புதன், 13 மே, 2020

வந்தே பாரத் மிஷன் விமானங்கள் மஸ்கட் மற்றும் சிக்காகோவில் இருந்து சென்னை வந்தடைந்தன.


வந்தே பாரத் மிஷன் விமானங்கள் மஸ்கட் மற்றும் சிக்காகோவில் இருந்து சென்னை வந்தடைந்தன. பயணிகள் சிரமம் இல்லாமல் சுங்க அனுமதி பெற்று வெளியேற சென்னை சுங்கத்துறையினர் உதவி.

வந்தே பாரத் மிஷனின் ஒரு செயல்பாடாக மஸ்கட் மற்றும் சிக்காகோவில் இருந்து சென்னை சர்வதே விமான நிலையம் வந்து சேர்ந்த விமானங்களில் இருந்த பயணிகள் சிரமம் இல்லாமல் சுங்க அனுமதி பெற்று வெளியேறுவதற்கு சென்னை சுங்கத்துறையினர் உதவி செய்தனர். 

ஓமனின் மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX350 விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மே மாதம் 12ஆம் தேதி செவ்வாய்கிழமை இரவு 09:54 மணிக்கு வந்தடைந்தது. இந்த விமானத்தில் 126 ஆண்கள், 54 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் 183 பயணிகள் வந்தனர்.  இந்த விமானம் வந்தே பாரத் மிஷனின் கீழ் சென்னை வந்தடைந்த ஐந்தாவது விமானம் ஆகும். 

அமெரிக்காவின் சிக்காகோவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா AI1671  நிவாரண விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தை (புதன்கிழமை) காலை 05:55 மணிக்கு வந்தடைந்தது.  இந்த விமானத்தில் 78 ஆண்கள், 62 பெண்கள் மற்றும் 1 குழந்தை என மொத்தம் 141 பயணிகள் வந்தனர். இந்த விமானம் வந்தே பாரத் மிஷனின் கீழ் சென்னை வந்தடைந்த ஆறாவது விமானம் ஆகும். 


இந்த இரண்டு விமானங்களிலும் வந்த பயணிகள் அனைவரும் சுங்க அனுமதியை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் பெறுவதற்கு சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் உதவி புரிந்தனர்.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, இந்தியாவில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் அனைத்து சர்வதேச விமானங்களும் மார்ச் 22ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தன.  கோவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக இந்திய அரசால் வந்தே பாரத் மிஷன் என்ற திட்டம் தொடங்கப்பட்டு மே 7 முதல் மே 13 வரை விமானங்கள் இயக்கப்படுகின்றன.  இந்த மிஷனின் கீழ் சென்னைக்கு 11 விமானங்கள் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக