவை, அவற்றை மாநில மொழிகளில் நடத்த முன்வரவேண்டும்.  இத்தகைய முன்முயற்சி மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

மொழி, நமது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாம் அறிவோம். நமது தாய்மொழி அல்லது நமது தேசிய மொழியில்  தொப்புள்கொடி உறவை நாம் பகிர்ந்து கொள்வதால், நமக்கு அது மிகவும் தனித்துவம் வாய்ந்தது. இந்த மொழிதான் நமது இளம் வயதிலிருந்து நாம் பழக்கப்படுத்திக்கொண்டது. இது சக்திமிக்க, உணர்வுபூர்வமான பிணைப்பைக் கொண்டிருக்கிறது. வளமான மொழியியலுக்கும் பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கும் நன்கறியப்படும் இந்தியா,  நூற்றுக்கணக்கான மொழிகளுக்கும், ஆயிரக் கணக்கான வட்டார மொழிகளுக்கும் தாயகமாகும்.  பன்முகப்பட்ட நமது மொழியியல்,  நமது வளமான பண்பாட்டுப்  பாரம்பரியத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

அண்மைக்கால மொழிக்  கணக்கெடுப்பின்படி நாம் 19,500   மொழிகளை அல்லது வட்டார மொழிகளைக்  கொண்டிருக்கிறோம்.  உண்மையில், நமது நாட்டில் 10,000 அல்லது அதற்கும் அதிகமானோர் பேசுகின்ற 121 மொழிகள் உள்ளன. நமது உயிரோட்டமுள்ள பாரம்பரியத்தின் இந்தப் பொக்கிஷம் நமது வளமான, பெருமையான கடந்த காலத்தின் சுவடுகளாக இன்னமும் இருப்பதில் வியப்பில்லை.

"தங்களின் தாய் மொழியை அறியாமல், அவர்கள் செய்திருக்கிற, இப்போதும்கூட தொடர்கிற, ஆங்கிலம் கற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டால்  மொழியியல் வறுமை மறைந்துவிடும்" என்று மகாத்மா காந்தி கூறினார்.

ஐ.நா. தகவலின்படி ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும், தனது ஒட்டுமொத்தப் பண்பாடு மற்றும் அறிவுசார்ந்த பாரம்பரியத்தையும் உடன்கொண்டு ஒரு மொழி அழிகிறது. மேலும், உலகில் பேசப்படும் மொழிகளாக  மதிப்பிடப்பட்டுள்ள 6,000  மொழிகளில், குறைந்தபட்சம் 43% அழியும்நிலையில் உள்ளன.  பன்முகப்பட்ட மொழியியலுக்காக அறியப்படும் இந்தியா,  அழியும்நிலையில் 196 மொழிகளைக் கொண்டுள்ளது.  இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிப்பது. எனவே நமது மொழிகளைப் பாதுகாக்க நாம் கூட்டான முயற்சிகளை மேற்கொள்வதும் நடவடிக்கைகள் எடுப்பதும் தவிர்க்க முடியாததாகும். நமது நாட்டின்  மொழிகளைப் பாதுகாப்பதற்கும் தாய்மொழியில் கற்றலை  மேம்படுத்துவதற்கும் பன்முக  அணுகுமுறையைச்  செயல்படுத்துவது அவசியமாகும்.

நமது மொழிகளைப் பாதுகாக்கவும் அழியாமல்  இருக்கச் செய்வதற்கும் நாம் பல நடவடிக்கைகள் எடுத்திருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்புவரை,  விரும்பத்தக்க வகையில் எட்டாம்  வகுப்புவரையும் அதற்குப் பின்னரும் தாய்மொழியில்/ உள்ளூர் மொழியில்/ மாநில மொழியில்/ புழங்கு மொழியில் சாத்தியமான இடத்திலெல்லாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் புதிய கல்விக் கொள்கை ஊக்கப்படுத்துகிறது.  கல்வியின் தொடக்க நிலையில் தாய்மொழியில் கற்பிப்பது குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும், அவர்களின் படைப்பாக்கத்தை விரிவுபடுத்தும் என்பது உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிறுவப்பட்டுள்ளது. எனவே, மாநில மொழிகளில் பயிற்றுவிப்பது குழந்தைகளுக்குப் பலவழிகளில்  பயன்தருவதோடு ஒளிமயமான எதிர்காலத்திற்கு அவர்களை வழிநடத்தும்.

கல்வி அமைச்சகத்தின் மற்றொரு பாராட்டத்தக்க முன்முயற்சியான,  நமது மொழிகளை அழியாமல் பாதுகாக்க, அபாயத்தில் உள்ள மொழிகளைப் பாதுகாப்பதற்கும் அழியவிடாமல் செய்வதற்குமான திட்டம் (எஸ்பிபிஇஎல்), முக்கியப்  பங்கு வகிக்கிறது. அபாயத்திற்கு உள்ளாகியிருக்கும் அல்லது வெகுவிரைவில் அபாயத்திற்கு உள்ளாகக் கூடும் என்ற மொழிகள் இந்தத் திட்டத்தின்கீழ் ஆவணப்படுத்தப்படுகின்றன;  பாதுகாக்கப்படுகின்றன. நமது எதிர்காலத் தலைமுறைகளுக்காக இந்த இணைப்பின் இழையை வலுப்படுத்தி நமது அழகிய மொழிகளைப் பாதுகாப்பதில் மக்களின் பங்கேற்பு முக்கியமானது. ஒவ்வொரு மொழியும் மாண்புகள்,  பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள், செயல்முறைகள், கதைகள்,  நடத்தை மற்றும் விதிமுறைகள் எனும் பண்பாட்டுக்  களஞ்சியமாகவும், பழமொழிகள்,  சொலவடைகள், நூற்பாக்கள்,  மரபுத்தொடர்கள் நிறைந்ததாகவும் இருப்பதை நினைவுகூர்வது முக்கியமானதாகும்.

மக்கள் தங்களின் தாய்மொழியில் தகவல் பரிமாற்றம் செய்யத்  தயங்குவதை நான் பலமுறை கவனித்துள்ளேன். நமது தாய்மொழியில் பேசுவதை நாம் பெருமையாகக் கருதவேண்டும்,  வீட்டில் மட்டுமல்ல சாத்தியமான இடத்திலெல்லாம் நமது தாய்மொழியில் தகவல் பரிமாற்றம் செய்யவேண்டும் என்பது எனது ஆர்வம் மிகுந்த  நம்பிக்கையாகும். மிகப் பரவலாகப் பயன்படுத்தும்போது மட்டுமே மொழிகள் செழிக்கும்;  வாழும்.

தாய் மொழியில் பயில்வதை நான் வலியுறுத்தும்போது மற்ற மொழிகளைக் கற்க வேண்டிய அவசியமில்லை என்று எந்த வகையிலும் யோசனை கூறமாட்டேன். உண்மையில் ஒருவர் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு மொழிகளைக் கற்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன். ஆனால், எது தேவையென்றால் தாய்மொழியில் வலுவான அடித்தளமாகும்.

ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது அதிகரிக்கும் இன்றைய உலகில், பல்வேறு மொழிகளில் திறமை பெறுவது ஒருவருக்கு அறிவுக்கூர்மையைத்  தருகிறது. மேலும் ஒவ்வொரு மொழியை நாம் கற்கும்போதும்  மற்றொரு பண்பாட்டுடன் நமது தொடர்பை ஆழப்படுத்துகிறோம்.  எனவே கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களும் குறைந்தபட்சம் ஒரு தேசிய மொழியையும் ஒரு சர்வதேச மொழியையும் குழந்தைகள் கற்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

தாய்மொழியில் கற்றல் ஒருவரின் உள்வாங்கும் திறனை, புரிந்து கொள்ளும் உணர்வு நிலையை  விரிவுபடுத்தும் என்பதை கவனிக்க வேண்டும். மற்றொரு மொழியில் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்ள ஒருவர் முதலில் அந்த மொழியில் கற்று திறன்பெற வேண்டியுள்ளது.  இதற்கு நிறைய முயற்சி தேவைப்படுகிறது. ஆனால்,  ஒருவரின் தாய்மொழியில் கற்கும்போது இந்த நிலைமை இல்லை. அனைத்துத் தொழிற்பயிற்சி மற்றும் பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற தொழில்முறை பாடவகுப்புகள் தாய்மொழியில் கற்பிக்கப்படும் அந்த நாளைக்  காண்பது எனது விருப்பமாகும்.  இந்தத் திசையில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சி பாராட்டத்தக்கது.

நமது உயர்கல்வியில் தாய்மொழியின் பயன்பாடு என்பது நமது மொழிகள் அழியாமல் பாதுகாப்பதையும், பரவலாக்குவதையும் நோக்கிய முக்கியமானதொரு நடவடிக்கையாகும். நாம் ஒருங்கிணைந்து நமது மொழிகளை வளப்படுத்தி பலப்படுத்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக