செவ்வாய், 20 ஜூலை, 2021

அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் - ஒன்றிய அரசு செயல்படாதது ஏன்? - கி.வீரமணி

 அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் - ஒன்றிய அரசு செயல்படாதது ஏன்?

கூட்டு  முயற்சியை திராவிடர் கழகம் மேற்கொள்ளத் தவறாது - கி.வீரமணி

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தாமலும் - ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை செயல்படுத்தாமலும் இருப்பது, ஒன்றிய அரசின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என்பதைச் சுட்டிக்காட்டி தி.மு.க. சார்பில் (திராவிடர் கழகம் உள்பட தமிழ்நாட்டின் அத்துணைக் கட்சிகளும் அ.தி.மு.க. உள்பட வழக்குகள் போட்டு  சென்ற ஆண்டு பெற்ற தீர்ப்பு அது!) போடப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேற்று (19.7.2021) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஏன் இதுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்று நீதிபதிகள் ஒன்றிய அரசைப் பார்த்து  நியாயமான - சட்ட ரீதியான கேள்வியை எழுப்பியுள்ளனர்.

உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒன்றிய அரசு

‘‘சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைப்படி மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்கப்படும்‘’ என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உத்தரவாதம் தந்துள்ளது.

அப்போது 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழகத்தில் செயல்பட்டு வரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு அந்த உத்தரவாதத்தை தற்போது நிறைவேற்றவில்லை.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கு முதலில் தீர்வுக்கு வரவிருக்கிறது. அதன் பின்னர் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு செய்வோம் என்ற எண்ணத்தில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.

 ஆனால், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில், அகில இந்தியப் படிப்பில் - அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முறைக்கு எவ்வகையிலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்குத் தடையாகக் குறுக்கே நிற்கப் போவதில்லை.

இந்த வழக்கில் ஒன்றிய அரசின் செயல்பாடு, உயர்நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமலும், அதை அவமதிக்கும்படியாகவும் உள்ளது.

ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் காலக்கெடு

எனவே, ‘‘மருத்துவப் படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையை 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துவது குறித்த ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்துக்குள் தெரியப்படுத்தவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டு முறையில் மட்டும்தான் தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை நடத்தப்படும். விசாரணையை வருகிற 26 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கிறோம்‘’ என்று தெரிவித்துள்ளனர்!

‘நீட்’ நுழைவுத் தேர்வுபற்றிய விளக்க சட்டத்தில்கூட அந்தந்த மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அப்படியே பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது - ஏனோ காற்றில் பறக்கவிடப்பட்டது!

ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அத்துணை கட்சிகளும் தொடுத்த வழக்குகள் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருக்க, சாக்கு போக்கு சொல்லுவதற்காகவே இப்படி சலோனி குமாரி வழக்கைக் காட்டியுள்ளனர். உச்சநீதிமன்றமே இந்த வழக்குக்கும்- தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டுக்கும் (69 சதவிகித அடிப்படையில்) எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெளிவாக கூறிவிட்ட பிறகும்கூட, செயல்படவில்லைஎன்பதும், அதன் சட்டத்தையே ஒன்றிய அரசு மதிக்காது, செயல்படுத்தாத கொடுமை (நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?) - அலட்சியம் - சமூகநீதிக்கு எதிரான ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ. அரசின்  பிடிவாதப் போக்கையே காட்டுகிறது!

வெற்றிகரமான தீர்ப்புகளை - ஆணைகளைப் பெற்றும், கைக்கெட்டியது தமிழ்நாட்டு மக்களுக்கு வாய்க்கெட்டாதது  என்பது அசல் சமூக அநீதி அல்லவா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் நேற்றைய ஆணைக்குப் பிறகாவது வழிக்கு வந்தால் - தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்படாமல் வழங்கப்படல் வேண்டும்!

மற்றொரு கூட்டு முயற்சியை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்!

முன்பு ஒன்று சேர்ந்த அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஓரணியில் திரண்டு, ஒன்றுபட்டு குரல் எழுப்ப, திராவிடர் கழகம் மற்றொரு கூட்டு முயற்சியைத் துவக்கவும் தவறாது!

சமூகநீதியை வைத்து கண்ணாமூச்சி விளையாட்டை டில்லி, ஒன்றிய அரசு செய்வது, ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு என்ற நெருப்போடு விளையாடும் விபரீத விளையாட்டே என்பதைப் புரிந்துகொள்வீர்!

தி.மு.க. தலைமைக்கும், வாதாடிய வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி.,  அவர்களுக்கும் நமது நன்றியும், பாராட்டும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக