சனி, 22 ஜூன், 2019

அ.தி.மு.க. அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது - தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தீர்மானம்


உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (21.6.2019) காலை 10.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் திரு. சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், இன்னாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் மாநிலத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :-

தீர்மானம் : 1
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. ராகுல்காந்தி அவர்கள் தொடர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

அரசியல் தீர்மானம் : 2
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. தமிழகத்தில் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆட்சிகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு அலை வீசியதை தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்தின. அதேநேரத்தில், தேசிய அளவில் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராக பொறுப்பேற்கிற வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இத்தகைய வெற்றியை நரேந்திர மோடி எப்படி பெற்றார் என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமது வகுப்புவாத பிரச்சாரத்தின் மூலம் வடமாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மீது பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றன. 
தேர்தல் தொடங்கிய காலத்தில் இருந்தே தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன. தோதல் முடிவுகளுக்கு பிறகு வெளிவந்த தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை உறுதி செய்கின்றன. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளிவந்த தகவல்களில் கடுமையான முரண்பாடுகள் உள்ளன. ஏறத்தாழ 371 மக்களவை தொகுதிகளில் மொத்தம் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் கடுமையான வித்தியாசம் இருந்ததை காண முடிந்தது. இதை கணக்கிடுகிற போது மொத்தம் 54.65 லட்சம் வாக்குகளில் வித்தியாசம் உள்ளன. இத்தகைய வித்தியாசங்கள் இன்றைக்கு தேர்தல் ஆணையத்தின் மீது இருந்த நம்பிக்கையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன.
எனவே, தேர்தல் தீர்ப்பை ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்கிற அதேநேரத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவற்றின் மீது இருந்த நம்பகத்தன்மை குலைந்திருப்பது மிகப்பெரிய கவலையைத் தருகிறது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழந்திருப்பது குறித்து இக்கூட்டம் தமது ஆழ்ந்த கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியளவில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டாலும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை முன்பை விட மிகத் தீவிரமாக நடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் இந்திய சித்தாந்தத்தை நிலைநாட்டுகிற வகையில் மத அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜ.க.வை எதிர்த்து நமது போராட்டம் தொடரும் என்பதை இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 3

இந்தியாவில் மீண்டும் நரேந்திர மோடி ஆட்சி அமைந்தவுடன் முதல் பணியாக மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரி ரங்கன் குழு புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வருகிற ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக ஏவி விடப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும். இதன்மூலம் பொதுப் பட்டியலில் இருந்த கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிற முயற்சியாக இதைக் கருத வேண்டியிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் என்பது இந்தியா போன்ற பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள் உள்ள நாட்டில் எப்படி சாத்தியம் என்பதை பா.ஜ.க. அரசு நினைத்துப் பார்த்ததாக தெரியவில்லை. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தலைமை என்கிற நோக்கத்தில் பா.ஜ.க. செயல்படுவதன் அடிப்படையில் தான் இந்த புதிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. 
பா.ஜ.க.வின் புதிய கல்விக் கொள்கை இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்கிற முயற்சியாக இருப்பதால் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்புக்குப் பிறகு மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று திருத்தம் வெளியிட்டிருப்பது மறைமுகமாக இந்தியை திணிக்கிற முயற்சியாகவே இக்கூட்டம் கருதுகிறது. இந்தி பேசாத மக்களுக்கு பிரதமர் நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக இந்தியை திணிக்கிற முயற்சியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிற வகையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 

தீர்மானம் : 4

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி காரணமாக கடும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினையை தொலைநோக்குப் பார்வையோடு எதிர்கொள்வதற்கு எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் முன்வைத்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இப்பிரச்சினையை தீர்க்க எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக அரசுக்கு நீர் மேலாண்மை திட்டமே இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கடி கொடுத்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
சென்னை மாநகரில் 75 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர் ஆதாரங்களை தவிர, கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. குடிநீர் ஏரிகள் மேம்பாட்டில் அக்கறை செலுத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களைத் தவிர, 21 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. கடந்த மூன்றாண்டுகளாக வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியிருக்கிற மக்களை காப்பாற்றுவதற்காக எந்த முயற்சியையும் அ.தி.மு.க. அரசு எடுக்கவில்லை. ஆனால், ரூபாய் 15 ஆயிரத்து 838 கோடி குடிநீர் திட்டப் பணிகளுக்காக செலவழிக்கப்பட்டதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கூறுகிறார். இந்த நிதியின் மூலம் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டப் பணிகளினால் குடிநீர் பஞ்சம் ஏன் தீர்க்கப்படவில்லை என்பது குறித்து எந்த விளக்கமும் ஆட்சியாளர்களிடமிருந்து பெற முடியவில்லை. 
தமிழக குடிநீர் பஞ்சத்தை பொறுத்தவரை அதை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. இதற்கு பொறுப்பேற்று குறைந்தபட்சம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனடியாக பதவி விலக வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக