வியாழன், 20 ஜூன், 2019

National Investigation Agency வின் சிறுபான்மை விரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது! - SDPI

பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு துணைபோகும் என்.ஐ.ஏ.வின் சிறுபான்மை விரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது! 
தெஹ்லான் பாகவி 
(SDPI)


தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., தான் உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக பாஜகவின் வெறுப்பரசியலுக்கு துணைபோகும் வகையிலும், பாஜகவின் அரசியல் அஜெண்டாக்களை செயல்படுத்தும் விதத்திலும் சிறுபான்மை விரோதபோக்குடன் நடவடிக்கையை அமைத்துக்கொள்வதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி  பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதக் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கென தனிச் சட்டம் ஒன்றின் மூலம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) உருவாக்கப்பட்டது. நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் அந்த மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே பயங்கரவாதக் குற்றம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு இந்த தேசிய புலனாய்வு முகமை என்னும் அமைப்புக்கு அச்சட்டம் வகை செய்கிறது. ஆனால், ஆட்சி மாறும் தோறும் ஆட்சியாளர்களின் பிரச்சாரங்களுக்கு தகுந்தவாறு தனது விசாரணையை மாற்றி அமைத்துக்கொள்ளும் சிபிஐ போல, என்.ஐ.ஏ.வும் ஆளும் அரசின் கூண்டுக்கிளியாக மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அதன் பாரபட்ச நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளன.
தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தீவிரவாத வழக்குகளை விசாரித்து அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அப்பாவிகளை தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் வேலைகளில் ஈடுபடுகிறதோ என்ற சந்தேகத்தை அதன் சமீபத்திய செயல்பாடுகள் ஏற்படுத்தி வருகின்றன.
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகு, அரசின் கூண்டுக் கிளியாக செயல்பட்டு வரும் என்.ஐ.ஏ., குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சங்பரிவார் தீவிரவாதிகளை வழக்குகளில் இருந்து விடுவிப்பதில் மும்முரமாக உள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் என்.ஐ.ஏ.வின் கள்ள மவுனம் மூலம் ஒவ்வொருவராக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான அகாரிகள் மேற்கொண்ட குண்டுவெடிப்பு வழக்குகளை ஏற்று விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. மத்தியில் ஆட்சி மாறியதும் அந்த வழக்குகளை நீர்த்து போவச் செய்ததோடு, வழக்கில் தொடர்புடைய சங்பரிவார் பயங்கரவாதிகளை வழக்கிலிருந்து விடுவித்தும் வருகின்றது.
மாலேகான் வழக்கில் மென்மையான போக்கை கையாளுமாறு என்.ஐ.ஏ. அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ரோகினி சாலியன் தெரிவித்தது என்.ஐ.ஏ.வின் தரத்தை வெளிப்படுத்துகிறது. இன்னும் சில வழக்குகளை முடிப்பதற்காக அப்பாவிகளிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பேரம் பேசியதும் அதன் மோசமான தரத்திற்கு மற்றொரு சான்றாக திகழ்கிறது.
சங்பரிவார் அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் போலி லவ் ஜிஹாத் பிரச்சாரத்தை பூதாகரமாக்கியது, பல்வேறு தனிநபர் பிரச்சினைகளின் காரணமாக கொலை செய்யப்பட்ட சங்பரிவார் நிர்வாகிகளின் கொலை வழக்கை பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அந்த வழக்கை விசாரித்துவரும் மாநில காவல்துறையிடமிருந்து பறிப்பது, தனிநபர் கொலை வழக்கை பயங்கரவாத குற்றமாக பூதாகரமாக்கி, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதிகளில், முஸ்லிம் இளைஞர்களின் வீடுகளில் இரவு நேரங்களில் சோதனைகள் நடத்துவது, பெற்றோர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு அச்சுறுத்துவது, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் இளைஞர்களை நாட்டிற்கு ஆபத்தானவர்கள் போன்று சித்தரிப்பது, வீட்டில் உள்ளவர்களின் மொபைல் போன்களை, பென் டிரைவ்களை, லேப் டாப்களை, நோட்டீஸ்களை பயங்கரவாத ஆயுதமாக்கி அறிக்கை வெளியிடுவது போன்ற வேலைகளை, பா.ஜ.க. அரசு என்.ஐ.ஏ.வைக் கொண்டு செய்து வருகிறது. இது சிறுபான்மை சமூக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்தது தொடங்கி என்.ஐ.ஏ.வின் செயல்பாடுகள் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டது. குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சங்பரிவார் பயங்கரவாதிகளை விடுவிப்பதும் மறுபுறம் அப்பாவி சிறுபான்மை சமூக இளைஞர்களை குறிவைப்பதும் என பாஜக அரசின் கூண்டுக்கிளியாகவே என்.ஐ.ஏ. மாறிவிட்டது. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் என்.ஐ.ஏவின் தலையீடு அதிகமாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 14 வழக்குகளை என்.ஐ.ஏ. நடத்தி வருகின்றது. அதில் இரண்டு வழக்குகளை தவிர 12 வழக்குகள் ஐ.எஸ். தொடர்பு வழக்கு. இதுதொடர்பாக சென்னை, கோவை, சேலம், அதிராமபட்டினம், கீழக்கரை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் 107 ரைடுகளை 2016 முதல் தமிழகத்தில் என்.ஐ.ஏ. மேற்கொண்டுள்ளது. இந்த வழக்குகளுடன் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அமைப்பை தொடர்புபடுத்தி தமிழகத்தை பதட்டத்திற்குள் வைக்க வேண்டும் என்ற பாஜகவின் அரசியல் அஜெண்டாவை என்.ஐ.ஏ. செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு எதிராகவும் தேசிய புலனாய்வு முகமையை பாஜக அரசு ஏவி வருகின்றது.
தமிழகத்தில் அரசியல் ரீதியாக பலம்பெற முடியாத பாஜக, தனது ஏவல் படையாக வைத்திருக்கும் என்.ஐ.ஏ.வைக் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் தானே ஆபாத்பாந்தவன் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சித்து வருகின்றது என்பதை நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றோம்.
இந்த விஷயத்தில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய பல விஷயங்களை நாம் முன்வைக்கின்றோம். கடந்த ஐந்து ஆண்டு காலம் பா.ஜ.க. ஆட்சியில் என்.ஐ.ஏ.வால் தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? அவர்கள் மீது என்ன குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது? அந்த வழக்குகள் மீது போடப்பட்டுள்ள தற்போதைய நிலவரங்கள் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். ஆனால், அப்பாவிகளை யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களை விசாரணைக் கைதியாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறது என்.ஐ.ஏ.. அதே சமயம் பொதுசமூகத்திடம் இஸ்லாமிய இளைஞர்கள் குறித்த அச்சத்தையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது.
கடந்த மாதம் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாயின.
சோதனையில் செல்போன்கள், சிம்கார்டுகள், மெமரிகார்டுகள் உள்ளிட்ட பொருட்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துண்டறிக்கையும், பாப்புலர் ஃப்ரண்டின் துண்டறிக்கையும் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய அமைப்புகளையும், கட்சிகளையும், முஸ்லிம் சமூகத்தையும் அச்சப்படுத்தி அவர்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே இந்த அறிக்கையை நாங்கள் பார்க்கின்றோம்.
இதுபோன்ற அறிக்கைகள் மூலம் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் திட்டப்படி, எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து மக்களிடம் தவறான எண்ணத்தை விதைப்பதே என்.ஐ.ஏ.வின் நோக்கமாக இருக்கிறதே தவிர பயங்கரவாத செயலை, பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் எண்ணம் துளியும் இல்லை என்பது தெளிவாகின்றது.
தங்களது சோதனையில் ஒரு கட்சியின் அல்லது ஒரு அமைப்பின் துண்டறிக்கை கைப்பற்றப்பட்டதை அறிக்கையாக வெளியிடும் என்.ஐ.ஏ.வின் உண்மையான நோக்கம் என்ன? யாருக்காக உழைக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.
ஒரு புலனாய்வு அமைப்பின் விசாரணை நடவடிக்கை என்பது தக்க ஆதாரங்களை திரட்டி மிகரகசியமாக அந்த ஆதாரங்களை கொண்டு குற்றச்செயலை தடுப்பதும், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து குற்றம்புரிந்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதுமே ஆகும். ஆனால், தமிழகத்தில் நடைபெறும் என்.ஐ.ஏ. சோதனை என்பது ஊடக விளம்பரத்துடன் தமிழகம் முழுவதும் பதட்டத்தை உருவாக்கி, ஒரு குறிப்பிட்ட அமைப்பை, கட்சியை பற்றி பொதுசமூகத்திடம் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மாதந்தோறும் மக்கள் நலனை முன்னிறுத்தியும், மக்கள் பிரச்சினைகளுக்காகவும், கட்சியின் பணிகள் குறித்தும், சுற்றுச்சூழல், மதுஒழிப்பு, சுகாதார விழிப்புணர்வு குறித்தும், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்கள் தொடர்ந்து வெளிடப்பட்டு பொதுமக்களிடம் பகிரங்கமாகவே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அந்த துண்டறிக்கைகள் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இல்லங்களில் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ளன. எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிடும் துண்டறிக்கைகள் உளவுத்துறை அதிகாரிகளிடமும் உள்ளன. அப்படி இருக்கும்போது தங்கள் சோதனையில் கிடைத்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துண்டறிக்கையை ஒரு பெரிய ஆயுதமாக கிடைத்ததை போன்று என்.ஐ.ஏ. அறிக்கை வெளியிடுவது திட்டமிட்ட வெறுப்பு அரசியல் நடவடிக்கையின் ஒருபகுதியே ஆகும். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துண்டறிக்கையை பயங்கரவாத ஆயுதமாக சித்தரிக்கும் என்.ஐ.ஏ. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் இருக்கும் துண்டறிக்கையை கைப்பற்றி அறிக்கை வெளியிடுமா?
எல்லாவற்றுக்கும் மேலாக என்.ஐ.ஏ. குறிப்பிட்டது போன்று துண்டறிக்கைகள் அங்கு கைப்பற்றப்பட்டதா அல்லது திட்டமிட்டு பதட்டத்தை ஏற்படுத்த மக்களிடையே அச்சத்தை உருவாக்க அதுபோன்ற அறிக்கை வெளியிடப்பட்டதா என தெரியவில்லை. ஏனெனில் கடந்தகால என்.ஐ.ஏ.வின் செயல்பாடுகள் அப்படி சந்தேகம் கொள்ள வைக்கிறது. 
எஸ்.டி.பி.ஐ. கட்சி என்பது மக்கள் சார்ந்த ஒரு அரசியல் கட்சி. மக்களின் போராட்டங்கள் சார்ந்த அரசியல் கட்சி. ஒரு மதத்துடனோ, ஒரு ஜாதியினோடோ அல்லது ஒரு இனத்தோடோ சுருக்கமுடியாத பல லட்சக்கணக்கானவர்களை உறுப்பினர்களாக கொண்ட ஒரு அரசியல் பேரியக்கம். தேர்தலை எதிர்கொண்டு மக்களின் நலனை முன்னிறுத்தி எல்லாதரப்பு மக்களையும் உள்வாங்கி செயல்படும் கட்சியாகும். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள் தொடர்பான, கட்சிப் பணிகள் தொடர்பான, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்பான துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில் ஏதோ ஒரு பயங்கரவாத சம்பவம் தொடர்பான சந்தேக அடிப்படையில் மேற்கொண்ட சோதனைகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துண்டறிக்கை கிடைத்ததை கொண்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியை தவறாக சித்தரிக்கும் என்.ஐ.ஏ.வின் நடவடிக்கை தவறானது, ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும். எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு எதிராக ஆளும் கட்சியின் அரசியல் அஜெண்டாக்களை என்.ஐ.ஏ. செயல்படுத்தும் பட்சத்தில் என்.ஐ.ஏவுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் சட்டரீதியான நடவடிக்கைகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜெயலலிதா அவர்களின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மாநில அரசாங்கங்களின் உரிமைகளில் கைவைத்து உருவாக்கப்பட்ட என்.ஐ.ஏ., அதன் நோக்கத்தில் இருந்து திசைமாறி, மத்திய பாஜக அரசாங்கத்தின் ஏவல் படையாக சிறுபான்மை விரோத போக்குடன் செயல்படுவதை கண்டு மவுனமாக இருந்துவருகின்றது.
என்.ஐ.ஏ.வின் நடவடிக்கையானது உண்மையான அதன் உருவாக்கப்பட்ட நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அமையும் பட்சத்தில் அதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கப்போவதில்லை. ஆனால் அது பாஜகவின் அரசியல் அஜெண்டாக்களை செயல்படுத்தும் விதத்தில் நடவடிக்கையை அமைத்துக்கொள்வதாலேயே என்.ஐ.ஏ.வின் செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற வெறுப்பரசியல் நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. நிறுத்திக்கொள்ள வேண்டும். எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இதுபோன்ற வெறுப்பு அரசியல் நடவடிக்கைகளை கண்டு மிரளாமல், சட்டதின் துணைக்கொண்டு எதிர்கொள்ளும் வலிமை எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக