வியாழன், 14 மே, 2020

கொவிட்-19 பரவாமல் கட்டுப்படுத்துவதில், இளைஞர்கள் காவலர்களுடன் இணைந்து சேவை புரிந்து ஊரடங்கை உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளனர்.


கொவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் மிக முக்கியமான மூன்றாவது கட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய தருணம் இது. கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர்களின் சேவையை தமிழக காவல்துறை பயன்படுத்தி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில், நாட்டு நலப்பணித்திட்ட (என்எஸ்எஸ்) மாணவர்கள், தேசிய மாணவர் படை (என்சிசி)யினர் திறம்பட பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் , புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தனி நபர் இடைவெளியைப் பராமரிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறைக்கு உதவுமாறு தன்னார்வலர்களை திருச்சி சரகக் காவல்துறைத் தலைவர் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கல்லூரி அதிகாரிகள் மற்றும் பெற்றோரின் அனுமதியுடன் மாணவர்கள் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.  

கொவிட்-19 விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர்கள் தேவை என லால்குடி காவல் துறையினர் கேட்டுக்கொண்டதாக, லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் டாக்டர் தமிழரசு கூறினார். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் 15 மாணவத் தன்னார்வலர்கள், 40 நாட்களாக ஒரு மண்டபத்தில் தங்கியிருந்து ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ளூர் காவல்துறையினருடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் கடமையாற்றுவதற்கான வழிகாட்டுதலை காவல் துறையினர் அளித்து வருகின்றனர். நாட்டு நலப்பணித்திட்ட நடவடிக்கைகள் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த தேசிய கடமைக்கான அழைப்பு முற்றிலும் மாறுபட்டது என்றும், இந்த நெருக்கடியான சூழலில் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


லால்குடி கல்லூரியின் என்எஸ்எஸ் தன்னார்வலர் நவீன், லால்குடி காவல் துறையினரின் ஒத்துழைப்புடன், கொவிட்-19 விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வப் பணியில் கடந்த 40 நாட்களாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில், காவலர்களுடன் வாகனச் சோதனையில் அவர்கள் ஈடுபட்டது, உண்மையிலேயே சிறந்த கற்றல் அனுபவமாக அவர்களுக்கு அமைந்தது. ஊரடங்கு விதிமுறைகளைப் புறக்கணித்து, வெளியில் வரவேண்டாம் என அவர்கள் வழங்கிய அறிவுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதைச் சரியான கோணத்தில் அணுகிய தன்னார்வலர்கள் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் லால்குடி சிறப்பான இடத்தைப் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அனைத்து சிரமங்களையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களுக்கு தன்னலமற்ற சேவையை அளித்துவரும் காவலர்களின் ஈடுபாட்டு உணர்வு தன்னார்வலர்களைப் பெரிதும் கவர்ந்தது.

முகக்கவசங்களை அணியுமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கியதாக மற்றொரு என்எஸ்எஸ் தன்னார்வலர் குருமூர்த்தி கூறினார். எங்கெல்லாம் கூட்டம் காணப்பட்டதோ, அவ்விடங்களில் மக்களைப் பிரித்து பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்க அறிவுறுத்தியதாக அவர் கூறினார். ரேசன் கடைகளுக்குச் சென்ற அவர்கள் அங்கு வரிசையில் நின்ற மக்களிடம் பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்குமாறு வலியுறுத்தினர். மேலும், அரசின் உத்தரவை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மூடி, தொற்று பரவாமல் தடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

எந்த ஒரு சமுதாயத்திலும், ஆக்கபூர்வமான ஆற்றலின் சின்னமாகத் திகழும் இளைஞர்களின் சமூகப் பொறுப்புடைமை அவர்களிடமிருந்து பிரிக்க முடியாததாகும். கொடிய உயிர்க்கொல்லி நோயான கொவிட்-19 பரவாமல் கட்டுப்படுத்துவதில், இளைஞர்கள் காவலர்களுடன் இணைந்து சேவை புரிந்து ஊரடங்கை உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக