வியாழன், 4 ஜூன், 2020

ஊரகத் தொழில்களுக்கு புத்துயிரூட்ட கொவிட்-19 உதவித் தொகுப்பு. திருச்சி மாவட்டத்தில் 4457 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.9.92 கோடி கடன் வழங்கப்பட உள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. அதிலும், தினக்கூலியை நம்பியுள்ள கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. வேலை இல்லாதவர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஏற்கனவே 42 கோடி மக்களுக்கு ரூ.53,248 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுய சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண, உதவி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கூடுதலாக , மாநில அரசுகளும், கிராமப்புறத் தொழில்களுக்குப் புத்துயிரூட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வருகின்றன.

தமிழகத்தில், உலகவங்கி உதவியுடன், தமிழக கிராமப்புற மாற்றத் திட்டத்தின் கீழ், கொவிட்-19 உதவித்தொகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 300 கோடி திட்டம் 1.39 லட்சம் பேருக்கு பலனளிக்கும். இந்தச் சிறப்புத் திட்டம், மாநிலத்தின் 30 மாவட்டங்களைச் சேர்ந்த 120 வட்டாரங்களின் 3994 கிராமங்களில் செயல்படுத்தப்படும். ரூ.159.76 கோடி மூலதன உதவித் திட்டம், 31952 குடும்பங்களுக்கு உதவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புற மாற்றத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், கொவிட்-19 உதவித்தொகுப்பு, திருச்சி மாவட்டம் முசிறி வட்டாரத்தைச் சேர்ந்த முசிறி, அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம் உள்ளிட்ட 135 கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 9.92 கோடி 4457 பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக கிராமப்புற மாற்றத்திட்டத்தின்  நிர்வாக அதிகாரி திரு. ஆரோன் ஜோசுவா ரூஸ்வெல்ட் கூறினார். 

கொவிட்-19 உதவித்தொகுப்பின் முக்கிய நோக்கம், ஊரடங்கால் தொழில் நடத்த மூலதனம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கு உதவுவதுடன், வேலைவாய்ப்பை ஊரடங்குக்கு முந்தைய நிலைக்கு கொண்டு வருவதுமாகும். பண்ணை மற்றும் பண்ணை சாரா தொழில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 50000 வரை குறுகிய காலக்கடன் வழங்கப்படும். முக்கியமாக, சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படும், நானோ, குறுந்தொழில்களுக்கு மூலதன உதவியாக இது வழங்கப்படும். தொழில்களுக்கு, தேவைகளின் அடிப்படையில் இந்தத்தொகை வழங்கப்படும். தொழில்முனைவோர் செயல்படுத்தப்படும் வட்டாரத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும். 6 மாதத்துக்குள் தொழில் தொடங்கவேண்டும். இந்த உதவியைப் பெறுவதற்கு அவர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கவேண்டும். சுய உதவிக்குழுக்கள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பில் சேர்ந்திருப்பதுடன், இ-மதி தளத்தின் படியான கடவை ( சுய உதவிக்குழு கோட்) தாக்கல் செய்யவேண்டும்.

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து பெரும்பாலான மக்கள் இங்கு திரும்பி வந்து விட்டதாக திருச்சியைச் சேர்ந்த திரு. பிரபாகரன் கூறினார். அவர்கள் வேலை இல்லாததால், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். அவர்களுக்கு வருமானம் கிடைக்க வேண்டுமென்றால், புதிய தொழிலைத் தொடங்குவதற்கு அவர்களுக்கு அரசின் உதவி தேவையாகும். சுய உதவிக் குழுக்களுக்கும் தொழில் தொடங்க நிதிஉதவி தேவைப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளும் சுய உதவிக்குழுக்களுக்கு நிதிஉதவி வழங்க கோரப்படுகின்றன. கொவிட்-19 முடக்கம் ஊரகப்பகுதிகளை மிக மோசமாகப் பாதித்துள்ளதுடன், கிராம மக்கள் தங்கள் பொருளாதார நிலையைச் சரி செய்ய உதவியை எதிர்பார்க்கின்றனர்.

தேநீர்க்கடைகள் போன்ற சிறுதொழில்கள் நீண்டகாலமாக முடங்கியிருப்பதால், அவர்கள் இயல்பான வணிகத்தைத் தொடங்குவதற்கு முன் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. தற்போது மிகவும் தேவையாக உள்ள முகக்கவசங்கள் தயாரிக்கும் வாய்ப்பை சில சுய உதவிக்குழுக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. திருச்சி மணிகண்டத்தைச் சேர்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர் திருமதி ஜே. சுமித்ரா, கிராமத்தொழில்களுக்குக் கடன் வழங்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். பொது முடக்கக் காலத்தில், நிலையான வருமானம் இல்லாத சுய உதவிக்குழு உறுப்பினர்கள் புதிய நொழில்களைத் தொடங்க இது மிகவும் பயனளிக்கும். கடனுதவியை முறையாக முதலீடு செய்தால் தான் ,அது குறுகிய காலத்தில் பயனளிக்கும் என்று திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருமதி கீதா கூறினார். பலசரக்கு சில்லரை விற்பனைக் கடை, காய்கறி சில்லரை விற்பனைக் கடை, தேநீர்க்கடைகள், சிறிய திண்பண்ட விற்பனைக் கடைகள், பேக்கரிகள், ஆடு, கோழி இறைச்சி விற்பனைக் கடைகள்,  சில்லரை மீன் விற்பனைக் கடைகள், தள்ளுவண்டி விற்பனையாளர்கள், ஆடு, கோழி, பன்றி, மீன் ஆகியவற்றைக் கொள்முதல் செய்யும் வணிகர்கள், தையற்கலைஞர்கள் போன்ற தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. தொழில் தொடங்குபவர், சுய உதவிக்குழுவிடம் அதிகபட்சம் 39 மாதத் தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும். 3 மாத தள்ளுபடி காலமும் இதில் அடங்கும். சுய உதவிக்குழுக்கள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பில் இரண்டு மாதம் கழித்து அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதன் மூலம் மொத்தக் கடன் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் 41 மாதங்களாகும். 

இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் தான் உள்ளது என்று மகாத்மா காந்தி கூறினார். கொவிட்-19 ஊரடங்கு காரணமாக பெரிய நகரங்களில் வேலை இழந்த கிராமவாசிகள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில், ஊரகப்பகுதிகளில் புதிய தொழில்களைத் தொடங்க நிதிஉதவி மூலம் அரசு உதவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக