புதன், 21 ஜூலை, 2021

இஸ்ரேல் நாட்டு உளவுச்செயலியை பயன்படுத்தி இந்திய அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 இஸ்ரேல் நாட்டு உளவுச்செயலியை பயன்படுத்தி இந்திய அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதா? 

உண்மை நிலையைக் கண்டறிய முழு விசாரணைக்கு உத்தரவிடுக! 

 - டாக்டர் K. கிருஷ்ணசாமி

‘பிகாசஸ்’ என்ற உளவு செயலியைப் பயன்படுத்தி அதிநவீன ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் ஊடுருவி இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்றோரின் கைப்பேசிகளை ஒட்டுக்கேட்ட விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பொதுவாக நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுபவர்கள் என்று கருதப்படக்கூடிய சிலரின்  நடமாட்டங்களையும், கைப்பேசி உள்ளிட்ட சாதனங்களையும் உளவுத்துறையினர் கண்காணிப்பது பல்லாண்டு காலமாக இருக்கக்கூடிய செயல்கள்தான். ஆனால் இப்போது வெளியாகியுள்ள  ’பிகாசஸ்’ என்ற உளவு செயலி விவகாரம் என்பது முற்றிலும் வேறானது.

’பிகாசஸ்’ என்பது அண்மைக்கால அதிநவீன தொழிற்நுட்பம் கொண்ட உளவு செயலியாகும். ’பிகாசஸ்’ என்ற பெயர் பண்டைய கால கிரேக்க இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்  பறக்கும் மாய குதிரையின் பெயராகும். அந்த உளவு செயலி (Spyware) இஸ்ரேலில் உள்ள ‘NSO’ என்ற குழுமத்தால் 2018 இல் முதன் முதலில் ஒரு மனித உரிமை ஆர்வலருக்கு எதிராக பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டது. 2020-ல் அதன் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு ஒட்டுக்கேட்கும் அல்லது உளவு பார்க்கும் செயலியாக முழுவடிவம் பெற்றது. அந்த உளவு செயலியை ஐபோன் மற்றும்  ஆண்ட்ராய்டு போன்ற எந்த நவீன  கைப்பேசியிலும் அதனுடைய உரிமையாளருக்கு இம்மியளவும் கூட தெரியாத வகையில் பதிவேற்றம் செய்துவிட முடியும்.

இது கைப்பேசியின் உரையாடல்களை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், உளவு பார்க்கப்படும் கைப்பேசியிலிருந்து அனுப்பப்படும் குறுஞ் செய்திகள், வாட்ஸ்-அப் செய்திகள், மின்னஞ்சல்கள், ஸ்கைப், டிவிட்டர்,  இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் அனைத்து நடவடிக்கைகளையும் அப்படியே முழுமையாக ஈர்த்து (extract) எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்பி விடும். அதேபோல கைப்பேசியின்  கேமராக்களையும் தானாகவே இயக்கி ’GPS’ மூலமாக உரிமையாளரின் இருப்பிடம், செல்லும் இடம், அவர்களின் அறைகூட்ட நடவடிக்கைகள்  என அனைத்தையும் நேரடி ஒளிபரப்பைப் போல பரிமாற்றம் செய்யும் திறன் கொண்டது. இதிலிருந்தே உளவு பார்க்கும் இந்த பிகாசஸ் செயலி-Spyware எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் விளங்கும்.

கடந்த காலங்களில் ஒட்டுக் கேட்கப்படும் நபர்களின் உரையாடல்களை ’Dark Room’ என்றழைக்கப்படும் இருட்டு அறையிலிருந்து இடைமறித்து அவற்றை ’ஜிப்’களில் (Zip) பதிவு செய்து கொண்டிருந்தார்கள். அவை வெறும் உரையாடல்களை மட்டுமே பதிவு செய்யும் திறன் கொண்டவை. ஆனால் இந்த அதிநவீன ’பிகாசஸ்’ உளவு செயலி மூலம் அரசியல் தலைவர்களின் அனைத்து நடவடிக்கைகளைத் துல்லியமாகவும், நேரடியாகவும் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டே  கண்காணித்து விட முடியும்.

இது போன்ற நவீன செயலிகளை பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவது என்பது முற்றிலும் வேறானது. ஆனால் அரசியல் ரீதியாக செயல்படும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், கூட்டணி கட்சிகள் மற்றும் நட்பு கட்சித்  தலைவர்களின் கைப்பேசிகளையும் உளவு பார்க்க பயன்படுத்துவது என்பது பேராபத்தானது. அதிலும் குறிப்பாக அந்நிய நாட்டுச் செயலியால் உளவு பார்க்கப்படுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது மட்டுமல்ல; மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயலுமாகும். இந்த செயலி 2021 ஆம் ஆண்டு UAE மற்றும் பல வளைகுடா நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு அந்நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், செயற்பாட்டார்களை கண்காணிக்கப் பயன்படுத்தியதால் பெரும் சர்ச்சை கிளம்பியதையும் உலகறியும்.

வேறு ஒரு நாட்டின் குடிமகனோ அல்லது அந்த நாடோ இன்னொரு நாட்டின் எல்லைகளை எவ்விதத்திலும் சட்டவிரோதமாக தாண்டக் கூடாது என்பது விதி. அப்படி எல்லைகளைத் தாண்டினால் அதற்கு ’ஆக்கிரமிப்பு’ என்று பெயர். இஸ்ரேலிய நாட்டின் அதிகாரப்பூர்வ ‘NSO’ என்ற நிறுவனத்தால் இந்தியத் தலைவர்களை உளவு பார்க்க அனுமதி அளிக்கப்பட்டதை  ஆக்கிரமிப்பாகவும், சட்ட விரோதமாகவும் பார்க்க வேண்டும்.

1972-ல் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிக்சன் அவர்கள் மீது தேர்தல் நேரத்தில் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் யுக்திகளை எல்லாம் ’டேப்’ செய்து ஒட்டுக் கேட்ட ’Watergate ஊழல்’ வெளிவந்த பிறகு, அவர் தண்டிக்கப்பட்டு தனது பதவியை இழந்துவிட்டார்.

நம்மைப் போன்று அரசியலில் வளர்ந்து வரும் கட்சிகளையும், மாற்றுக் கருத்துக் கொண்ட எதிர் கட்சிகளையும்  தேர்தல் காலகட்டங்களில் இதுபோன்ற உளவு பார்த்தல் நடவடிக்கைகள் மூலமாக முன்கூட்டியே முடக்கி போடும் செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட கடைசி நிமிடம் வரை நாம் வேறு எந்த அரசியல் நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் நம்மை முடக்கிப் போட்டதும்  கூட பிகாசஸை ஒத்த உளவு பார்க்கும் தவறான நடவடிக்கைகளால் நிகழ்ந்திருக்குமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களுடைய கைப்பேசியை உளவு பார்ப்பது என்பதும், அவர்களுடைய அரசியல் மற்றும் கருத்துரிமை சார்ந்த செயல்பாடுகளை முடக்கிப் போடுவது என்பதும் வேறு வேறல்ல.  இது போன்று இந்திய அரசியல் தலைவர்கள் அந்நிய செயலிகளால் உளவு பார்ப்பதை அனுமதிப்பது தவறான  முன்னுதாரணம் ஆகிவிடும். ஏனெனில் பிகாசஸ் செயலி இந்தியாவில் உளவுபார்க்கப்பட்ட விஷயத்தைக் கண்டறிந்து ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்படவில்லையெனில் இது போன்ற ஓர் தொழிற்நுட்பங்களை யார்  வேண்டுமானாலும் தயாரித்து இந்திய இறையாண்மைக்கு எதிராக எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடும்.

அன்று கிரேக்கத்தில் பறக்கும் தேவதையாகப் போற்றப்பட்ட ’பிகாசஸ்’ இன்று  இஸ்ரேலின் ‘உளவு பிசாசாக’ பெயர் மாறி விட்ட இந்த செயலியை இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்த  ஒருபோதும் அனுமதிக்கூடாது. மேலும்  இச்செயலியை விலை கொடுத்து வாங்கியது யார்? அதைப் பயன்படுத்த அனுமதித்தது யார்?  என்பன வெட்ட வெளிச்சமாக்கப்பட வேண்டும்; இது குறித்து முழுமையான விசாரணைக்கும் இந்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பதே இந்திய மக்கள் அனைவரது விருப்பமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக