வெள்ளி, 28 ஜூன், 2019

"நீட்"டுக்கு விலக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் என்ன செய்யவேண்டும்? - கி.வீரமணி

"நீட்"டுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கக்கோரும் தீர்மானத்தை, கூடவிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றவேண்டும்
ஆசிரியர் கி.வீரமணி
(திராவிடர் கழகம்)


நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்று சென்றுள்ள தி.மு.க.வின் உறுப்பினர்கள் குறிப்பாக தி.மு.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும், மாநிலங்களவையின் தி.மு.க. கட்சித் தலைவர் திருச்சி சிவா அவர்களும் மற்றும் எம்.பி.,க்களும், தமிழ்நாட்டிற்கு நீட்' தேர்விலிருந்து விலக்கு
அளிக்கப்படவேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றப்பட்ட விதிவிலக்குக் கோரும் இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமலேயே உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியும், நீட்' தேர்வுக் கொடுமையால் பலியான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவக் கண்மணிகளைப்பற்றியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பரிதாபம்பற்றியும் படம் பிடித்துக் காட்டியுள்ளனர்!

சி.பி.எஸ்.இ. முறையில் தேர்வு -  யாருக்கு இலாபம்?

மாநிலத்தில் உள்ள ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) தற்போது கல்வி இருக்கின்றது (மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் பழையபடி திரும்பவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகின்றது) மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்து 500 மதிப்பெண்ணுக்கு 490 மதிப்பெண் வாங்கியும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சமுக மாணவ, மாணவிகளுக்கு நீட்' தேர்வு உதவவில்லை; காரணம், கேள்விகள் அத்துணையும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி கேட்கப்பட்டால், எப்படி பதில் அளிக்க அவர்களால் முடியும்?

கார்ப்பரேட் கம்பெனிகள் பல லட்சங்கள்கூட அல்ல; கோடிக்கணக்கில் பணம் பண்ணும் பண்ணையமாக, தனியார் நீட்' தேர்வு மய்யங்கள் வணிக மயமான கல்விக் கொள்ளையகங்களாக மாறிய நிலை உள்ளது!

அதுபோல, புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது அப்படியே மாநிலத்திலிருக்கும் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வியை, கபளீகரம் செய்து, முழுக்க முழுக்க மத்திய அரசிடமே சேர்த்து, ஒற்றைக் கல்வி முறையாக மாற்றப்பட்டுவிடும் - ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, அங்கேயும் நீட்' போன்ற ஆக்டோபஸ் நுழைவுத் தேர்வின் கொடுங்கரங்கள் நீளுகின்றன!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் என்ன செய்யவேண்டும்?

நாளை (28 ஆம் தேதி) கூடி, ஏறத்தாழ ஜூலை மாதம்வரை நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில்,

ஆளுங்கட்சி முன்வந்து ஏற்கெனவே நிறை வேற்றப்பட்டு கிடப்பில் 2 ஆண்டுகளுக்குமேல் உள்ள நீட்'டிலிருந்து விலக்குக் கோரும் இரு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு தீர்மானமும், புதிய தேசியக் கல்விக் கொள்கை நாட்டின் பன்முக கலாச்சாரம், மாநில உரிமைகள்பறிப்பு, ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு போன்றவை 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு விரோதமாக மீண்டும் மும்மொழிக் கொள்கைத் திணிப்பும் செய்வதால், மத்திய அரசு அதனை அமல்படுத்துவதை நிறுத்தி, மறு ஆய்வு செய்ய முன்வரவேண்டும் என்பதையும் அத்தீர்மானத் திலோ அல்லது தனித் தீர்மானமாகவோ தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி என்ற வேறு பாடின்றி ஒருமித்த கருத்தோடு, ஒருமித்த குரலோடு நிறைவேற்றி, மத்திய அரசுக்குப் பிரதமருக்கு அனுப்ப வேண்டும்.

இதில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி பேதம் பார்க்காமல், நீட்' தேர்வுக்கு விலக்குக் கோரும் முந்தைய மசோதா நிறைவேற்றம் போலவே, ஒரு மனதாக நிறை வேற்றப்படுதல் அவசியம், அவசரம்!

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிடுக!

நீட்' தேர்வில் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த மாணவிகள் தற்கொலை தொடரக்கூடாது. உள்ள உறுதிகொண்டு நம்பிக்கையோடு எதிர்காலத்தை அவர் கள் எதிர்கொண்டு முன்னேற முயற்சிக்கும் மனோபாவம் உள்ளவர்களாக அவர்களை ஆசிரியர்களும், பெற் றோர்களும் ஆக்கவேண்டும்.

பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பங்கள் எல்லாம் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் ஆனபடியால், முதலமைச்சர் முந்தைய மாணவிகளின் குடும்பத்திற்கு உதவியதுபோல, உதவி செய்து, மனிதாபிமானத்தையும் காட்டவேண்டும் என்று முதலமைச்சரையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம்.

உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோ ருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, சமுகநீதிக்கும், சட்டத்திற்கும் எதிரானதாகும். இதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கவேண்டும். அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்திலேயே அறிவிக்கவேண்டும். (பொருளா தார அடிப்படையை எம்.ஜி.ஆர். கைவிட்டார்; ஜெய லலிதா அரசும் ஏற்கவில்லை).

எதிர்க்கட்சிகளை அழைத்து முடிவு செய்க!

இம்மாதிரி, மக்களைப் பாதிக்கும் பொதுப் பிரச்சி னைகளில், எதிர்க்கட்சிகளை அழைத்து - அணைத்து ஒத்துழைப்பைப் பெற்று, ஆக்கபூர்வமாக ஆளுங்கட்சி நடந்துகொள்வது அவசியம். குடிநீர்ப் பஞ்சம் - பற்றாக்குறை - தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில், இந்த அணுகுமுறை மிகமிக தேவையானதாகும் என்று அரசியலுக்கு அப்பாற்பட்ட சமுதாயக் கண்ணோட்டமே மேலோங்கி நிற்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக