பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு!
தொடர்ந்து தள்ளிப்போட வேண்டிய அவசியம் இல்லை !!
- டாக்டர் K.கிருஷ்ணசாமி
ஜூன் 1-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடந்திருக்க வேண்டிய தேர்வு இது.
ஆனால், முழு முடக்கத்தின் காரணமாக குறிப்பிட்ட தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் ஏறக்குறைய 9 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் இப்பொதுத்தேர்வை சந்திக்கிறார்கள். இந்த தேர்வு மிக மிக முக்கியமானதாகும்; ஏனெனில், இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையிலேயே அவர்களுடைய எதிர்காலம் அமையும்.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்விக்கு சேரக்கூடிய மாணவர்கள் +1ல் தங்களுடைய விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மிகமிக முக்கியமானதாகும். கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடந்து, விடைத்தாள்களும் திருத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும், மதிப்பெண் பட்டியலும் இந்நேரத்தில் தயாராக இருந்திருக்கும்.
மே மாதம் இறுதிக்குள்ளாக +1 சேர்க்கைகள் நடைபெற்று, ஜூன் முதல் தேதியிலிருந்து வகுப்புகள் துவங்கியிருக்கும். ஆனால், அனைத்தும் தள்ளிப் போனதால் இப்பொதுதேர்வும் தள்ளிப்போயிற்று. எனினும் தொடர்ந்து இதுபோன்ற பொதுத்தேர்வு தள்ளிபோவது மாணவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல. எனவே, ஜூன் மாதத்தில் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!
மாணவர்கள் தயார் நிலையில் இருப்பது குறித்தும், கரோனா பாதிப்பினால் அவர்கள் மனநிலை குறித்தும் சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கடந்த இரண்டு மாத காலமாக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து ஆன்லைன் பயிற்சி கொடுத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. இந்த இரண்டு மாதகால அவகாசம் தங்களை மேலும் தயார் படுத்திக்கொள்ள உதவிகரமாக இருந்திருக்கும். எனவே, அவர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் இந்த தேர்வை சந்திக்கலாம். இந்த இரண்டு மாதகால அவகாசத்தை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி இருந்தால் மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கூடும். ஒவ்வொரு மாணவரது மதிப்பெண்களும் அதிகமாக வாய்ப்பு உண்டு.
பெற்றோர்களும் இனியும் தேர்வு தள்ளிப்போவதை விரும்பமாட்டார்கள். ஜூன் மாதத்திலேயே தேர்வு நடத்தினால், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் +1, +2 வகுப்புகளை தொடங்கினால் கூட, பிற விடுமுறைகளை குறைத்து மார்ச்-2021 உள்ளாக எல்லா பாடங்களையும் நடத்திவிடலாம். எனவே +1 மற்றும் +2 மாணவர்கள் தங்களுக்கு அதிகமாக பாதிப்புகள் இல்லாத வகையில் மார்ச்-2021 பொதுத்தேர்வுகளை எளிதாக சந்தித்து விடலாம். இன்னும் கரோனா தாக்குதல் ஆங்காங்கே இருக்கின்ற காரணத்தினால் தேர்வு மையங்களில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மிகவும் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். ஒரு அறையில் 40 மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பதை 20 ஆக குறைத்துக் கொள்ளலாம். வேறு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.
கரோனா பாதிப்பால் இரண்டு மாதகால முழுமுடக்கம் மாணவர்களுக்கு மனோரீதியான பாதிப்பை உண்டாக்கி இருக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே, மாணவர்கள் அந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடும் பொருட்டும், பாடங்கள் குறித்த சந்தேகங்களை ஆசிரியர்களுடன் நேரடியாக கேட்டு நிவர்த்தி செய்யும் பொருட்டும் ஒரு வார காலத்திற்கு மீள் வகுப்புகளை (Orientation/Review Classes) நடத்திவிட்டு, ஜூன் 10-ஆம் தேதிக்கு மேல் பொதுத் தேர்வை நடத்துவது கூட தவறில்லை.
ஜூன் 1-ஆம் தேதியே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டால், எந்தவிதத்திலும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. ஒவ்வொரு கிராமத்திற்கும், அதேபோல நகர்புறத்தில் அவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கும் அரசு பேருந்துகளை இயக்கி மாணவர்களை அழைத்து வர அரசு உறுதி செய்திட வேண்டும். ஒட்டுமொத்தத்தில் தீர்க்கமான முடிவு, சரியான திட்டமிடல் மற்றும் அதை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை முழு நிறைவுடன் செய்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதியோ அல்லது மீள் வகுப்புகள் நடத்தி, மாணவர்களின் அச்சத்தை போக்கி, ஜூன் 10-ஆம் தேதிக்கு பின்னரோ கண்டிப்பாக தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தொடர்ந்து தள்ளிவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக