புதன், 26 ஜூன், 2019

பல்கலைக்கழகங்களில் இந்தியை திணிக்க அரசின் முரட்டுத்தனமான முயற்சி - CPIM(TAMILNADU)

பல்கலைக்கழகங்களில் இந்தியை திணிக்க
அரசின் முரட்டுத்தனமான முயற்சி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தேசிய வரைவு கல்விக் கொள்கையில் இந்தியை கட்டாயமாக்க முயற்சித்து கடுமையான எதிர்வினைகளுக்கு பின்பு அந்த ஆலோசனையை திரும்பப்பெற்றுள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் நிர்ப்பந்தித்து வருகிறது. 28.06.2019 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை வகுப்புகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கும் பொருள் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கிறது. இதே போன்ற ஆணையை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு அனுப்பியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்தியை கட்டாயமாக திணிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு தனது துறைகள், நிறுவனங்கள், கல்வி அமைப்புக்கள் மூலம் செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறது. சமீபத்தில் தென்னக ரயில்வேயில் இத்தகைய முயற்சியை செய்து உடனடியாக பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செய்யப்படும் இந்த முயற்சி கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழுவின், பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

அனைத்து ஜனநாயக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் இந்த எதேச்சதிகார முயற்சிக்கு எதிராக குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக