செவ்வாய், 27 ஜூலை, 2021

மருந்துகளுக்கான உற்பத்திச் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ஆறு வருடங்களில் ரூ 1,96,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புள்ளது.- திரு மன்சுக் மாண்டவியா


 நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் படி, 2020 மே 29 அன்று மொத்தம் 8532 மருந்து நிறுவனங்கள் நாடு முழுவது இயங்கி வந்தன. இவற்றில் தமிழ்நாட்டில் 514 நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இந்திய உர நிறுவனத்தின் டால்ச்சர் ஆலைக்கு புத்தாக்கம் தர இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ், கெயில் இந்தியா லிமிடெட், கோல் இந்தியா லிமிடெட், ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான டால்ச்சர் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட், 2015 நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது. நேரடி வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 510 மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 4500 ஆகும்.

அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலைகளில் உரம் வழங்கப்படுகிறது. பி&கே உரங்களின் மானிய விகிதம் 2020-21-ம் வருடத்தில் 22.49 சதவீதம் முதல் 28.97 சதவீதம் வரை இருந்தது.

45 கிலோ பை ஒன்றுக்கு ரூ 242 எனும் அதிகபட்ச விற்பனை விலையில் உரம் விற்கப்படுகிறது (வேப்பம்பூச்சு மற்றும் வரிகள் தவிர்த்து). ஊட்டச்சத்துச் சார்ந்த மானியக் கொள்கை, புதிய முதலீட்டுக் கொள்கை, புதிய உரக் கொள்கை ஆகியவற்றை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

பாரசெட்டமால், டெக்சாமெத்தாசோன், மெத்தைல் பிரெட்னிசோலோன், ஐவிஐஜி, எனோக்சாபாரின், புடேசோனைட், ஹெபாரின் மற்றும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட 355 மருந்துகள் மற்றும் 882 மருத்துவ முறைகளுக்கு அதிகபட்ச விலைகளை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ளது.

ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான விலையையும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் கட்டுப்படுத்தியுள்ளது. ஆக்சிமீட்டர், குளூக்கோமீட்டர், ரத்த அழுத்த மானி, நெபுலைசர், டிஜிட்டல் தெர்மோமீட்டர் உள்ளிட்டவற்றின் விலைகளும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. 2021 ஜூலை 13 அன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றைக் கையாள்வதற்காக போதிய மருந்துகளைக் கைவசம் வைத்திருக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2021 ஜூலை 13 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடிதம் எழுதியது.

தேசிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டம் அறிவியல் மற்றும் நோயியல் ஆதாரங்களின் அடிப்படையிலும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றியும் செயல்படுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பயனிகளுக்கு 2021 டிசம்பருக்குள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருந்துகளுக்கான உற்பத்திச் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ஆறு வருடங்களில் ரூ 1,96,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 20,000 நேரடி வேலைவாய்ப்புகளும், 80,000 மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காப்புரிமைப் பெற்ற மருந்துகள் மற்றும் இதர அதிக மதிப்புடைய மருந்துகளுக்கு விற்பனையில் 10 சதவீதம் எனும் அளவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக